முற்றுப்புள்ளியா? சினிமா மொழியாக வெற்றி பெற்றதா? – தேவானந்

முற்றுப்புள்ளியா? பார்க்கும் வாய்புக் கிடைத்தது. பல எதிர்பார்ப்புக்களின் மத்தியில் அரங்கு நிறைந்த பார்வையாளர்களோடு நானும் ஒருவனாக ……..
தொன்னூறுகளில் யாழ்ஸ்ரீதர் தியேட்டரில் ( இப்போ ஈ.பி.டி.பி அலுவலகம்) புலிகளின் ஒளிவீச்சு மாதா மாதம் நிகழ்வது வழமை. அவை குறித்த காலத்தின் நிகழ்வுகளை காணொலியாகத் தரும் முயற்சி. அதை பார்க்கும் வழமையைக் கொண்டிருந்தோம். இன்று கார்கிள் சதுக்கத்தில் புதிய தியேட்டரில் இருந்து முற்றுப்புள்ளியா? காணொலி பார்த்த போது அந்த நினைவுகள் ஏனோ வந்து போகின.
சம்பவங்களின் தொகுப்புக்களாக ஆவணப்படுத்தலாக கால சீரொழுங்கில் தொகுக்கப்பட்டவைகளாக ஒளிவீச்சு படங்கள் காணப்பட்டன.
முற்றுப் புள்ளியா? கால ஒழுங்கில் முன்னோக்கியும் பின்னோக்கியும் பயணிக்க முற்படுகிறது. இறுதி யுத்தம் அந்தக் காலத்தில் நடந்தவைகள். அதன் பின்னர் இன்று வரையான துயரங்கள். கதை முன்னும் பின்னுமாக நகர முற்படுகிறது . இந்த உத்தி நினைவுகளாகவும் கதைசொல்லலாகவும் பயன்படுத்தப் படுகிறது எனலாம்.
இராணுவ அத்துமீறல்கள், வரிப்புலிகள் , யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள், இராணுவ ஆக்கிரமிப்புக்கள், திட்டமிட்ட அடங்கு முறைகள், தன்னார்வத் தொண்டுப் பணியாளர்கள், அவர்களின் என்.ஜி.ஓ நிதிச் செயற்பாடுகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் ஆவணமாக்கல் முயற்சிகள், இதற்குள் மேலெழுந்த வாரியாக அவ்வப்போது செவிவழி வந்த கதைகள் ( இதில் கேள்விச் செவியன் ஊரைக்கெடுத்தான் என்பது போலவும்) அடங்கலாக இந்த மண்ணில் வாழாத மேல்தட்டு வர்க்கம் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி எமது பிரச்சினையை வியாக்கியானித்தல், இவற்றுக்கு மத்தியில் ஒரு “புலிக்காதல்“, பிரிதல், வேதனை, நீளும் துயரம் என பல விடயங்களை 108 நிமிடங்களில் சொல்ல முற்பட்டிருக்கிறது முற்றுப் புள்ளியா? இதில் அது வெற்றி பெற்றதா என்பது கேள்விக்குறியே?
இங்கு இலங்கை அரசு தடைசெய்த பேசாது தடுத்த விடயங்களை இந்தப் படம் பேச முற்பட்டிருக்கிறது. என்பது படக்குழுவின் துணிவை சுட்டுகிறது? அவர்களைப் பராட்டாமல் இருக்க முடியாது. அதே வேளை இத்தனை பட்டவர்த்தனமாக இலங்கை அரச படைகளை விமர்சிப்பதை எப்படி இலங்கை அரசு ஏற்றுக் கொள்கிறது. தனது கெடுபிடியை ஏன் தளர்த்தியது எனப்தற்காக கேள்வியும் இதில் அடங்கியுள்ளது?
“யுத்தம் கொடியது“ அதனை முன்னெடுக்கும் எந்த இராணுவமானாலும் அது கொடியது? மனிதபிமானமற்றது. கொடுரமானது. அதன் அடக்கு முறை பலமுகங்கள் கொண்டது. ஆக, இராணுவம் என்ற யுத்த இயந்திரம் மக்களை எப்போதும் குறிப்பாக யுத்த காலத்தில் சொல்லொணா முறையில் அழிவிற்கு இட்டுச் செல்லும். நாம் இரண்டு இராணுவ முகங்களை கண்டவர்கள். உலகிற்கு அகிம்சை போதித்தவர் காந்தி. காந்திய தேசத்தின் இராணுவமும் சிங்கள தேசத்தின் இராணுவமும் என்ன செய்தன என்பது தெரியும். இந்த இராணுவங்களோடு சமரசம் செய்யும் படைப்புக்கள் மக்கள் படைப்பககளாக முடியாது.
முற்றுப் புள்ளியா? காணொலி பல இடங்களில் இராணுத்துடன் சமரசம் செய்கிறது. மக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையில் காணப்படும் ஆழமான முரண்பாடுகள் இங்கு காட்சியாகாமல் மென் முரண்பாடுகளே காட்சியாகியிருக்கின்றன. ஒரு மாவீரர் தின நிகழ்விற்கு அல்லது நினைவேந்தலுக்கு கூடியிருப்பவர்களுக்கு என்ன நடந்தது? என்ன றடக்கும் என்பது பலருக்குத் தெரியும். அதன் கொடுரம் புரியும். ஆனால் இங்கு அவ்வாறான நிகழ்வுகளில் இராணுவத்துடனான முரண்நிலை மென்முரண்பாடாகவே காட்டப்படுகிறது. நாளாந்த வாழ்விலும் அவ்வாறே பொறுத்துக் கொள்ளக் கூடிய முரண்பாடாக காட்டப்படுகின்றன. நிஜம் அவ்வாறல்ல. வன்னியில் தனித்திருக்கும் குடும்பங்கள் பல “பொறுத்துக் கொள்ளத்தக்க அளவில் இந்த முரண்பாட்டை எப்போதும் சொன்னதில்லை“
மேலும் புலிகளை உலகறிவற்றவர்களாகவும் அவர்களுக்கு உலகத்தோடு தொடர்பு எற்பட்டதால் அவர்களின் போர்திறன் குறைந்து போனது என்பதும் ரணில் பிரபாகரன் ஒப்பந்தத்தை மேன்போக்காக பார்க்க முற்படுவதும் இந்தக் காணொலியின் கருத்து நிலைப் பலவீனம் எனலாம்.
புலிகள் காதல் வயப்படுதல், அவர்கள் திருமண முறைகள் எனபன காட்டப் படுகின்ற போது அது போராட்டத்தை பலவீனமாக்கியது எனபதும் ஏற்புடைய கருத்துநிலையாக் கொள்ளமுடியவில்லை.
உண்மைக் கதை முனைவுக் காட்சிகளாலும் நிஜக் காட்சிகளாலும் நகர்த்தப்படுகிறது. இவை ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு நிற்கின்றன. இந்த இரண்டு நிலைகளும் கனகச்சிதமாக இணைவதற்கு திரைக்கதை துணைபுரியவி்ல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இலங்கையில் வாழும் தமிழர் ஒவ்வாருவர் மனதிலும் கிடக்கின்ற நிஜக்கதைகளின் காட்சிப் பிம்பங்கள் பெருங்காட்சிப் பண்பு கொண்டவை. அவற்றை புனைவுக் காட்சியாகக் கொண்டு வருகின்ற போது பாதிக்கபட்டவர்களின் மனதில் கிடக்கும் காட்சிக்கு நிகராக அமைவது கடினமானது தான். இது நெறியாளரக்கு இருக்கின்ற பெரும் சவாலும் கூட. உதாரணமாக பிரபாகரனின் சாவு அதன் நிஜக் காணொலிகள் அதில் காட்சியாகின்றன. அதற்கு முன்னர் நடந்தவைகள் தமிழர் மனங்களில் பெருங்காட்சியாகக் கிடக்கின்றன. இதற்கு நிகராக காட்சியை தருவது என்பது மிகக் கடினமானதே?
இந்த காதல் கதையில் தலையிடுகின்ற மேல்தட்டு வர்க்கம் இந்த மக்களோடு நேரடி தொடர்பற்ற பிற நாட்டில் வாழும் தமிழர் ஒரு சுற்றுலாப் பயணிப் பார்வையில் பெரும் துயரத்தைப் பார்க்க முற்படுவது. இதில் காணப்படும் அபத்தமாகும். சென்னையில் போதைப் பொருள் பாவனையாளரான ஒரு பெண் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பணியாற்ற வருவதன் நியாயம் புரியவில்லை. அதே நபரிற்கு முள்ளிவாய்க்கால் ஒரு மகிழ்வளிப்பிடமாக காட்சி தருவது மனதை நெருடுகிறது.
ஆக, முற்றுப்பள்ளியா ஒரு நிஜக் கதையை திரைக்கதையாக மாற்றுவதில் தடுமாறுகிறது என்றே தோன்றுகிறது. மையம் சிதைந்ததான நிலைமை காணப்படுகிறது எனலாம். பல கருத்துக்கள் ஒருகதைக்குள் திக்கித் திணறுகின்றன.
ஒரு நிஜக் கதை சினிமா மொழிக்கூடாக கலையாக வரவில்லை என்றே சொல்லலாம். ஒரு ஆவணப்படமாகவே தன்னை வெளிக்காட்டுகிறது எனலாம்.
பிரதம பாத்திரம் ஏற்று நடித்த நடிகை மிக அற்புதமாக நடித்திருக்கிறார். அவரது இயல்பான நடிப்பு சினிமாத்தனம் அற்ற தோற்றம் பார்ப்போரை கழிவிரக்க நிலைக்கு இட்டுச் செல்கிறது.
இந்தக் காணொலியின் படத் தொகுப்பாளர் சென்னையைச் சேர்ந்த லெனின் சொல்வது போல “எமது மண்ணின் கதைகள் மண்ணின் மைந்தர்களால் எழுதப்பட வேண்டும். நடிக்கப்பட வேண்டும் நெறிப்படுத்தப் படவேண்டும். அதுவே எமக்கான சினிமாவுக்கான பயணமாக அமைய முடியும்.“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*