மிக் விமான கொள்வனவு – முன்னாள் ரஷ்ய தூதருக்கு இன்டர்போல் பிடியாணை

udayanga-weerathunga-1மிக் விமானம் கொள்வனவு தொடர்பில் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு சர்வதேச பொலிஸாரின் பிடியாணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பான வழக்கு இன்று (20) கொழும்பு கோட்டை நீதவான் திருமதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த அனுமதியை நீதவான் வழங்கியிருந்தார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற மிக் விமான கொள்வனவு தொடர்பில் பாரிய பண மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்து கோதாபய உள்ளிட்டோருக்கு எதிராக குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்ததோடு, இது தொடர்பில் விசாரணை செய்ய வெளிநாடு சென்றுள்ள உதயங்க வீரதுங்கவை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் (Interpol) உதவியை நாடுவதற்கு அனுமதி வழங்குமாறு பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில், இரு முறை வேண்டுகோள் விடுத்திருந்த போதும் அது நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு தொடர்பில் அவர் சந்தேகநபராக பதிவு செய்யப்படாமையால், நீதிமன்றம் அவ்வனுமதியை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும் அதன் பின்னர் குறித்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முக்கிய பங்கு வகிக்கும் நபராக அவரை கருதுவதால், அவரும் இவ்வழக்கு தொடர்பான முக்கிய சந்தேகநபர் என, பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால் தெரிவிக்கப்பட்டு, அவரை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறுவதற்கு நீதிமன்றில் அனுமதி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*