15 அரச நிறுவனங்களில் ரூபா 11,000 கோடி நஷ்டம்

காப்புறுதிக் கூட்டுத் தாபனம், ஶ்ரீலங்கா கிரிக்கெட், தேசிய லொத்தர்சபை, துறைமுக அதிகாரசபை, சதோச உள்ளிட்ட 15 அரச நிறுவனங்களால் நாட்டுக்கு ரூபா 11 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரச பொது கணக்காய்வு குழுவின் (COPE – கோப்) மூன்றாவது அறிக்கையை சபையில் சமர்ப்பித்தபோதே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார். 2016ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதியிலிருந்து ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை இந்த 15 நிறுவனங்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
1. கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம்
2. காப்புறுதிக் கூட்டுத்தாபனம்
3. அரச பொறியியற் கூட்டுத்தாபனம்
4. தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு
5. ஶ்ரீலங்கா கிரிக்கெட்
6. ரூபவாஹினி கூட்டுத்தாபனம்
7. தேசிய லொத்தர் சபை
8. மின்சார சபை
9. நிலைபெறுதகு சக்தி அதகாரசபை
10. உதைபந்தாட்ட சம்மேளனம்
11. ஆயுர்வேத மருத்துப் பொருட்கள் கூட்டுத்தாபனம்
12. மகநெகும நிறுவனங்கள்
13. துறைமுக அதிகாரசபை
14. குருநாகல் பெருந்தோட்ட கம்பனி
15. ஊழியர் நம்பிக்கை நிதியம்
ஆகிய நிறுவனங்கள் குறித்து கோப் குழு விசாரணை நடத்தியுள்ளது.
இந்த அரசாங்க நிறுவனங்களால் நாட்டின் பொருளாதாரத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பதைவிட, இவற்றினால் பெருந்தொகை பணம் வீண்விரயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீண்விரயத்தினால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து கோப் குழு ஆராய்வதாக அவர் குறிப்பிட்டார்.
உதாரணமாக சூரியவெவ மைதானத்துக்கு தற்போது உரிமையாளர் ஒருவர் இல்லாத நிலைமை தோன்றியுள்ளது. அதற்கு, துறைமுகங்கள் அதிகாரசபையினால் ரூபா 5.3 பில்லியன் செலுத்தப்படுகிறதா அல்லது  இலங்கை கிரிக்கெட் நிறுவனம் செலுத்துகிறதா என்ற சந்தேகம் காணப்படுகிறது. இதனால் 530 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் அந்த அதிகாரசபையுடன் தொடர்பில்லாத வேலைத்திட்டங்களால் ரூபா 57 ஆயிரம் மில்லியன் வரையான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை உதைப்பாந்தாட்ட சம்மேளனத்திற்கு மில்லியன் கணக்கான டொலர்களும் யூரோக்களும் கிடைத்துள்ளன.
எனினும், அந்த நிதிகள் பயன்படுத்தப்பட்ட விதம் தொடர்பில் நாம் ஆராய்ந்து பார்த்துள்ளோம். இலங்கை அரச பொறியியற் கூட்டுத்தபானம் ரூபா 2,918 மில்லியன் நஷ்டத்திலும், ஹம்பாந்தோட்டை துறைமுகம் ரூபா 37 ஆயிரம் நஷ்டத்திலும் செல்கின்றது என இந்த அறிக்கையில் இருக்கிறது.
இந்த அறிக்கையில் நாம் வெளிப்படுத்தியுள்ள 15 நிறுவனங்களிலும் சுமார் ரூபா 11 ஆயிரம் கோடி நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
நாம் இந்த அறிக்கைகளை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பது போன்றே இந்த அறிக்கைகள் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் பின்னூட்டல் செயற்பாடுகளுக்கான பொறுப்புகள், சம்பந்தப்பட்ட விடயத்துக்கான அமைச்சர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இருப்பதாக கோப் குழுவின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com