விஜயகாந்தையும் ராமதாசையும் விமர்சிக்கவேண்டாம் – சீமான் உத்தரவால் குழம்பிய தொண்டர்கள்

seeman_1853399h‘சட்டசபைத் தேர்தலில் பா.ம.கவையும் தே.மு.தி.கவையும் விமர்சிக்கப் போவதில்லை’ என அதிரடியாக முடிவெடுத்திருக்கிறார் சீமான். நேற்று கட்சி நிர்வாகிகளிடம் அவர் பேசிய பேச்சு அதிர்வலையைக் கிளப்பியிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய சீமான், கூட்டம் முடிந்ததும் நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் பற்றி நம்மிடம் விவரித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர், “பொதுக் கூட்டம் முடிந்த பிறகு இரவு பத்து மணிக்கு மேல் எங்களை அழைத்துப் பேசினார் சீமான். அப்போது, ‘தேர்தல் பிரசாரம் மக்களிடம் எப்படி எடுபடுகிறது?’ என இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தவர், ஒருகட்டத்தில், ‘விஜயகாந்தையும் ராமதாஸையும் விமர்சித்துப் பேசுவதில்லை என முடிவெடுத்திருக்கிறேன்’ எனச் சொல்ல, நாங்கள் அதிர்ந்து போனோம். பிறகு அவரே, ‘ இந்தத் தேர்தலில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவருக்கும் எதிராக சீமான் நிற்கிறார் என்ற தோற்றம்தான் புதிய வாக்காளர்களை நம் பக்கம் கொண்டு வரும். தே.மு.தி.கவையும் பா.ம.கவையும் விமர்சிப்பது நமக்கு கூடுதல் சுமைகளைத் தருகிறது. தேவையற்ற காலவிரயம்தான் ஏற்படுகிறது. 2006-ம் ஆண்டு தேர்தலில் மாற்று என்று சொல்லிக் கொண்டு விஜயகாந்த் வந்தபோது, களத்தில் அவருக்கு எதிராக பெரிய போட்டியாளர்கள் இல்லை. அதனால் அவரால் கணிசனமான அளவுக்கு ஓட்டு வாங்க முடிந்தது.

அடுத்த வரவிருக்கிற எம்.பி தேர்தலில், ‘நாங்கள் யாரோடும் கூட்டு சேர மாட்டோம்’ என தே.மு.தி.க அறிவிக்கவில்லை. ஆனால், நாம் தமிழர் கட்சியோ, ’20 பெண் வேட்பாளர்கள், 20 ஆண் வேட்பாளர்களோடு தனித்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும்’ என அறிவித்துவிட்டோம். இந்தத் துணிச்சல் இவர்களுக்கு வரப் போவதில்லை. சென்னையில் மோடி பேசும்போதுகூட, ஜெயலலிதா, கருணாநிதி பெயரைக் குறிப்பிட்டுப் பேசவில்லை. காரணம். இந்த இரண்டு கட்சிகளில் ஏதாவது ஒன்று நம் பக்கம் வரும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. திராவிட அரசியலை முற்றாக எதிர்க்கும் நாம் தமிழர் கட்சி, ஒருபோதும் இவர்களோடு கூட்டுச் சேரப் போவதில்லை. அதைப் பற்றிப் பேசுவதே அவசியமற்றது. மாற்று என்று சொல்லிக் கொண்டு களத்தில் நிற்கிற விஜயகாந்த், கடந்த தேர்தலில் அ.தி.மு.கவோடு அணி சேர்ந்தவர்தான். இவரது பேச்சையெல்லாம் மக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. மக்கள் நலக் கூட்டணியின் மற்ற கட்சிகளும், தி.மு.க, அ.தி.மு.கவால் கழித்துப் போடப்பட்ட கட்சிகள்தான். இவர்கள் மாற்று என்று பேசுவது எல்லாம் எடுபடாது.

அதேபோல், கடந்த தேர்தலில் தி.மு.க கூட்டணியில் முப்பது இடங்களை வாங்கிய பா.ம.க, இன்றைக்கு சோப் போட்டு குளித்துவிட்டு, ‘நாங்கள்தான் உண்மையான மாற்று’ என்று பேசுவதை வன்னிய மக்களே நம்பவில்லை. இவர்களைப் பற்றிப் பேசுவதால் நமக்கு எந்தப் பலனும் இல்லை. நம்முடைய எதிரி கருணாநிதி, ஜெயலலிதா மட்டும்தான். இவர்களை வலுவாக எதிர்ப்பதன் மூலம் புதிய வாக்காளர்கள் நம் பக்கம் அணி திரள்வார்கள். தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்கள்கூட இல்லை. அதுவரையில் என்னுடைய பிரசாரம் ஜெயலலிதா, கருணாநிதிக்கு எதிராகத்தான் இருக்கும். இதுவரையில் விஜயகாந்துக்கு எதிராகப் பேசியது போதும்.

அதேநேரத்தில், தேவைப்படும் இடங்களில் மட்டும் இவர்களின் கூட்டணி மாறும் போக்கையும் ஊழலுக்கு துணை போனதைப் பற்றியும் விமர்சனம் செய்யுங்கள். மாற்று என்பது நாம் தமிழர் மட்டும்தான். மற்றவர்கள் ஏமாற்று என்பதை அனைத்து வாக்காளர்களுக்கும் புரியும் வகையில் பிரசாரத்தைத் தீவிரப்படுத்துங்கள்’ என உத்தரவிட்டார். அவரது இந்த திடீர் வியூகத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்றார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*