வடக்கு முதல்வருக்கு துணையாக களம் இறங்கும் முன்னாள் சட்ட மா அதிபர்

அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆராய்வதற்கான தமிழ் மக்கள் பேரவையின் உப குழுவில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சார்பாக இலங்கையின் முன்னாள் சட்ட மா அதிபரும் விடுதலைப்புலிகளின் அரசியல் விவகார குழுவின் உறுப்பினராக பணியாற்றியவருமான சிவா பசுபதி நியமிக்கப்படுவார் என்று நம்பகமாக அறியவருகிறது.
தமிழ் மக்கள் பேரவையின் 2 ஆவது கூட்டம் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆராயும்பொருட்டு அமைக்கப்பட்ட உபகுழுவில் 15 பேர் இடம்பெறுவர் என்றும் அதில் இருவர் வட மாகாண முதலமைச்சர் சார்பாக நியமிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அரசியல் கட்சிகள் சார்பாக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இருவரை இக்கூட்டத்தில் முன்மொழிந்திருந்தார்கள்.

இந்த நிலையிலேயே முன்னாள் சட்ட மா அதிபர் சிவா பசுபதியை தனது பிரதிநிதிகளில் ஒருவராக நியமிக்க முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதேவேளை, தனது இரண்டாவது பிரதி நிதியையும் நியமிக்கும் பொருட்டு விக்னேஸ்வரன் பல தமிழ் தேசிய புத்திஜீவிகளுடன் தொடர்புகொண்டுள்ளார் என்றும் விரைவில் இந்த தெரிவும் இடம்பெறும் என்றும் அறிய முடிகிறது.

தற்போது 82 வயதுடைய சிவா பசுபதி இலங்கையின் 34 ஆவது சட்ட மா அதிபராக 13 வருட காலம் (1975 – 1988) பணியாற்றியுள்ளார். இவர் ஒரு ஜனாதிபதி சட்டத்தரணியும் ஆவர். ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுகும் இடையில் வெளிநாடுகளில் பேச்சுவார்த்தை நடைபெற்றபோது விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தை குழுவின் ஆலோசகராக இவர் பணியாற்றியிருந்துடன் விடுதலிப்புலிகளின் அரசியல் விவகார குழுவின் பிரதிநிதியாகவும் பணியாற்றியிருந்தார். விடுதலைப்புலிகள் இலங்கை அரசாங்கத்துக்கு இடைக்கால தீர்வாக முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை இந்த அரசியல் விவகார குழுவே தயாரித்திருந்தது.

கொழும்பு ஆனந்தா கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் தனது பாடசாலை கல்வியை பயின்ற சிவா பசுபதி, சிலோன் பல்கலைக் கழகத்தில் தனது சட்ட பட்டப் படிப்பை பூர்த்தி செய்து பின்னர் இங்கிலாந்தின் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் தனது பட்ட பின்படிப்பை பூர்த்தி செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com