மிரட்டும் கியான்ட் புயல் – கொட்டும் மழையுடன் விடியுமா தீபாவளி…!

kyant__largeதமிழகத்தின் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் இலங்கையின் வடகிழக்குப் ப்பகுதியிலும் வெள்ளிக்கிழமை (28) பிற்பகலுக்குப் பின்னர் கடும் மழை பெய்யத் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த கியான்ட் புயல் வலுவிழந்து மியான்மரை நோக்கி சென்றது. மியான்மரின் மோன் மொழியில் ’கியான்ட்’ என்ற சொல்லுக்கு முதலை என்று பொருள். இந்தசூழலில் செய்தியாளர்களிடம் பேசிய, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், தமிழகத்தில் பருவமழை தொடங்க சாதகமான சூழல் அக்டோபர் 30ஆம் தேதியே உருவாகும் என்று தெரிவித்தார்.

ஆனால், தீபாவளியை என்னோடு தான் நீங்கள் கொண்டாட வேண்டும் என்று கியான்ட் புயல் நினைத்ததோ என்று தெரியவில்லை, மியான்மரை நோக்கி சென்ற தனது பாதையை மாற்றி சுழன்று ஆந்திராவை நோக்கி திரும்பியது. இதனால் தீபாவளியன்று மழை இருக்கும் என்ற பயம் மக்களிடையே தென்படத் தொடங்கியிருக்கிறது.

மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த கியான்ட் புயல் தற்போது விசாகப்பட்டினத்திலிருந்து தென் கிழக்கே 580 கிலோமீட்டர் தொலைவில் வலுவிழந்த நிலையில் மையம் கொண்டிருக்கிறது. இந்த புயல் மேலும் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்புள்ளதால் தீபாவளியை மழையுடன் இணைந்தே மக்கள் கொண்டாடுவார்கள் என்ற பரவலான கருத்து எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி தீபாவளிக்கு அடுத்த நாளான வரும் 29ம் தேதியன்று வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், வரும் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் தமிழகத்தின் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடலோர ஆந்திராவில் வரும் 30ம் தேதி வரை கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடைமழை பெய்யும் ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படும் தீபாவளியன்று மழை பெய்வது ஆச்சர்யமில்லை. தீபாவளியன்று மழை பெய்வதால் நன்மையும் உண்டு என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். மழையால் காற்று மாசுபாடு குறையும் என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது. தீபாவளி நாளில் பட்டாசுகள் அதிகம் வெடிக்கப்படுவதால் அதிலிருந்து வெளியாகும் புகையில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்ட வாயுக்களால் காற்று மாசுபாடு அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*