சற்று முன்
Home / பிரதான செய்திகள் / கறுப்பு ஜூலை – இனக்கலவரமல்ல, இனவழிப்பு!

கறுப்பு ஜூலை – இனக்கலவரமல்ல, இனவழிப்பு!

கறுப்பு ஜூலை எனும் இனப்படுகொலையை ஊடகங்களும் நமது வரலாறுகளும் கறுப்பு ஜூலைக் கலவரங்கள் என்றே அழைத்து வருகின்றன. உண்மையில் அது கலவரமல்ல. இனவழிப்பு. 1958 இனப் படுகொலையுடனே அது தொடங்கிவிட்டது. கறுப்பு ஜூலை நடைபெற்று 37 வருடங்கள் நிறைவடைகின்றன. அக் காலகட்டத்தில் மாத்திரமின்றி அதற்குப் பிந்தைய கால ஈழ மக்களாலும் மறக்க முடியாத ஒரு வடுவாக நெஞ்சில் காயாத இரத்தமாக அவ் இனவழிப்பு ஞாபகங்கள் படிந்துள்ளன. உரிமையை மறுக்கும் ஆயுதமாக இன அழிப்பை சிங்கள தேசம், கையில் எடுத்த போதே தமிழர்கள் தனிநாடு கோரிப் போராடத் தொடங்கினர் என்பதற்கு கறுப்பு ஜூலையும் ஒரு சாட்சி.

இலங்கைத்தீவு வெடித்து இரண்டு நிலங்கள் என்ற தேசங்களாக உள்ளன என்ற உண்மையை உணர்த்தியது கறுப்பு ஜூலை. சிங்களவர்களுடன் தமிழர்கள் ஒரு பொழுதும் சேர்ந்து வாழ முடியாது என்கிற அனுபவக் கொடுமை நிகழ்ந்தது. கறுப்பு ஜூலையின் சாட்சியங்கள் இன்றும் நமக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கறுப்பு ஜூலைக் காலத்தில் குழந்தைகளாயும் கருவுற்றும் இருந்தவர்கள் இன்றும் நமது மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு தமிழரும் தனக்கு புத்தி ஏற்படுகிற காலத்தில் தனது இனத்தை குறித்து அறியத் தொடங்கும் காலத்தில் கறுப்பு ஜூலையைத்தான் முதலில் படிக்கின்றனர்.

1983இல் திருநெல்வேலியில் விடுதலைப் புலிகள் மேற்க் கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்கள் கொழும்பிற்குக் கொண்டு செல்லப்பட்டன. இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் நடந்த போரில் இறந்த இராணுவத்தை வைத்து, தமிழர்கள் சிங்களவர்களை கொன்று விட்டார்கள் என்று செய்திகளை அரச தரப்பினர் பரப்ப, அதனால் கொதித் தெழுந்த சிங்களக் காடையர்கள் கொழும்பில் தமிழர்கள் வாழ்ந்த இடங்கள் எங்கும் தேடித் தேடி அழிக்கத் தொடங்கினார்கள். கொழும்பு நகரமே ஈழத் தமிழர்களின் இரத்தத்தில் நனைந்தது.

Shadows of Black July and post-war reconciliation | Daily FT
கொழும்பில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு எதிர்பாராத வகையில் இந்த வன்முறை மேற்கொள்ளப்பட்டது. கொழும்பு நகரில் வேரோடியிருந்த அவர்களின் வாழ்க்கை பலமாகவும் செழிப்பாகவும் இருந்தது. தமிழர்களோடு தமிழர்களிடமிருந்த வர்த்தக நிறுவனங்களும் வீடுகளும் இலக்கு வைக்கப்பட்டன. தமிழர்கள் தெருத் தெருவாக பிடித்து வெட்டியும் அடித்தும் கொல்லப்பட்டார்கள். தமிழர்களின் வீடுகளைத் தேடிச் சென்று காடையர்கள் படுகொலைகளை நிகழ்த்தினார்கள். இதுதான் தருணம் என்று வர்த்தக நிலையங்களை அடித்து நொருக்கி எறித்தார்கள். வன்முறைத் தாக்குதல்களில் தமிழர்களின் சொத்துக்களையும் சூறையாடினார்கள். கொழும்பில் உயிரைக் காக்க தமிழர்கள் அலைந்தார்கள்.

மத நிறுவனங்களிலும் பாடசாலைகளிலும் உயிரை காக்க தஞ்சமடைய தமிழர்கள் ஓடினார்கள். சிங்களக் காடையர்களோ தமிழர்களை விரட்டி விரட்டி வெட்டிக் கொன்றார்கள். வயது முதிர்ந்தவர்கள் முதல் அனைவரும் இரக்கமற்ற முறையில் துன்புறுத்தி கொல்லப்பட்டார்கள். சிங்களக் காடையர்களுடன் புத்த பிக்குக்களும் பொல்லுத்தடிளுடனும் வாட்களுடனும் தமிழர்களைத் தேடித் தேடிக் வெட்டி அடித்துக் கொல்ல அலைந்தார்கள். சுற்றிச் சுற்றி நடத்தப்பட்ட இந்தப் படுகாலை ஈழத் தமிழர்களை உலுப்பிப் போட்டது. தமிழ் இனத்தில் பெரும் காயத்தை கீறியது.

கறுப்பு ஜூலை – 1983-இல் இலங்கை …
இந்த வன்முறை நாட்களில் இலங்கை முழுவதும் வன்முறைகள் நடத்தப்பட்டன. யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து ஜூலை 24 மற்றும் 25ஆம் நாட்களில் இராணுவத்தினரால் படுகொலைகள் நடத்தப்பட்டன. திருநெல்வேலிப் பகுதியில் 51 தமிழர்கள் புலிகள் என்ற பேரில் படுகொலை செய்யப்பட்டார்கள். இதைப்போலவே வெலிக்கடைச் சிறைச்சாலையிலும் தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டார்கள். 53 தமிழ் அரசியல் கைதிகள் சக சிங்களக் கைதிகளால் துன்புறுத்திப் படு கொலை செய்யப்பட்டார்கள். ஜூலை 25 அன்று 33 கைதிகளும் ஜூலை 28 அன்று 18 கைதிகளும் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்தப் படுகொலையின் பொழுதே குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் முதலிய போராளிகளும் படுகொலை செய்யப்பட்டனர். சிறைச்சாலையும் தமிழ் போராளிகளின் இரத்தத்தில் நனைந்தது.

இந்த இனப் படுகொலை யாவும் மிகவும் திட்டமிட்டே மேற் கொள்ளப்பட்டிருக்கிறது. தமிழ் இனத்தை அழித் தொழிக்கவும் இலங்கைத்தீவிலிருந்து துடைத் தெறியவும் ஈழத் தமிழர்களின் அரசியலை முடக்கவும் இந்தப்படுகொலை திட்டமிட்டபடி நடத்தப்பட்டது என்பதே உண்மை. இது ஒரு அரிசியல் படுகொலையாகவே நடந்திருக்கிறது. சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக ஈழப் போராட்டம் மலர்ந்திருந்த அந்த நாட்களில் போராட்டத்தை முடக்கவே இந்தப்படுகொலை அப்போதைய அரசால் மிகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது. சுகந்திர இலங்கை எனக் கூறப்பட்ட காலத்தின் பின்னர் தமிழர்களின் அரசியலை முடக்கவும் இலங்கைத் தீவிலிருந்து தமிழர்களைத் துடைக்கவும் இத்தகைய வன்முறைத் தாக்குதல்கள் முன்னதாகவே தொடங்கிவிட்டன. அதன் உச்ச கட்டமாக கறுப்பு ஜூலை அரங்கேறியது.

கறுப்பு யூலை திட்டமிட்ட …
1983 ஜூலை இனப்படுகொலை நடந்து இன்று முப்பத்தியேழு வருடங்கள் ஆகிவிட்டன. இன்று வரையில் தமிழ் இனத்தை அழிப்பது தொடர்பில் இலங்கையை ஆண்ட எந்தவொரு சிங்கள அரசுக்கும் குற்ற உணர்வு வரவில்லை. மாறாக தொடர்ந்தும் ஒவ்வொரு அரசுகளும் இனப்படுகொலைகளையே ஒன்றை ஒன்று விஞ்சி மேற்கொள்கிறது. முப்பத்தேழு வருடங்களாக இல்லாத நல்லிணக்கமும் புரிதலும் இனி எப்போது ஏற்படும்? இன்னமும் ஈழத் தமிழர்கள் அழித்தொழிக்கபபட வேண்டியவர்களாகவும் எந்த ஒரு உரிமையுமற்றவர்களாகவே ஒடுக்கப்படுகின்றனர். முப்பது வருடங்களாக ஒடுக்கி அழிக்கும் ஒரு தரப்போடு இணைந்து வாழச் சொல்வது என்பது இனப்படுகொலைகளினால் அழிந்து போகச் சொல்வதே.

இவை எல்லாமே இணைந்த தேசத்தில் சிங்கள தேசம் ஈழ மக்களுக்கு உரிமைகளை பகிரவும் சமமாக நடத்தவும் மறுத்திருக்கும சூழ்நிலையை மாத்திரம் உணர்த்தவில்லை. சிங்கள தேசம் இந்தப் படுகொலைகள் யாவற்றையும் நிறுத்தத் தயாரில்லை என்பதையும் தமிழ் மக்களை ஒழித்தே தீருவோம் என்பதில் கொண்டிருக்கும் தீவிரத்தையுமே நமக்கு உணர்த்துகின்றன. இவ்வளவு படுகொலைகளையும் செய்தவர்கள் இன்னமும் ஒடுக்கி அழிக்க மூர்க்கத்தோடு இருக்கும்போது ஒடுக்கப்படும் ஒரு இனம் இதையெல்லாம் எவ்வாறு மன்னிப்பது? ஒடுக்கி அழிக்கப்புடும் தரப்பு நல்லிணக்கத்திற்கு தயாரில்லை என்றபோது நல்லிணக்கம் என்பதே இன அழிப்பு எனும்போது இழந்த தேசத்தை மீள நிறுவி வாழ்வதே ஒரு இனத்திற்கு பாதுகாப்பானது.

கறுப்பு யூலை (Black July) இலங்கையில்
இலங்கைத் தீவில் தமிழ் இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கறுப்பு ஜூலை படுகொலை நிகழ்வும் அதற்கு முன்னரான நிகழ்வுகளும் தெற்கிலிருந்த தமிழர்களை வடக்கு கிழக்கு நோக்கி செல்லத் தூண்டியது. அவர்கள் சிங்களப்பகுதிகளை விட்டு தமிழர் பகுதிகளுக்கு வந்தார்கள். இலங்கைத்தீவு இரண்டாக உடைந்தது. மலையகத் தமிழர்களில் கணிசமானவர்களும் வடக்குக் கிழக்கை வந்தடைந்தார்கள். எனினும் தமிழர்களுக்கு அவர்களது நிலம் தேவை என்பதையும் உரிமை தேவை என்பதையும் விடுதலை வேண்டும் என்பதையும் கறுப்பு ஜூலையினால் ஏற்பட்ட துயரம் வலிமையாக வரைந்திருக்கிறது. இத்தனை ஆண்டுகள் கடந்தென்ன என்றும் ஈழத் தமிழ் இனத்தின் நெஞ்சில் காயாத இரத்தமாக கறுப்பு ஜூலையும் வலித்துக் கொண்டுதானிருக்கிறது.

கவிஞர் தீபச்செல்வன்

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி ஆற்றிய உரை !

பயங்கரவாதம் என்பது, உலகளாவிய அச்சுறுத்தல் என்பதோடு, அதனை வெற்றிகொள்ள வேண்டுமாயின், விசேடமாகப் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு, ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com