முள்ளிவாய்க்கால் மனித அவலத்தின்போது முஸ்லிம் சமூகத்தின் மெளனம் நியாயமற்றது! அஸ்மின்

முள்ளிவாய்க்காலில் ஒரு பெரும் மனித அவலம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்தின் மெளனம் நியாயப்படுத்த முடியாத ஒன்றேயாகும் என வட மாகாண சபைஉறுப்பினர் அய்யூப் அஸ்மின் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரசியல் ரீதியாக தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் பல்வேறு நம்பிக்கையூட்டும் விடயங்கள் இடம்பெற்றுள்ளபோதும், அவை எதுவும் பெரிதாகக் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத் திட்ட வரைபு சபையில் கடந்த வியாழக்கிழமை (7) அன்று  முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன் மீதான விவாதம் இடம்பெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அஸ்மின் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நியாயம் கிடைக்கும்
அரசியல் யாப்பை முன்மொழிவதன் நோக்கம், குறித்த ஆளுகைப் பிரதேசத்தின் மக்கள் தங்களுடைய நல்வாழ்வை அமைதியாகவும், முன்னேற்றகரமாகவும், பாதுகாப்பாகவும் முன்னெடுப்பதற்கேயாகும்.
இலங்கையில் இதுவரையில் அரசியல் யாப்புகள் அத்தகைய உயரிய அடைவுகளை மக்களுக்குப் பெற்றுத்தரவில்லை.
பல இனங்கள் வாழுகின்ற இலங்கை போன்ற ஒரு நாட்டில் இனங்களுக்கிடையில் ஐக்கியம், அமைதி, பரஸ்பர புரிந்துணர்வு என்பவற்றோடு கூடிய பாதுகாப்பானதும் சுதந்திரமானதுமான நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்குமான சூழல் அரசியல் யாப்பின் மூலம் உத்தரவாதப்படுத்த வேண்டும்.
இதனை இப்போது தேசிய வேலைத்திட்டமாக நாம் முன்னெடுக்கின்றோம். இதனால் இந்த நாட்டின் அனைத்து மக்களும் நன்மையடைவார்கள் என்பது எமது எதிர்பார்ப்பு.
இதனூடாக நீண்டு நிலைத்திருக்கும் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிட்டும் என்பதும், தமிழ் மக்களுடைய கோரிக்கைகளுக்கு ஒரு நியாயமான பதில் கிடைக்கும் என்பதும் எமது எதிர்பார்ப்பாகும்.
முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு
முஸ்லிம் சமூகம் சார்ந்து அதிலும் வடக்கு முஸ்லிம்கள் சார்ந்து நாம் மிகவும் தெளிவான நிலைப்பாடுகளுடன் இருக்கின்றோம்.
இந்த நாட்டிலே பிரிபடாத இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான தீர்வு சமூக நீதியின் அடிப்படையில் முழு அளவில் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கப்படும் தீர்வின் மூலம் அந்தப் பிரதேசத்தில் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள், சிங்கள மக்கள் அரசியல், சமூக, பொருளாதார ரீதியான எவ்விதமான பாதிப்புகளுக்கும் உள்ளாகக்கூடாது என்கின்ற
இரண்டு அடிப்படைகளில் நாம் இந்த விடயத்தை நோக்குகின்றோம்.
நம்பிக்கையீனங்கள்
முஸ்லிம் மக்களைப் பொறுத்த வரையில் தமிழ் மக்களுடைய விடயத்தில் சில நம்பிக்கையீனங்கள் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன.
வடக்கு, கிழக்கில் 1980ஆம் ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் தமிழ் -முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவிலும் அதற்குப் பிந்திய காலங்களில் தமிழ் – முஸ்லிம் உறவுகளிலும் பெரும் வித்தியாசங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
அவநம்பிக்கையேற்படும் விதத்தில் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தேறியிருக்கின்றன, அவற்றுக்கு ஒரு சாராரை மாத்திரம் குற்றம் சொல்ல முடியாது. பரஸ்பரம் இரண்டு சமூகங்களும் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவைகளே.
சம்பவங்கள்
2012 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தமிழ் – முஸ்லிம் உறவைப் பலப்படுத்தி, அப்போதைய அராஜக ஆட்சிக்குச் சவாலாக சிறுபான்மை சமூகங்களின் ஆட்சியை அமைக்கும் ஓர் அரிய சந்தர்ப்பம் கிட்டியது, அதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு அளவிலான விட்டுக் கொடுப்புகளையும் செய்து உடன்படத் தயாராக இருந்த சமயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அந்த வாய்ப்பை நழுவவிட்டது.
இது இரண்டு சமூகங்களுக்கும் ஒரு பெரும் இழப்பாகும்.
2012ஆம் ஆண்டுகளில் ஜெனிவா மனித உரிமை விசாரணை ஆணைக்குழு விவகாரம் கூர்மையடைந்திருந்த சந்தர்ப்பத்தில், ஒரு சில முஸ்லிம் கட்சிகள் அரசுக்கு ஆதரவாகச் செயற்பட்டமை அங்கீகரிக்க முடியாத விடயமாகும்.
வாழ்வின் எழுச்சி சட்டமூலத்தை இழக்குமொரு தவறாகவே இருக்கின்றது.
முள்ளிவாய்க்காலில் ஒரு பெரும் மனித அவலம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்தின் மெளனம் நியாயப்படுத்த முடியாத ஒன்றேயாகும்.
கிழக்கிலங்கையில் தமிழ்க் கிராமங்களில் மனித அவலங்களை ஏற்படுத்தியதில் முஸ்லிம் ஊர்காவல் படையினருக்கும் தொடர்புகள் இருக்கின்றன என்று சொல்லப்படுகின்றது. அவ்வாறு இடம்பெற்றிருக்குமானால் அதுவும் பெரும் தவறேயாகும்.
இவ்வாறே, 1985ஆம் ஆண்டுகளுக்குப் பிந்திய காலத்தில் கிழக்கிலங்கையில் முஸ்லிம் சமூகத்தவர் மீதான படுகொலைகள், பள்ளிவாசல்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல்கள், 1990 ஆம் ஆண்டுகளில் வடக்கு முஸ்லிம்கள் மீதான பலவந்த வெளியேற்றம், ஆயுதக்குழுக்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சின்போது முஸ்லிம்களுடைய விவகாரங்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டமை என்பவற்றால் இரண்டு சமூகங்களுக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கை சீர்குலைக்கப்பட்டிருக்கின்றது.
தமிழரசுக் கட்சியின் நியாயமான செயற்பாடு
ஆனால், அரசியல் ரீதியாக இரண்டு சமூகங்களுக்குமிடையில் பல்வேறு நம்பிக்கை தருகின்ற விடயங்கள் இடம் பெற்றுள்ளன.
எனினும், அவை பெரிதாகக் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இலங்கைத் தமிழரசுக் கட்சி யாப்பில், ஐக்கிய இலங்கை சமஷ்டியின் அங்கமாகிய சுயநிர்ணய உரிமைக் கொள்கைப்படி ஒரு சுயாட்சித் தமிழரசும், ஒரு சுயாட்சி முஸ்லிம் அரசும் நிறுவி இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்களுடைய அரசியல் பொருளாதார கலாசார விடுதலையைக் காண்பதே இந்தக் கட்சியின் நோக்கமாகும் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
முஸ்லிம்களுக்கென்று தனிக் கட்சிகள் தோன்றாத காலத்தில் இவ்வாறு தமிழரசுக் கட்சி தெரிவித்திருப்பது முஸ்லிம் சமூகத்தை அதனுடைய தனித்துவத்தோடு அங்கீகரித்திருக்கின்றமையை தெளிவாகக் கோடிட்டுக் காட்டுகின்றது. இது காலத்தால் மறைக்கப்பட்ட ஓர் அம்சமாக இருக்கின்றது.
1972ஆம் ஆண்டு அரசியல் நிர்ணய சபைக்கு தமிழரசுக் கட்சி முன்வைத்த ஆலோசனைகளில் வடக்கு – கிழக்கு மாநிலம் என்பதைப் போலவே தென்கிழக்கு மாநிலம் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
இதுவும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இல்லாத சூழ்நிலையில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவாகும். ஆனால், இதுவும் காலத்தால் மறைக்கப்பட்டிருக்கின்றது.
கிட்டுவுடனான உடன்பாடு
1987ஆம் ஆண்டுகளில் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின்போது வடக்கையும் கிழக்கையும் இணைத்தல் தொடர்பான சர்ச்சை எழுந்த சந்தர்ப்பத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கிட்டு என்று அழைக்கப்படுகின்ற சதாசிவம் கிருஸ்ணகுமாருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் இயக்கத்தின் எம்.ஐ.எம்.மொஹிதீனுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் அப்போதிருந்த 34 சதவீத முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரம் வடக்கும் கிழக்கும் இணைகின்றபோது 15 சதவீதமாக குறைந்து வரும் நிலை இருப்பதை முஸ்லிம் சமூகம் அங்கீகரிக்காது என்று குறிப்பிட்டதற்கு அமைய, அந்த சனத்தொகை வீதாசாரத்தை 34 சதவீதமாக பேணிக் கொள்தல் என்ற உடன்பாடு எட்டப்பட்டிருக்கின்றது.
ஆனால், இது பல சந்தர்ப்பங் களில் வெளியில் சொல்லப்படுவதில்லை.
கூட்டமைப்பின் பொறுப்பு
2010 ஆம் ஆண்டுக்குப் பிந்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எல்லாத் தேர்தல் அறிக்கைகளிலும் முஸ்லிம் சமூகம் அங்கீகரிக்கின்ற ஒரு தீர்வையே எதிர்பார்க்கின்றோம் என்ற விடயம் மிகவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு
வந்திருக்கின்றது.
இவ்வாறான நம்பிக்கையூட்டும் பல்வேறு விடயங்கள் தமிழ் – முஸ்லிம் அரசியலில் இடம்பெற்றாலும், இன்னமும் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை முழுமையாக வெற்றிகொண்டதாக இல்லை.
எனவே, தமிழ் அரசியல் தலைவர்களுக்கு முன்னால் இருக்கின்ற பெரும் பொறுப்பாக இருப்பது தங்களுடைய நேர்மையை, தங்களுடைய சமூக நீதியை, தங்களுடைய கோரிக்கைகளில் இருக்கின்ற நியாயத்தன்மைகளை முஸ்லிம் மக்களோடும், அரசியல் தலைவர்களோடு வெளிப்படைத் தன்மையோடு கலந்துரையாடுவதேயாகும்.
முஸ்லிம் சமூகத்தோடு பேசுங்கள்
முஸ்லிம் சமூகம் என்பது வெறுமனே அரசியல் கட்சிகள் மாத்திரம் அல்ல. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோடு மாத்திரம் பேசுவது முஸ்லிம் சமூகத்தோடு பேசியதற்கு சமமாகாது.
ஏனைய கட்சிகள், சிவில் சமூகத்தவர்கள், பெண்கள், இளைஞர்கள், பல்கலைக்கழக சமூகத்தவர்கள், புத்திஜீவிகள், மார்க்கத் தலைவர்கள் என பல மட்டங்களோடும் நேரடியாகப் பேசுவது சிறப்பானது.
இவ்வாறாக முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை வெல்வதனூடாக தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் மாத்திரமன்றி இரண்டு சமூகங்களின் ஐக்கியமான எதிர்கால வாழ்வுக்கும் நாம் வழிசமைக்க முடியும் என்பது எனது நம்பிக்கை.
எனவே, முன்வைக்கப்பட்டிருக்கின்ற முன்மொழிவுகள் விடயத்தில் உடனடியாக இறுதியான தீர்மானங்களை மேற்கொள்ளாது உரிய கால அவகாசம் வழங்கி மக்களின் கருத்துக்களை அறியவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com