வலுக்கிறது உட்கட்சி சண்டை – மைத்ரியின் அனுமதியின்றி கட்சியின் மத்தியக்குழு கூட்டம் நடத்தத் தடை

(கொழும்பு – 15.07.2015) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அனுமதியின்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுவின் கூட்டம் நடத்துவதைத் தடைசெய்யும் உத்தரவொன்றை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிறப்பித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளரான பிரசன்னா சோலங்க ஆராச்சி தாக்கல் செய்த மனுவொன்றை ஆராய்ந்த நீதிமன்றம் இந்த தடைஉத்தரவை பிறப்பித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பிற்கு அமைய கட்சியின் மத்தியக்குழுவின் கூட்டங்களை அழைக்கும் அதிகாரம் கட்சித் தலைவரான மைத்ரிபால சிறிசேனவுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இன்று கட்சித்தலைவரின் அனுமதியின்றி மத்தியக்குழுக் கூட்டத்தை கூட்டுவதற்கு கட்சியின் செயலாளர் அனுரா பிரியதர்ஷன யாப்பா தீர்மானித்துள்ளதாகக் கூறிய மனுதாரர் இந்த கூட்டம் சட்டவிரோதமானதென்று தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
எனவே அதனைத் தடைசெய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் அவர் வேண்டுகொள் விடுத்தார்.
அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜூலை மாதம் 29ஆம் தேதி வரை கட்சித் தலைவரின் அனுமதியின்றி மத்தியக்குழுக் கூட்டங்களை அழைப்பதைத் தடைசெய்யும் உத்தரவையும் பிறப்பித்தார்.
நடக்கவிருக்கும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட அனுமதியளிக்கப்பட்டிருப்பதை மைத்ரிபால சிறிசேன பகிரங்கமாக எதிர்த்திருக்கும் பின்னணியில், அவருக்கும் மஹிந்தவுக்கும் இடையிலான உட்கட்சி மோதல் இந்த வழக்கின் மூலம் நீதிமன்றம் வரை சென்றிருப்பதாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*