வலி.வடக்கில் வதை முகாம் ?

கடந்த மாதம் 29 ஆம் திகதி மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்ட வலிகாமம் வடக்கின் வீமன்காமம் பகுதியில் உள்ள இரு வீடுகள் இராணுவ சித்திரவதை முகாமினை ஒத்ததாக இருந்ததாக அங்கு சென்று பார்வையிட்டுத் திரும்பிய மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 
அவ் இரு வீடுகளில் ஒரு வீட்டின் அறை ஒன்று , இருட்டறையாக பயன்படுத்தப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டவர்கள் , சித்திரவதைக்கு உட்படுத்த பட்டு இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இரு வீடுகளின் உட்பகுதி கூரை பகுதி முட்கம்பிகள் கொண்டு வேயப்பட்டு காணப்பட்டுள்ளதோடு அதில்  இருட்டறையாகப் பயன்படுத்தப்பட்ட குறித்த அறையின் மேற்பகுதி கூரை முட்கம்பிகள் கொண்டு மேயப்பட்டு காணப்படுவதுடன், அறையின் மேற்பகுதியை சுற்றி வெளி வெளிச்சம் வராதவாறு தகரம் அடிக்கப்பட்டு மறைக்கபட்டு உள்ளது. சுவர்களில் ஆணிகள் அடிக்கப்பட்டு உள்ளன. அத்துடன் அறைக்கு மின் இணைப்பும் வழங்கப்பட்டவில்லை.

 குறித்த இருட்டறையின் கதவில் ” எல்லா தர அதிகாரிகளும் உள் நுழைய முடியாது” என சிங்களத்தில் எழுதி ஒட்டப்பட்டு உள்ளதோடு அந்த வீட்டின் மற்றொரு அறை வாசலில் “வெளியாட்கள் உட் செல்ல தடை” என சிங்களத்தில் எழுதப்பட்டு உள்ளது. அந்த அறையின் வாசலில் “எம்.ஐ. ரூம்” என ஆங்கிலத்தில் எழுதபட்டு உள்ளன, அந்த வீட்டின் மற்றுமொரு அறையில் இராணுவ சீருடைகள் காணப்பட்டன.
விசாரணை தேவை 
அந்த வீடுகளில் கைது செய்யப்பட்டவர்கள் கடத்தப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்துள்ள tலி வடக்கு மீள்குடியேற்ற தலைவர் ச.சஜீவன் வதைமுகாம்கள் தொடர்பில் விசாரணை நடாத்தப்பட வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளார். 
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 
கடந்த 1990ம் ஆண்டு இப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த வேளையிலும் பின்னர் 1996ம் ஆண்டுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தை இராணுவத்தினர் கைப்பற்றியது தொடக்கம் 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வரும் வரையிலான காலப்பகுதியில் யாழில் பெருமளாவான இளைஞர்கள் யுவதிகள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் பலர் காணாமல் போயுள்ளனர். அவ்வாறு கடத்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டவர்கள், அக் கால பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த இந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டு இருக்கலாம். என சந்தேகிக்கின்றேன், இராணுவத்தினரின் வதைமுகாம்கள் பற்றிய விசாரணைகள் முன்னெடுக்க படவேண்டும். ஆணைக்குழுவின் சாட்சியங்களின் போது பலர் தமது பிள்ளைகள் , கணவன் மாரை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர் காணாமல் போயுள்ளனர் என சாட்சியம் அளித்துள்ளனர். எனவே இவை தொடர்பில் நிச்சயமாக விசாரணைகள் நடாத்தபட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என  தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*