சற்று முன்
Home / செய்திகள் / மிருசுவில் கொலையாளி விடுதலை – சிவில் சமூக அமையம் கண்டனம்

மிருசுவில் கொலையாளி விடுதலை – சிவில் சமூக அமையம் கண்டனம்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் இராணுவ சாஜன்ட் சுனில் ரத்னாயக்கா பொது மன்னிப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டமையை தமிழ் சிவில் சமூக அமையம் வன்மையாக கண்டித்துள்ளது.

தமிழ் மக்களுக்கான நீதிக்கு ஒரே வழி சர்வதேச குற்றவியல் பொறிமுறைகள் மாத்திரமே என்றும் அமையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுதொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையத்தின் இணைப்பேச்சாளர்கள் அருட்பணி வீ. யோகேஸ்வரன், கலாநிதி குமாரவடிவேல் குருபரன் ஒப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இலங்கை இராணுவத்தின் கஜபா அணியை சேர்ந்த சுனில் ரத்நாயக்க 2000ஆம் ஆண்டு டிசெம்பர் 19ஆம் திகதி ஐந்து வயது சிறுவன் உள்பட தமிழர்கள் எண்மரை கொடூரமாக வெட்டி கொலை செய்திருந்தார்.

சுனில் ரத்னாயக்க இந்த குற்றத்திற்காக 2015ஆம் ஆண்டு மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்ற தீர்ப்பாயத்தினால் குற்றவாளியாக காணப்பட்டு அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பிற்கு எதிராக அவர் செய்த மேன்முறையீடு ஐந்து நீதியரசர்களை கொண்ட உயர் நீதிமன்ற அமர்வினால் 2019 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது – அவரது தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது.

சுனில் ரத்நாயக்கவிற்கு எதிராக இலங்கை நீதித்துறை வழங்கியிருந்த தீர்ப்பு விதிவிலக்கான ஒன்றாகும். கிருசாந்தி குமாரசாமி கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு தவிர்ந்து இராணுவ வீரர் ஒருவர் தமிழர்களுக்கு எதிராக இழைத்த கொடுமை தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்டமை இந்தவொரு சந்தர்ப்பத்தில் மாத்திரமே ஆகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வேண்டுமென்றே விசாரணைகளை திசைதிருப்பல் மற்றும் அரசு மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அரசியல் விருப்பின்மையால் இத்தகைய வழக்குகள் குற்றவாளிகளை அடையாளம் காணுவதோ தண்டிப்பதோ இல்லை.

உதாரணமாக குமாரபுரம் படுகொலை தொடர்பிலான வழக்கு 2016இல் போதிய சாட்சியம் இல்லாமையால் தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே மிருசுவில் படுகொலைகளில் வந்த தீர்ப்பானது இலங்கை நீதி நிர்வாக முறைமை தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவம் செய்த அட்டூழியங்களிற்கு நீதி வழங்காது என்ற வழமைக்கு புறம்பான ஓர் அரிய தீர்ப்பாகும்.

இந்த ஒற்றை விதிவிலக்கான உதாரணத்தை கூட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச விட்டு வைக்க விரும்பவில்லை என்பது தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் இராணுவத்தினர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற இலங்கையின் ஆளும் சிங்கள பௌத்த அரசியல் பீட சிந்தனை எவ்வளவு ஆழமானது என்பதை காட்டுகின்றது.

கோரோனா வைரஸ் பரவுதலுக்கு எதிரான முயற்சியில் இலங்கை அரசு இராணுவத்தினரின் பங்களிப்பை விதந்துரைத்து பரப்புரை மேற்கொண்டு வரும் இன்றைய சூழலில் இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமையானது தந்திரமானவோர் உபாயமாகும்.

கோரோனா வைரஸ் தோற்று தொடர்பில் முழு உலகமும் கவலையும் வேதனையோடும் இருக்கும் இந்த சூழலில் ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையானது தமிழ் சமூகம் மத்தியில் எரிச்சலையும் கோபத்தையும் உண்டு பண்ணியுள்ளது.
ஜனாதிபதி ராஜபக்சவுக்கு தமிழ் மக்களின் உணர்வுகள் தொடர்பில் கிஞ்சித்தும் அக்கறை இல்லை என்பதை இந்த நடவடிக்கை எடுத்துக் காட்டுகின்றது.

இது வரை காலமும் பொறுத்திருக்குமாறும் உள்ளுர் பொறிமுறைகளில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் தமிழ் மக்களுக்கு ஆலோசனை கூறியோர் இனிமேலாவது அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும். நீதிக்கான ஒரே வழி சர்வதேச குற்றவியல் பொறிமுறைகள் மாத்திரமே.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com