சற்று முன்
Home / செய்திகள் / வடக்கின் வன வளங்களை பிரபாகரனே பாதுகாத்தார் – இன்று அரசியல்வாதிகள் அழிக்கிறனர் என்கிறார் மைத்திரி

வடக்கின் வன வளங்களை பிரபாகரனே பாதுகாத்தார் – இன்று அரசியல்வாதிகள் அழிக்கிறனர் என்கிறார் மைத்திரி

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் வடக்கில் வன வளத்தை பாதுகாத்தார். இதனை அவர் செய்த நல்லதொரு விடயமாக கருதலாம்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சர்வதேச வன பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நேற்று (21) முற்பகல் திம்புலாகலை வெஹெரகல மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு,

“நாட்டில் தற்போதுள்ள வன அடர்த்தியை பாதுகாப்பதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படாவிட்டால் இன்னும் 15 வருடங்களில் வன வளத்தை இழக்க வேண்டிய அபாயம் ஏற்படும்.

நாட்டின் எஞ்சியுள்ள 28% வீத வன அடர்த்தியில் பெருமளவு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே உள்ளது. போர்காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் வனவளத்தை பாதுகாத்தார். இதனை அவர் செய்த நல்லதொரு விடயமாக கருதலாம்.

எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் நாட்டின் வன அடர்த்தியை 32% வீதமாக அதிகரிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகொள்வதற்கு 1,48000 ஹெக்டெயார்களில் புதிதாக மரநடுகை செய்யப்பட வேண்டியுள்ளது.

இதில் வருடம் ஒன்றுக்கு 15,000 ஹெக்டெயர்களில் மரங்கள் நடப்பட வேண்டியுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் மற்றும் தனியார் துறை, அரச சார்பற்ற நிறுவனங்கள், பாடசாலை பிள்ளைகள் உள்ளிட்ட அனைத்து பிரஜைகளும் ஒன்றிணைய வேண்டும்.” என்று கூறினார்.

எழுச்சிபெறும் பொலன்னறுவை

இன்று முற்பகல் திம்புலாகல வெஹெரகல மகா வித்தியாலயத்திற்கு சென்ற ஜனாதிபதியை அப்பாடசாலை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

பாடசாலையில் உள்ள பௌத்த நிலையத்திற்கு சென்று சமயக் கிரியைகளில் ஈடுபட்டதன் பின்னர் நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து வைத்த ஜனாதிபதி , புதிய வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்ததை தொடர்ந்து அதனைப் பார்வையிட்டார்.

“எழுச்சிபெறும் பொலன்னறுவை” அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக சிறந்ததோர் சூழலை ஏற்படுத்திக்கொடுத்து அனைத்து வகுப்பறைகளையும் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் ஜனாதிபதி அவர்கள் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி சர்வதேச வன பாதுகாப்பு தின நிகழ்விலும் கலந்துகொண்டார்.

“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் 07 பாடசாலைகளுக்கு புத்தக பொதிகளை வழங்குதல், மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்குதல், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டு உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல நிகழ்ச்சித்திட்டங்கள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

மேலும் வனப் பாதுகாப்பு திணைக்களத்தில் சேவையில் ஈடுபட்டிருந்தபோது மரணமடைந்த, அங்கவீனமுற்றவர்களுக்கும் சிங்கராஜ வனத்தில் இடம்பெற்ற மரபணு கொள்ளையை தடுப்பதற்காக பங்களிப்பு செய்த அதிகாரிகளையும் பாராட்டி சான்றிதழ்களும் பரிசில்களும் ஜனாதிபதியால் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

சுற்றாடல்துறை இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, மகாவலி அபிவிருத்தி சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, வனப் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் டப்ளியு.ஏ.சீ.வேரகொட ஆகியோரும் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com