சற்று முன்
Home / செய்திகள் / முடிவுக்கு வந்தது ரணில் சாம்ராட்சியம் – எம்.பி பதவிதான் மிஞ்சியது

முடிவுக்கு வந்தது ரணில் சாம்ராட்சியம் – எம்.பி பதவிதான் மிஞ்சியது

கடந்த 26 வருடங்களாக நாடாளுமன்றத்தில் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்த்துடன் இருந்து வந்த ரணில் விக்கிரமசிங்க, இன்று முதல் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார்.

ரணில் யுகத்தின் வீழ்ச்சியென இது கருதப்படுகிறது.

இன்று எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச பெயரிடப்பட்டதை தொடர்ந்து, கடந்த 26 வருடங்களை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்துடன் கழித்து வந்த ரணில் விக்கிமசிங்க, சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார்.

1993 ல் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மரணத்திற்குப் பிறகு, அப்போதைய பிரதமர் டி.பி.விஜேதுங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

1994 பொதுத் தேர்தலில், ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க தோல்வியடைந்தது. சந்திரிகா தலைமையிலான சுதந்திரக்கட்சி அரசு அமைந்தது.

அப்போது ஐ.தே.கவை விட்டு வெளியேறிய காமினி திசாநாயக்க, பின்னர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பேரணியில் நடந்த குண்டுவெடிப்பில் காமினி திசாநாயக்க கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும், நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

1999ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சந்திரிகா குமாரதுங்க இரண்டாவது முறையாகவும் வெற்றியடைந்தார். ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தார்.

2000 பொதுத் தேர்தலில் ஐ.தே.க மீண்டும் தோல்வியடைந்தது. அப்பொழுது ரணில் எதிர்க்கட்சி தலைவரானார்.

2001 பொதுத் தேர்தலில் 109 ஆசனங்களை கொண்ட கூட்டணி அரசாங்கத்தை அமைத்து ரணில் விக்கிரமசிங்க இரண்டாவது முறையாக பிரதமரானார்.

2004 ல் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நாடாளுமன்றத்தை கலைத்து, மீள தேர்தலை நடத்தினார். அதில் ஐ.தே.க தோல்வியடைந்தது. ரணில் மீள எதிர்க்கட்சி தலைவரானார்.

2005 ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தார். 2010 நாடாளுமன்ற தேர்தலில் ஐ.தே.க தோல்வியடைய மீளவும் எதிர்க்கட்சி தலைவரானார்.

2015 ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றியடைந்ததை தொடர்ந்து, பிரதமராக நியமிக்கப்பட்டார். பின்னர் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியடைந்து, பிரதமரானர்.

2018 ஒக்ரோபர் 26ம் திகதி அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால அதிரடியாக செயற்பட்டு, ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கினார். எனினும், நாடாளுமன்றம் கலைத்தது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக 2018 டிசம்பர் 16 அன்று நியமிக்க வேண்டியிருந்தது.

2019 நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததால், ரணில் பிரதமர் பதவியை துறந்தார்.

இந்த காலப்பகுதியில் ஐ.தே.கவிற்குள் ரணிலின் தலைமைத்துவம் ஆட்டம் கண்டு, சஜித் ஜனாதிபதி வேட்பாளராகியிருந்தார். ரணில் பிரதமர் பதவியை துறந்த பின்னர், எதிர்க்கட்சி தலைவராக முயன்றார். எனினும், கட்சிக்குள் அவரது தலைமைத்துவம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், தவிர்க்க முடியாமல் சஜித்தை எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

1993ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தில் பிரதமர் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்த ரணில் விக்கிரமசிங்க, 26 ஆண்டுகளின் பின்னர் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார்.

இலங்கை அரசியலில் ரணில் எனும் அரசியல் நாமத்தின் வீழ்ச்சியாக இது கருதப்படுகிறது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com