என் அமைதியைக் கெடுத்துவிட்டு மனோகணேசன் அமைச்சராகி விட்டார்! – சி.வி விக்கினேஸ்வரன்

நான் நல்லதொரு சூழலில் அமைதியான முறையில் எனது இளைப்பாறல் காலத்தைக் கழித்து வந்திருந்தேன். அதில் மண் அள்ளிக் கொட்டக் காரணமாயிருந்தவர்களில் ஒருவர் நண்பர் மனோகணேசன் அவர்கள். மற்றவர்கள் தனிப்பட்ட முறையில் வலிந்தழைத்தார்கள் என்றால் நண்பர் மனோகணேசன் அவர்கள் கூட்டம் வைத்தே என்னை அரசியலுக்கு அழைத்தார். என் அமைதியைக் கெடுத்துவிட்டு அவர் இப்பொழுது அமைச்சராகி விட்டார்! என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் அமைக்கப்பட இருக்கின்ற மாணவர் விடுதிக்கான அடிக்கல் நாட்டு விழா
04.03.2016 வெள்ளிக்கிழமை டிறிபேர்க் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது நிகழ்வில் கலந்துகொண்டுஉரையாற்றும்போதே வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவரது உரையின் முழுவடிவம் வருமாறு,

பிரதம அதிதி உரை
குருர் ப்ரம்மா …………………..
அதிபர் அவர்களே, பேராயர் அவர்களே, கல்வி அமைச்சர் அவர்களே, இங்கே வருகை தந்திருக்கும் விசேட விருந்தினர்களே, இப்பாடசாலையின் ஆசிரியர்களே, பழைய மாணவர்களே, இக்கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் மாணவ மாணவியர்களே, பெற்றோர்களே, மற்றும் இங்கு வருகை தந்திருக்கும் எனதினிய சகோதர சகோதரிகளே,
சற்று முன்னர்தான் உங்கள் கல்லூரியின் வாயிலில் இன்றைய வர்த்தகக் கண்காட்சி நிகழ்வை வைபவ ரீதியாக திறந்து வைத்து உரையாற்றியிருந்தேன். எனது இரண்டாவது பேச்சு அதே கல்லூரியின் பாடசாலை மண்டபத்தில் இடம்பெறுவது சற்று “ஓவராக” இருக்கின்றதோ தெரியாது. இருப்பினும் எனது சட்டக்கல்லூரி கால நண்பர் திரு.அருணாச்சலம் அவர்களின் அழைப்பின் பெயரிலும் நண்பர் திரு.மனோகணேசன் அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றார்கள் என்ற காரணத்தினாலும் இவை அனைத்திற்கும் மேலாக சாவகச்சேரி வாழ் மக்கள் என்மீது கொண்டிருக்கும் அன்பின் நிமித்தமும் நான் இரண்டாவது முறையும் இங்கு பேச எழுந்துள்ளேன். இன்னும் சற்று நேரத்தில் கைதடியில் ஒரு முக்கிய கூட்டமொன்று இருக்கின்றது. ஜேர்மானியத் தூதுவர் வலிந்து அழைத்ததன் பெயரில் அதற்கும் செல்ல வேண்டியுள்ளது.
சாவகச்சேரி எனக்குப் பரீட்சயமான ஒரு இடம். இங்கு 1980 – 81ம் வருடங்களில் மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றினேன். நீதிமன்றம் தெருவின் அந்தப்பக்கத்தில் இருந்தது. நான் வசித்த வீடு உங்கள் கல்லூரிக்குப் பின்புறத்தில் அமைந்திருந்தது.

1875களில் தென்னிந்திய திருச்சபையினால் சாவகச்சேரியில் உருவாக்கப்பட்ட இக் கல்லூரி தென்மராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஓர் கலங்கரை விளக்கமாக அக் காலத்தில் அமைந்திருந்தது.  இங்கு கல்வி கற்ற பல மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளை மிகச்சிறப்புற மேற்கொண்டு பற்பல உயர் பதவிகளில் இன்றும் வீற்றிருப்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது. இங்கு கடமையாற்றிய அதிபர்கள், மிகச் சிறந்த ஆசிரியர்கள் ஆகியோரின் தன்னலமற்ற சிறந்த சேவையே அவர்கள் அனைவரையும் வெற்றியடையச் செய்தது.  இப்பாடசாலை அக் காலத்தில் மாணவர் விடுதி வசதிகளைக் கொண்டிருந்தமையால் வன்னிப்பகுதியில் இருந்து பல மாணவர்கள் இப்பாடசாலையின் விடுதியில் தங்கியிருந்து கல்விகற்கக் கூடிய வசதிகள் காணப்பட்டன.

இக்கல்லூரியின் விளையாட்டு மைதானம் அந்தக் காலத்தில் மகிழங்கேணி கடற்கரையில் அமைந்திருந்ததால் விளையாட்டுப் போட்டி மற்றும் உதைபந்தாட்டப் போட்டிகள் என்பன மகிழங்கேணி கடற்கரை மைதானத்திலேயே நடைபெற்றன. தினமும் மாலையில் மாணவர்கள் இக் கல்லூரியில் இருந்து மகிழங்கேணி விளையாட்டு மைதானத்திற்கு வரிசையாக நடந்து செல்வதை நான் சாவகச்சேரி நீதிமன்றத்தின் நீதிபதியாக கடமையாற்றிய காலத்தில் கண்ணுற்றிருக்கின்றேன். அக் காலத்தில் சாவகச்சேரியில் முதலாம் இடத்தில் டிறிபேர்க் கல்லூரியும் இரண்டாம் இடத்தில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியும் மூன்றாம் இடத்தில் சாவகச்சேரி மகளீர் கல்லூரியும் இடம் பெற்றிருந்தன என்று கூறலாம்.

சிறப்பாகச் செயற்பட்ட இப்பாடசாலை பல்வேறு காரணங்களினால் கற்பித்தல் செயற்பாடுகளில் பின்நோக்கி செல்லத் தொடங்கிய போது சாவக்சேரி இந்துக்கல்லூரி முழு வளர்ச்சி பெற்றது அண்மைக் கால வரலாறு.

டிறிபேர்க் கல்லூரி மீண்டும் ஒரு முறை தனது பழைய தராதரத்திற்கு உயர்ச்சி பெறும் என்று நான் எதிர் பார்க்கின்றேன். உங்கள் கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கப்பெறுவதால் நீங்கள் தைரியமாக முன்னேற முடியும். சர்வதேச பழைய மாணவர்கள் ஒன்றியத்தினால் இக் கல்லூரிக்கு மாணவர் விடுதி ஒன்றை அமைப்பதற்காகக் காணி துண்டொன்று விலைக்கு வாங்கப்பட்டது மட்டுமன்றி அதில் 100 மாணவர்கள் தங்கியிருந்து கல்வி கற்கக்கூடிய விடுதியொன்றையும் நவீன வசதிகளுடன் முற்றுமுழுதாக பழைய மாணவர்களின் நிதி உதவியுடன் கட்டித்தரவிருப்பது உங்கள் முன்னேற்றத்திற்கான ஒரு அறிகுறி என்று கூறலாம்.
இவ்வாறு விடுதிகளில் தங்கியிருந்து கல்வி கற்கின்ற மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கான முழுச் செலவீனங்களையும் இந்த சர்வதேச பழைய மாணவர் ஒன்றியம் பொறுப்பேற்றுக் கொள்ளும் என்ற ஒரு நல்ல செய்தியையும் நேற்றைய பத்திரிகைகளில் கண்ணுற்றேன்.

இந்த நல்ல கைங்கரியங்களை முன்னின்று ஆரம்பித்து வைப்பதற்காக கௌரவ அமைச்சரும் எனது நெருங்கிய நண்பருமாகிய திரு.மனோகணேசன் அவர்கள் இங்கே வருகை தர இருந்தார்கள். ஏனோ இன்னமும் வரவில்லை. நான் நல்லதொரு சூழலில் அமைதியான முறையில் எனது இளைப்பாறல் காலத்தைக் கழித்து வந்திருந்தேன். அதில் மண் அள்ளிக் கொட்டக் காரணமாயிருந்தவர்களில் ஒருவர் நண்பர் மனோகணேசன் அவர்கள். மற்றவர்கள் தனிப்பட்ட முறையில் வலிந்தழைத்தார்கள் என்றால் நண்பர் மனோகணேசன் அவர்கள் கூட்டம் வைத்தே என்னை அரசியலுக்கு அழைத்தார். என் அமைதியைக் கெடுத்துவிட்டு அவர் இப்பொழுது அமைச்சராகி விட்டார்! அவர்களை இன்முகத்துடன் இச் சந்தர்ப்பத்தில் இங்கு வரவேற்கலாம் என்று எண்ணியிருந்தேன். ஏனோ இன்னமும் அவர் வரவில்லை.

இப்பாடசாலை தென்மராட்சி மாணவர்களுக்கு மட்டுமே சொந்தமானது என மட்டுப்படுத்தாமல் வன்னிப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் மலையகப்பகுதியைச் சேர்ந்த மாணவர்களும் இங்கே வந்து தங்கி தமது கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடிய வகையில் மாணவர்களின் விடுதி மற்றும் இதர தேவைகள் பற்றிய ஒழுங்குகள் பழைய மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்திருக்கின்ற காரணத்தினால் பொருளாதார வசதி குறைந்த திறமை மிக்க மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த வரப்பிரசாதமாக அமையும்.

உங்கள் கல்லூரியின் ஓய்வு பெற்ற அதிபர் திரு.அருந்தவபாலன் அவர்கள் ஒரு திறமையான அதிபராக விளங்கி இக்கல்லூரியை வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னெடுத்துச் சென்ற போதும் அவரின் பணிகள் கல்லூரியுடன் மட்டும் நின்றுவிடாது இப்பகுதியைச் சார்ந்த அனைத்து மக்களுக்கும் அவரின் உயரிய சேவை கிடைக்கப் பெற வேண்டும் என்ற உங்கள் அனைவரதும் விருப்பத்தின் படி திரு.அருந்தவபாலன் அவர்கள் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட போதும் அவர் விருப்பு வாக்கு எண்ணிக்கையில் ஒரு சில வாக்கு வித்தியாசங்களில் வெற்றி வாய்ப்புக்களை நழுவவிட்டது ஒரு துர்ப்பாக்கியம் என்றே கருதுகின்றேன். எனினும் அவர் மனம்தளராது மக்கள் பணிக்காகத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்ற தன்மையை நான் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டி வாழ்த்துகின்றேன். அரசியலில் வல்லவர்களுடன் நல்லவர்களும் உள்ளிட வேண்டும். வல்லவர்கள் பலர் சுயநலவாதிகள். நல்லவர்கள் பொதுநல சிந்தனை படைத்தவர்கள். திரு.அருந்தவபாலன் அவர்கள் பொதுநல சிந்தனை படைத்த வல்லவராவார்.

இன்றைய இந்த அடிக்கல் நாட்டு வைபவம் டிறிபேர்க் கல்லூரியின் மீள்வளர்ச்சிக்கான முதல் மைல்கல்லாக அமையட்டும். அனைவரும் ஒன்றுசேரப் பாடுபட்டு இந்தச் சாவகச்சேரி மண்ணிலே முன்போன்று மூன்று பாடசாலைகள் சமாந்தர வளர்ச்சிகளைப் பெற்று வருகின்றன என மக்கள் போற்றத்தக்க வகையில் இக்கல்லூரி மீண்டும் வளர்;சியுற வேண்டும் அதற்கு நீங்கள் யாவரும் கூட்டாகப் பாடுபட வேண்டும் என தெரிவித்து எனது சிற்றுரையை இத்துடன் நிறைவு செய்கின்றேன்.
நன்றி. வணக்கம்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com