கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுக்கும் தேசிய பாதுகாப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை!

அண்மையில் நாட்டின் சில பாகங்களில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்களுக்கும் தேசிய பாதுகாப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இவற்றினால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் ஏற்படாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(31) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கண்டெடுக்கப்பட்ட அங்கிகள் மற்றும் யுத்த ஆயுதங்களால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நிலவுவதாக என பலர் கருத்து வெளியிட்டாலும் அவற்றால் எந்த அச்சுறுத்தலும் இல்லை.  குறித்த ஆயுதங்கள், அங்கிகள் தொடர்பான விசாரணைகளை விசேட பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன் போது ஊடகவியலாளர் ஒருவரினால் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்கப் போவதாக கருத்துக்கள் வௌிவருவது தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அவ்வாறு எவ்வித தீவரவாதமும் மீண்டும் தலையெடுக்க நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. அதனுள் அரசியல் இலாபம் மட்டுமே தென்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். அதன் போது மீண்டும் தீவிரவாதம் தோன்றும் பட்சத்தில் அரசின் நிலை என்ன என்று வினவப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அவ்வாறு மீண்டும் தீவிரவாதம் தோன்றினாலும் அதற்கு முகங்கொடுக்கக் கூடிய சக்தி நம்மிடம் உண்டு, நல்லாட்சி அரசிடமும் உள்ளது.

எனவே இது தொடர்பில் எவரும் பயம் கொள்ளத் தேவையில்லை. இவற்றுக்கும் தேசிய பாதுகாப்புக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com