நுவரெலியா பொரலந்த பகுதியில் மரை இறைச்சி 150 கிலோ கிராமை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபருக்கு 50000/= ஐம்பதாயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறு இன்று (11) நுவரெலியா நீதிமன்ற நீதவான் ருவான் இந்திக்க டீ சில்வா உத்தரவிட்டார்.
இவ்வாறு தண்டம் விதிக்கப்பட்டவர் நுவரெலியா பொரலந்த பீட்ரூ பகுதியைச் சேர்ந்த சுப்பையா கணேஷ் (46 வயது) எனவும் தெரியவருகின்றது.
மரை இறைச்சி விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து விரைந்த பொலிஸார் 150 கிலோகிராம் மரை இறைச்சியை மீட்டுள்ளதுடன் சந்தேக நபரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 11.12.2017 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.