20 அரசியல் கட்சிகளும் ஒன்பது சுயேட்சை குழுக்களும் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிப்பு

2017 உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 20 அரசியல் கட்சிகளும் ஒன்பது சுயேட்சை குழுக்களும் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடைமுறை நேற்று நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்தது.

இரண்டு கட்டங்களாக வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. முதற்கட்டத்தில் 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் இரண்டாம் கட்டத்தில் 248 மன்றங்களுக்குமாக 341 உள்ளுராட்சி அமைப்புக்களுக்காக வேட்புமனுக்கள் ஏற்கனப்பட்டன.

மொத்தமாக 20 அரசியல் கட்சிகளும் ஒன்பது சுயேட்சை குழுக்களும் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹமட் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சி ஐந்து உள்ளுராட்சி நிறுவனங்களுக்காக தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திரப்பனே பிரதேச சபை, யாழ்ப்பாண மாநகர சபை, வலிகாமம் வடக்கு பிரதேச சபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை, நெடுந்தீவு பிரதேச சபை ஆகியவையும் அடங்கும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெலிகம மற்றும் ரிதிகம பிரதேச சபைகளுக்காக தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மௌபிம மக்கள் கட்சி திக்வெல்ல பிரதேச சபைக்காக தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. தேசிய மக்கள் கட்சி கொழும்பு மாநகர சபைக்கும், கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபைக்கும் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர, கோட்டே மாநகர சபைக்காக ஐக்கிய சோசலிச கட்சி தாக்கல் செய்த வேட்புமனுவும், எல்பிட்டி, பொல்கஹவெல, பிபில பிரதேச சபைகளுக்காக ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி தாக்கல் செய்த வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன. ஜனசெத்த பெரமுன என்ற கட்சி கட்டுநாயக்க, சீதுவ நகர சபைகளுக்காகவும், வெலிகந்த பிரதேச சபைக்காகவும் தாக்கல் செய்த நியமனப் பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டன.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற கட்சி மட்டக்களப்பு மாநகர சபைக்கும், துணுக்காய் பிரதேச சபைக்கும் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஸ்ரீலங்கா சமசமஜா கட்சி நுவரெலியா பிரதேச சபைக்காக தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. நல்லாட்சிக்கான தேசிய இயக்கம் மஹவ பிரதேச சபைக்காக தாக்கல் செய்த வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கல்முனை மாநகர சபை, கஸ்பாவ – ஹாரிஸ்பத்துவ – வலிகாமம் மேற்கு – வவுனியா வடக்கு பிரதேச சபைகள் ஆகியவற்றுக்காக ஒன்பது சுயாதீன குழுக்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. .உள்ளுராட்சி தேர்தல் வாக்குப் பதிவு பெப்ரவரி பத்தாம் திகதி நடைபெறும் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com