வடக்கில் சிதைக்கப்படும் நிதிக் கட்டமைப்பு – மிரமிட் கட்டமைப்பிற்குள் நுளைந்து நடத்தப்பட்ட ஒரு வேட்டை (பாகம் 2)

vakeesam-artical“தனியார் நிறுவனங்களிலும் அரச நிறுவனங்களில் உத்தியோகம் பார்த்து மாத வருமானம் 40 ஆயிரத்தைக்கூடத் தாண்டுவதில்லை. நீங்கள் ஒரு மாத்தில் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை பாட் ரைம் வேர் ஆக செய்தே உழைத்துக்கொள்ளலாம். இதுக்கு நீங்க என்ன செய்யணும்னா 1.5 புள்ளி மதிப்புள்ள பொருளை கொள்வனது செய்து அதை இரண்டு பேருக்கு அறிமுகப்படுத்தினால் போதும்.”
இவ்வாறுதான் தொடங்குகின்றன அந்த நிறுவனப் பணியாளர்களின் உரையாடல்கள். யாழ்ப்பாணத்தை வாள் வெட்டுக்களும் கஞ்சா விற்பனைகளும் மட்டும் சிதைத்துப்போடவில்லை. லீசிங் தரகர்கள் முதல் வீடு தேடி வந்து பொருள் விற்றுச் செல்லும் நபர்கள் வரையாக குடாநாட்டின் நிதிக் கட்டமைப்புக்கள் சிதைக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறன.
பிரமிட் கட்டமைப்புசார் நிதி மோசடிகள் யாழ்.குடாநாட்டில் அவ்வப்போது நடைபெற்று வருவதாக  நண்பர்கள் கூறக் கேள்விப்படுவதுண்டு. அந்த வலையமைப்பைத் தேடும் எண்ணம் சக நண்பன் ஒருவனது தூண்டுதலால் மெல்ல துளிர்விட்டது.

எங்கெங்கு கூட்டங்கள் நடத்துகின்றார்கள் எவ்வாறு ஆட்களை தெரிவுசெய்கிறார்கள். கட்டமைப்பிற்குள் நுளைவது எப்படி என்ற தகவல்களை அறிந்துகொண்ட நண்பனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வருகின்றது. இன்று வேட்டை ஒன்று சிக்கியிருக்கிறது. புறப்பட்டு வா என்று. கடும் மழையையும் பொருட்படுத்தாது கே.கே.எஸ் வீதி வழியாகப் பறக்கிறது மோட்டார் வண்டி.

எப்படிக் கட்டமைக்கிறார்கள் – உள்நுளைவது சுலபமா?
அந்தக் கட்டமைப்பிற்குள் நுளைவதும் அவர்களின் கூட்டங்களில் பங்குபற்றுவதும் அவ்வளவு சாதாரண விடையமல்ல. அவர்களின் கட்டமைப்பில் அண்மைக்காலத்தில் இணைந்த நபர்கள் ஒவ்வொருவரிடமும் நூறு பேரின் விபரங்கள் திரட்டப்பட்டு விபரங்கள் கொடுத்த நபர்களிடம் அந்த நூறூபேர்கள் பற்றி விசாரிக்கப்படுகின்றது. எவர்கள் எப்படியானவர்கள் எந்த துறை சார்ந்தவர்கள். எதிர்த்துக் கேள்வி கேட்கும் வகுதியினரா தமது வியாபாரத்திற்கு சரியானவர்களா, என பல கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களிலிருந்து சுமார் 30 பேர் வரையானவர்கள் தெரிவுசெய்யப்பட்டு மூளைச் சலவைக்காக திருமண மண்டபங்களிற்கோ, ஹோட்டல்களிற்கோ அழைக்கப்படுகின்றார்கள்.

அவர்களிடம் நுளைவுக் கட்டணமாக 250 ரூபா அறவிடப்படுகின்றது. அங்கு மேற்கொள்ளப்படும் பிரச்சார நடிவடிக்கையின் போது இவர்கள் அவதானிக்கப்படுகின்றார்கள். கூட்டங்களில் எதிர்த்துக் கேள்வி கேட்பவர்கள் அவர்கள் கதைகள் கேட்டு கண்ணீர் சிந்துபவர்கள் என அவதானிக்கப்பட்டு பிரச்சாரம் முடிந்ததும் தங்கள் அவதானிப்புகளின் கணிப்புக்களின் படி குறிப்பிட்டவர்களை தனித்தனியாக அழைத்து மேலும் மூழைச் சலவை செய்யப்படுகின்றது. அவர்களிலிருந்து சுமார் 15 பேர் வரை தெரிவுசெய்யப்பட்டு அவர்களிற்கு சில பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

பின்னர் அவர்களிடம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா (1.5 புள்ளி) பணம் பெறப்படுவதோடு நீர் பில்டர் அல்லது சோலர் உள்ளிட்ட மின் உபகரணம் ஒன்று வழங்கப்படுகின்றது. அதனை அவர் வேறு இரு நபர்களிற்கு காட்டி அவர்கள் இருவரைம் அவ்வாறான மின் சாதனங்களை ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் கொடுத்து வாங்கிக்கொள்ளச் செய்ய வேண்டும். அதன் மூலம் அவரிற்கு 13 ஆயிரத்து 500 ரூபா கொமிசனாகக் கிடைக்கு என கூறப்படுகின்றது. பின் அவர்கள் வேறு வேறு இருவரிற்கு அறிமுகம் செய்வார்கள். அதன்போது முதலாம் நபரிற்கு 27 ஆயிரம் ருபாவும் இரண்டாம் பிரமிட் நபர்களிற்கு தலா 13 ஆயிரத்து 500 ரூபாவும் கிடைக்கும் என பிரச்சாரம் செய்யப்படுகின்றது. இவ்வாறாக பிரமிட் முறையில் வளர்ந்து செல்கின்றது. அவர்களின் வியாபரம்.
அங்குதான் உதைக்கத் தொடங்கியது இவர்களின் கணக்கு. பொருள் தரமானதா? கொடுக்கும் விலைப் பெறுமதி தானா? என்ற பல்லாயிரம் கேள்விகளிற்கு அப்பால் எந்த வித விளம்பரச் செலவுகளுமற்று நடக்கும் இந்த வியாபாரத்தில் பொருள் விற்பனைக்காக கொடுக்கப்படுவதாகக் கூறப்படும் கமிசன் 10 வீதம் கூட இல்லை.
—————————————————–
இந்த வியாபாரத்திற்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் நெற்வேக் மார்க்கட்டிங். 
—————————————————————————
தென்னிலங்கையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்த நிதி மோசடியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த மோசடியில் குடாநாட்டைச் சேர்ந்த பலர் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கின்ற அதேவேளை, மேலும் பலர் நாள்தோறும் சிக்கிக்கொண்டிருக்கின்றனர்.
குடாநாட்டிலுள்ள பிரபல மண்டபங்களிலும் ஹொட்டல்களிலும் கூட்டங்கள் நடத்தி இதற்குள் மக்கள் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கே நுழைவுக் கட்டணமாக 250 ரூபா அறவிடப்படுகின்றது.
குறிப்பாக தென்னிலங்கையைச் சேர்ந்த அந்த நிறுவனத்தின் நிதிசார் பிரமிட் கட்டமைப்பில் இணைகின்ற ஒருவர் சுமார் ஒரு இலட்சத்து நாற்பது ஆயிரம் (140,000) ரூபாவைச் செலுத்தவேண்டும். இவ்வாறு செலுத்தியவுடன் அவருக்கு வெறும் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான சோலர் அல்லது அதற்கு இணையான மின் உபகரணம் ஒன்று வழங்கப்படும்.
இதன் பின்னர் இணைந்த அந்த நபர் மேலும் இரண்டு பேரை அதற்குள் இணைக்கவேண்டும். பின்னர் அந்த இருவரும் ஆளுக்கு இருவரை இணைக்கவேண்டும். இவ்வாறு இணைகின்ற ஒவ்வொருவரும் குறித்த நிதிக் கம்பனிக்கு 140,000 ரூபாவைச் செலுத்தவேண்டும். இப்படியே இணைத்துக்கொண்டு செல்லும்போது அது பிரமிட் போன்று வளர்ந்து செல்லும்.
குறித்த நிதிக் கம்பனியின் இந்த செயற்றிட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்திருக்கின்றனர். கிராமப் புறங்களில் உள்ள மக்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி அவர்களை இந்த திட்டத்தில் இணைத்து அவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வருகின்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
இதில் பிரதானமாக இருக்கின்ற ஒருசில நபர்களுக்கு லட்சக்கணக்கான பணம் கிடைக்கும். ஆனால், ஏனையோர் ஏமாற்றமடைவதை தடுக்க முடியாமல்போகும். தங்கள் சுகபோகங்களுக்காக அவர்கள் மற்றவர்களை இந்த திட்டத்திற்குள் மாட்டிவிடுகின்றனர். இந்த உண்மை தெரியாமல் பல பொதுமக்கள் வங்கிகளில் கடன் பெற்று இந்த திட்டத்தில் இணைந்து வருகின்றமை வேதனைக்குரியது.

பிரமிட் மோசடி குறித்து நண்பர் ஒருவரிடம் பேசினோம்
பிறரிடம் கடன் பெற்று இந்த திட்டத்தில் இணைந்த கஷ்டப்பட்ட மக்கள் பலர் இன்று ஏமாற்றமடைந்திருக்கின்றனர். இந்த திட்டத்தின் சூட்சுமம் அறியாமல் கஷ்டப்பட்ட ஒரு விதவைத் தாயை இந்த திட்டத்தில் இணைந்த எனது நண்பர்கள் சிலர் அந்த தாய்க்கு இன்றுவரை தங்கள் சொந்தப் பணத்தில் மாதாந்தம் 500 ரூபாவைச் செலுத்திக்கொண்டிருக்கின்றனர் என்கிறார் அவர்.
பிரமிட் மோசடி குறித்த எமது பாகம் ஒன்று கட்டுரையைப் படித்துவிட்டு யாழ்ப்பாணத்திலுள்ள மருத்துவர் ஒருவர் எம்மிடம் பேசினார். இவர்கள் ஏழைகளை ஏமாற்றி உழைக்கும் இந்த நிதி மோசடித்திட்டத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக ஒரு கவர்ச்சியான மாயைத் தோற்றத்தை உருவாக்குவதற்காக மருத்துவர்கள் மற்றும் பெரிய பதவிகளில் உள்ளவர்களை கௌரவ பதவிகள் கொடுத்து இத் திட்டத்தில் இணைத்து வைத்திருப்பதாகவும் அவர்களையே வெளிநாட்டுச் சுற்றுலா உள்ளிட்டவற்றிற்கு அழைத்துச் செல்வதாகவும் குறிப்பிட்டார்.

இதனை நம்பி பிரமிட்டுக்குள் நுளையும் அப்பாவி மக்கள்அதிலிருந்து வெளிவர முடியாது சிக்கித் தவிக்கிறார்கள். பிரமிட் மோசடி குறித்த தகவல்களை உள்நுளைந்து திரட்ட நாம் களமிறங்கியபோது வைத்திய நண்பர் கூறியது போலவே சிங்கப்பூரிற்கு அழைத்துச் சென்றதாக சிலரது புகைப்படங்களை காட்டுகிறார்கள். சிலரை அழைத்துவந்து அவர்கள் வாயால் இந்த மாங்கற்றிங்கால்தான் நாம் கார் வாங்கினோம், வெளிநாடு சென்றோம் வீடு கட்டினோம் என கூறவைக்கிறார்கள். சிலரது உணர்ச்சிகர வசனங்களைக் கேட்டு பலர் விம்மி வெடித்து அழுததையும் காண முடிந்தது. இப்படியானவர்கள்தான் இலகுவில் இந்த பிரமிட் வியூகத்திற்குள் சிக்கிவிடுகின்றார்கள்.

இவ்வாறான வியாபரா நடவடிக்கைகளுக்குள் வெறும் வார்தை ஜாலங்களை நம்பி எதுவித விசாரிப்புக்களுமின்றி உள்நுளைவதும் பின்பு வெளிவர முடியாது சிக்கிவறுமையில் வாடுவதும்தான் இன்று யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் தலைநகரங்களில் தொடர்கதையாகிவிட்டது. இந்த பிரமிட் மோசடி பலரை தற்கொலை முடிவுவரை கொண்டு சென்றிருக்கிறது.

மக்களே ! கடையில் ஒரு புடவையை வாங்கும்போது கூட பல கடைகள் ஏறி இறங்கி விலைகள் விசாரிக்கும் நீங்கள் இவ்வாறான மோசடிக் கும்பல்களிடம் சிக்கி ஏமாந்துபோவதுதான் புரியாமலுள்ளது.

(வேட்டை தொடரும்)

– கலியுகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*