வினைத்திறனுடனும் விரைவாகவும் நேர்மையுடனும் கடமையாற்றுங்கள்.

உங்களுக்கு வழங்கப்பட்ட கடமை நிலையங்களில் உங்கள் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டு மிகவும் வினைத்திறனுடனும் விரைவாகவும் நேர்மையுடனும் உங்கள் கடமைகளை ஆற்றப் பழகிக் கொள்ளுங்கள். . என புதிதாக அரச நியமனம் பெற்றுக்கொண்ட உத்தியோகஸ்தர்களுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார்.

வட மாகாண சபைக்கு அனுமதிக்கப்பட்ட ஆளணி வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 640 பேருக்கான நியமன கடிதங்கள் இன்றையதினம் வழங்கி வைக்க பட்டுள்ளது.

அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

சிறிது சிறிதாக எமது வடமாகாணம் மலர்ச்சி பெற்று வருகின்றது என்பதற்கு இன்றைய தினம் ஒரு உதாரணம். வெளிப்படைத் தன்மை, தகைமை அடிப்படை, நேர்மையான நிர்வாகம் போன்றவற்றை உள்ளடக்கி எமது மாகாணம் முன்னோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளது.

வடமாகாணத்திலே வேலையில்லாது இருப்பது எப்பேர்ப்பட்ட சமூகச் சிக்கல்களைத் தருகின்றது என்பதை நான் கூறி எவருந் தெரிய வேண்டியதில்லை. வேலை செய்ய முடியுமான அனைவரும் பொறுப்பான வேலைகளில் அமர்த்தப்பட வேண்டும் என்பது தான் எமது அவா, ஆசை, எதிர்பார்ப்பு. அதனை அவ்வளவு இலேசாக நடைமுறைப்படுத்த முடியாது.

பலர் அரசாங்க வேலை மட்டுமே வேண்டும் என்ற பழைய பல்லவியையே பாடி வருகின்றனர். அது தவறு. இன்று அரசாங்கம் ஒன்று  ஒரு நாட்டில் தனித்து இயங்குவது என்பது கடினமானது. தனியார் துறைஇ அரச சார்பற்ற நிறுவனங்கள் எனப் பலவும் அரசாங்கங்களுக்கு ஒத்திசைவாக நடந்து சமூகத்தைக் கட்டி எழுப்ப வேண்டிய நிலை வந்துள்ளது.

எனவே எமது இளைஞர் யுவதிகள் புதிய சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க முன்வர வேண்டும். தன்னம்பிக்கையுடன் தொழில் முயற்சியாளராக மாற முன்வர வேண்டும். இன்று பல்துறை வணிகர்களாக, தொழில் விற்பன்னர்களாக, சமூகத்தின் பலம் பொருந்திய பகுதியினராக இருப்பவர்கள் பழைய சிந்தனைகளை விடுத்துப் புதிதாகச் சிந்தித்து முன்னேறியவர்கள் என்பதை நாம் மறத்தலாகாது.

உங்களுக்கு வழங்கப்பட்ட கடமை நிலையங்களில் உங்கள் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டு மிகவும் வினைத்திறனுடனும் விரைவாகவும் நேர்மையுடனும் உங்கள் கடமைகளை ஆற்றப் பழகிக் கொள்ளுங்கள்.

காரியாலயங்களில் வழவழவென்று சக அலுவலர்களுடன், ஊழியர்களுடன் சதா பேசிக் கொண்டிருப்பதைப் பழகிக் கொள்ளாதீர்கள். வேலையில் இருக்கும் போது அரசியல் பேசுவதை ஒரு பழக்கமாக்காதீர்கள். கட்டுப்பாடற்று கடமைகளை மறந்து பணிகளில் ஈடுபடுவதைப் பழகிக் கொள்ளாதீர்கள்.

ஏனெனில் வடபகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு நிறையத் தேவைகள் காணப்படுகின்றன. அவர்களுக்கான உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்க வேண்டியது எமது பொறுப்பாகும்.

எங்களை நாடி வருகின்ற பொது மக்கள் மீது எரிந்து விழாது அவர்களைப் பரிவுடன் அணுகி அவர்களின் தேவைகளை நிறைவு செய்யப் பழகுங்கள். சாதிஇ சமயம் பார்க்கப் போகாதீர்கள். அவர்கள் யாவரும் மனித இனத்தவரே என்பதை மனதில் நிறுத்தி கடமைகளில் ஈடுபடுங்கள். சட்டத்திற்கு அமைவாக வேலை செய்யப் பழகுங்கள்.
சென்ற காலங்களில் அரசியல் சகல மட்டங்களிலும் அரசோச்சியது.

 அதை இனியேனும் நிறுத்துவோமாக. அரசியலானது எமது மக்களுக்கு வழங்க வேண்டிய வசதிகளைத் தடைசெய்யாதிருக்க உங்கள் அனைவரதும் அனுசரணையை வேண்டி நிற்கின்றேன்.  சட்ட திட்டங்களை அறிந்துஇ அவற்றை மதித்துஇ மக்கள் நலம் பேணும் விதத்தில் கடமையாற்றப் பழகிக் கொள்ளுங்கள்.

அப்போது தான் நீங்கள் சிறந்த உத்தியோகத்தர்களாகப் பரிணமிக்க முடியும். நீங்கள் அரச சேவையில் நீடித்திருப்பதற்கு இன்னும் பல வருடங்கள் இருக்கின்றன.

ஆகவே உங்கள் எதிர்காலம் சுபீட்சமானதாகவும் ஒளியுள்ளதுமாக அமைய,
மக்களின் நற்கீர்த்தியையும் நல்லெண்ணத்தையும் பெற  நீங்கள் இப்போதிருந்தே கடுமையாக உழைக்க வேண்டும்.

வடமாகாண நிர்வாகச் சக்கரத்தின் சைக்கிள் கம்பிகள் போன்றவர்கள் நீங்கள். நீங்கள் முறையாகக் கடமையாற்றினால்த்தான் வடமாகாண நிர்வாகம் முழுமையாக முயன்று முன்னேறும். நீங்கள் ஒவ்வொருவரும் அதை மறந்து விடாதீர்கள். என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com