சமாளிக்கவேண்டிய சவாலாகவுள்ள காணிகள் விடுவிப்பு விவகாரம்! – நிருபா குணசேகரலிங்கம்

எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இராணுவத்தினர் வசம் உள்ள பொது மக்களுக்குச் சொந்தமான காணிகள்; மீளக் கையளிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். இதனை உத்தரவாதம் அளித்ததைப் போன்று நிறைவேற்றுவேன் என அவர் தெரிவித்துள்ளார். இவ்விடயம் இழுத்தடிப்பின்றி நிறைவேற்றப்பட்டால், அது யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை ஓரளவு இயல்பு வாழ்க்கைக்கு இட்டுச் செல்லும் விடயமாகும். 
இந் நிலையில், அரசாங்கம் மும்முனைச் சவால்களை எதிர்கொள்கின்றது. அதாவது, ஒன்று வடக்கில் இராணுவத்தினரிடம் இருந்து காணிகள் விடுவிக்கப்படுவது பற்றி தெற்கில் உள்ள இனவாதிகள் கிளப்பும் அரசியல் விசமப்பிரசாரங்களுக்கு அது முகங்கொடுக்க வேண்டியுள்ளது. அடுத்தது, ஆட்சி மாற்றத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்த்து நிற்கும் முக்கிய விடயங்களில் ஒன்றான மீள்குடியோற்றத்தினையும் தாமதமின்றி நிறைவேற்றவேண்டியுள்ளது. இதனை போர் முடிவடைந்து 7 ஆண்டுகளின் பின்னராவது பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாய அழுத்தம் அரசாங்கத்துக்கு உள்ளது. இதற்கும் அடுத்ததாக உள்நாட்டு நிலை பற்றி சர்வதேசத்தின் பொறுப்புச் சொல்லுதலுக்கு பதிலளிக்க வேண்டும் என்ற சாவாலினை அரசாங்கம் எதிர்கொள்கின்றது.
போரின் பின்பாக இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை மக்களிடம் மீளவும் கையளிக்க வேண்டும் என்ற சர்வதேசத்தின் நிபந்தனைக்கு அரசாங்கம் கட்டுப்படவேண்டியுள்ளது. எதிர்வரும் யூன் மாதம் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கையின் உள்ளகப் பொறிமுறை விடயம் இடம்பெறவுள்ளது. இதில் பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் உள்ளமை பற்றி முக்கிய கவனம் செலுத்தப்படும்.  இதனை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட போது பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் கியூகோ ஸ்வையார் இலங்கைத் தரப்புக்களுக்குத் தெரிவித்திருந்தார். 
அரசாங்கம் பொறுப்புக் கூறும் கடப்பாட்டில் ஜெனிவா உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும். வடக்கினைக் கட்டியெழுப்புவதற்கும் முதலீடுகளைச் செய்வதற்கும் பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் ஆர்வமாக உள்ளனர். எனவே இராணுவம் நிலைகொண்டுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கும் செயற்பாடு துரிதப்படுத்தப்பட வேண்டும் என இலங்கைக்கு கியோகோ ஸ்வையார் அறிவுறுத்திவிட்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறானவற்றின் அடிப்படையில் இன்றைய அரசாங்கம் நாட்டின் நிலைமைகளில் சில சீராக்கங்களைச் செய்ய முனைகின்றது. இந்தவகையில், கடந்த அரச நத்தார் தின நிகழ்விற்கு யாழ்ப்பாணம் வந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதிக்குள் காணிகள் விடுவிக்கப்படும் என பகிரங்கமாக உத்தரவாதம் வழங்கியிருந்தார். இது மனித உரிமைப் பேரவையில் இலங்கையை காப்பாற்றும் நோக்குடடையதாகப் பார்க்கப்படத் தக்கது.
நிலைமைகள் இவ்வாறு காணப்பட, தென்னிலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்யும் தரப்புக்கள், அரசாங்கம் தேசிய பாதுகாப்பிற்கு விரோதமான வகையில் காணிகளை தமிழர்களிடத்தில் மீளக் கையளிக்கின்றது என சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரம் செய்கின்றன. இராணுவத்தினர் வசம் இருக்கும் காணிகளை விடுவிப்பது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது எனக் கூறுகின்றனர். மேலும், சர்வதேசத்திற்கும் தமிழ் மக்களுக்கும் அரசாங்கம் அடங்கிவிட்டது என சிங்கள இனவாதிகள் பிரசாரம் செய்கின்றனர்.  இதனை வெளிப்படையாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “உங்களுக்குச் சொந்தமான காணிகளை உங்களிடம் கொடுக்கும் போது சிலர் இனவாதம் பேசுகின்றனர்” என தெல்லிப்பழை நடேஸ்வரா கல்லூரியை இராணுவத்தினரிடம் இருந்து விடுவிக்கும் நிகழ்வில் உரையாற்றும்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
உயர்பாதுகாப்பு வலய காணிகளை விடுவிக்கக் கோரி கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் சில பாதிக்கப்பட்டோர்; உயர் நீதிமன்றத்தில் வழக்கினைக் கூட தாக்கல் செய்திருந்தனர். அதன் தீர்ப்புக்களில் மீள்குடியேற்றத்திற்கு சாதகமான விடயங்கள் காணப்பட்ட போதும் அதனை அன்றைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை. நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பின்பும் கூட மீள்குடியேற்றத்திற்காக மக்கள் போராட வேண்டியவர்களாகவே இருந்தனர். வலி வடக்கிலும் வலி கிழக்கிலும் மொத்தமாக 24 கிராம சேவகர் பிரிவுகளை இராணுவம் தமது வலயமாக வைத்திருந்தது. இதனுள் 16 கிராம சேவகர் பிரிவுகள் முழுமையாகவும் 8 கிராம சேவகர் பிரிவுகள் பகுதியளவிலும் இராணுவ ஆதிக்கத்திற்குள் இருந்தன. இவ்வாறாக 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் இராணுவ ஆதிக்கத்திற்குள் காணப்பட்டது. இந் நிலப்பரப்பிற்கு உரிய 6 ஆயிரத்து 496 குடும்பங்களைச் சேர்ந்த 23 ஆயிரத்து 514 பேர் உள்ளூரில் முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் மீளக்குடியேற முடியாதவர்களாக தஞ்சமடைந்திருந்தனர்.
போரின் பின்னர் இலங்கையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்காக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது பரிந்துரைகளில், இராணுவத்தினரிடம் உள்ள காணிகளை மக்களிடம் கையளிக்க வலியுறுத்தியிருந்தது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் 9.142 ஆவது பரிந்துரையானது,  பாதுகாப்புத் தேவைகளுக்காகப் பெறப்பட்ட காணிகள் பாதுகாப்புத் தேவைகளையும் கருத்தில் கொண்டு மிக விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என பரிந்துரைத்தது. இதுபோன்ற பரிந்துரைகள் மகிந்த ஆட்சியில் வெளிவந்தபோதும் நடைமுறைப்படுத்தல்கள் நடைபெறவில்லை. மாறாக இராணுவ மயமாக்கமே உத்வேகத்துடன் நடைபெற்றது.
எனவே நல்லிணக்கத்திற்கான பரிந்துரையாக கடந்த அரசாங்கத்தின் காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு மக்களின் காணிகளை அவர்களிடம் மீள கையளிக்கப்பட வேண்டும் என பரிந்துரைத்திருக்கையில் அச் சமயம் அதிகாரத்தில் இருந்தோர் காணிகள் விடுவிக்கப்படுவது பற்றி தற்போது இனவாத கருத்துப் பகிர்வுகளை மேற்கொள்வது நியாயமன்று. தேசிய பாதுகாப்பிற்காக இராணுவத்தினருக்கு மக்களின் நிலங்கள் தேவை என்போர் தேசிய பாதுகாப்பு மக்களின் அடிப்படை உரிமைக்கும் பொருளாதார உரிமைகளுக்கும் குந்தகமாக அமையக்கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய உலக கருத்தியலில் தேசிய பாதுகாப்பு என்ற எண்ணக்கருவை இராணுவப் பாதுகாப்பு மாத்திரம் எனக் கருதுவது முதிர்சியற்ற போக்காகும். 
வலிகாமம் வடக்குப் பகுதியில் தற்போதும் கூட மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட காணிகளில் இராணுவத்தினர் விவசாய முயற்சிகளில் ஈடுபட்டு நீதிக்குப் புறம்பாக நடந்துகொள்கின்றனர். இதனால் தமது நிலம் விடுவிக்கப்படாமை குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் மக்கள், பொருளாதார வளமே தமது நிலம் விடுவிக்கப்படாமைக்கான உள்நோக்கம் எனத்தெரிவிக்கின்றனர். மக்களின் இக் கருத்தில் நியாயம் உள்ளது. இவ்வாறான துர்ப்பாக்கியத்தினை எதிர்கொண்டு வந்த மக்களுக்கு காணிகள் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் விடுவிக்கப்படும் என்ற உத்தரவாதம் அவர்களது நீதியை நிலைநிறுத்தும் விடயமாகும்.  
ஆட்சி மாற்றத்தின் பின்னர் காணிகள் விடுவிப்பில் பல விடயங்கள் நடந்துள்ளன என்பது மறுப்பதற்கு இல்லை. யாழ்ப்பாண மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட காணிகளை விடுவிக்கும் முகமாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனினால் அமைச்சரவை பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. இப் பத்திரத்திரத்திற்கு, நாட்டில் சமாதானத்தினை ஏற்படுத்தும் நோக்கில் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் எனத் தெரிவித்து அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது. மேலும், ஆட்சி மாற்றத்தின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் காணிகளை விடுவிக்கும் வேலைத்திட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு இணங்க கடந்த வருட ஏப்பிரல் மாத காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த 572 ஏக்கர் காணி முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டது. அடுத்து ஜனாதிபதியின் கடந்த வாரத்தைய யாழ் விஜயத்தில், பழைய கல்லூரிகளில் ஒன்றான தெல்லிப்பழை நடேஸ்வரா கல்லூரி உள்ளடங்களாக 700 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நிலப்பரப்பு பொதுமக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. இவற்றைவிட அவ்வப்போது சிறு சிறு நிலத்துண்டங்களும் இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
மெத்தமாக யாழ்ப்பாணத்தில் 2015 இல் ஏற்கனவே 1000 ஏக்கர் மக்களின் நிலங்களும் கிளிநொச்சியில் 500 ஏக்கர் நிலங்களும் சம்பூரில் ஆயிரம் ஏக்கர் நிலங்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், வலிகாமம் வடக்கில் மேலும் 4700 ஏக்கர் வரையிலான காணிகள் விடுவிக்கப்படவேண்டியுள்ளது. மேலும் தற்போது படைத்தரப்பிடம் உள்ள 200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டால் காங்கேசன்துறையில் உள்ள சீமந்து தொழிற்சாலையும் விடுவிக்கப்படும். இத் தொழில்சாலையினை வேறு இடத்தில் இருந்து மூலப்பொருள் எடுத்தவந்து இயக்க முடியும். அல்லது அத்தொழில்சாலையில் வேறு தொழில் முயற்சிகளையாவது ஆரம்பிக்க முடியும் என வடமாகாண முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். இது பற்றி அரசாங்கம் காலதாமதமின்றி கவனம் செலுத்த வேண்டும். தமிழ்த் தரப்புக்கள் அரசாங்கத்தின் இக் காணி கையளிப்பு முயற்சியை வரவேற்றுள்ளன. கடந்த ஜனவரி மாத காலப்பகுதியில் ஆறு மாதகாலப்பகுதியில் காணிகளை கையளிப்பதாக அட்டவணை ஒன்றை அரசாங்கம் வெளியிடுவது இதுவே முதற்தடவை என பாராளுமன்ற உறுப்பினர்  சுமந்திரன் வரவேற்றிருந்தார். 
இராணுவத்தினரிடம் இருந்து காணிகளை விடுவிக்குமாறு ஆட்சி மாற்றத்தின் பின்பாக தமிழர் தரப்பில் இருந்து விடுக்கப்பட்ட அழுத்தங்கள் முன்னைய காலங்களுடன் ஒப்பிடும் போது தற்போது குறைவாகவே இருக்கின்றன. எனினும் காணிகளை தமதமின்றி விடுவிக்கக் கோரி சில சில மக்கள் போராட்டங்கள் தற்போதும் நடைபெற்றுத்தான் வருகின்றன. தமது காணிகளை தாமதமின்றி விடுவிக்கக்கோரி கண்ணகி நலன்புரி முகாமில் தொடங்கி சுழர்ச்சி முறையில் 32 காம்களிலும் உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 4 ஆம் திகதி மக்கள் ஆரம்பித்திருந்தனர். ஆட்சி மாற்றத்திலும், ஒரு பக்கத்தில் காணிகள் விடுவிக்கப்படும் போது மறுபுறம் படையினர் தமக்கான காணிகளை சுவிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதை மறுக்கவும் முடியாது. கடந்த பெப்ரவரியில் கூட படை முகாம் அமைப்பதற்காக சேந்தான்குளத்தில் உள்ள புனித அந்தேனியார் ஆலயத்திற்குச் சொந்தமான காணியை நில அளவைத் தினைக்களம் அளக்க முயற்சித்தது. மக்களின் எதிர்ப்பு காரணமாகக் பின்னர் இது கைவிடப்பட்டது.
முல்லைத்தீவில் சுயாதீனத் தகவல்களின் அடிப்படையில் 134 ஆயிரத்து 487 ஏக்கர் நிலங்கள் இராணுவத்தினரின் வசம் உள்ளன. வவுனியாவிலும் 23 ஆயிரத்து 777 ஏக்கர் வரையில் படையினர் வசம் உள்ளன. இவற்றில் வெறும் 14 ஏக்கர் நிலங்களே புதிய அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளன.
இன்றைய நிலையில் மக்களின் காணிகள் மக்களிடம் கையளிக்கப்படுவது மக்களின் இயல்புவாழ்க்கைக்கு பெரிதும் அவசியமானதும் சாதகமானதுமான நிலைமையாகும். அவ்வாறு கையளிக்கப்படும் முயற்சியினை இனங்களுக்கு அப்பால் அரசியலுக்கு அப்பால் ஓர் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்வாழ்வுக்கானது என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பதுவே பொருத்தமானதாகும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com