மாணவர் படுகொலை வழக்கு – பொலிசாருக்கு விளக்கமறியல் நீடிப்பு

policeயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (18.11) யாழ்.நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் சரோஜினி இளங்கோவன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் 6 பேர் கொண்ட சட்டத்தரணிகள் குழுவினரும், சட்டமா அதிபர் சார்பில் 3 சட்டத்தரணிகளும், குற்றப்புலனாய்வு பிரிவினரும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

உயிரிழந்த மாணவர்களின் சான்றுப் பொருட்கள் இராசாயண பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் யாழ்.நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள் அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வியாபார நிலையங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கண்காணிப்புக் கமராவின் வன்பொருள்(harddisk) பெறப்பட்டு, கொழும்பு பல்கலைக்கழக தகவல் பீடத்திற்கு பகுப்பாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர்களின் தொலைத்தொடர்பு இணைப்புக்கள் உரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக்கொண்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

அத்துடன், சந்தேக நபர்களிடம் அநுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதுடன், மாணவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

இதேவேளை எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் குறித்த 5 பொலிஸாரிடம் வாக்குமூலங்களைப் பெறுமாறு கட்டளை பிறப்பித்துள்ள நீதிபதி, குறித்த 5 பேரையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*