மாணவர்கள் படுகொலைகள் – சட்டம் ஒழுங்கை வன்முறையாக அமுல்படுத்த முயற்சித்தமையின் விளைவே – யாழ் முஸ்லிம் சிவில் சமூகம் கண்டனம்

cooltext1112459336கஜன், சுலக்‌ஷன் (யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்) ஆகியோரின் படுகொலைகள்; சட்டம் ஒழுங்கை வன்முறையாக அமுல்படுத்த முயற்சித்தமையின் விளைவே என. யாழ் முஸ்லிம் சிவில் சமூகம் விடுத்துள்ள விஷேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. படுகொலைகள் யாழ்ப்பாணத்திற்கு புதியதல்ல, ஆனால் ஒரு மாற்றத்தை நோக்கிய நகர்வில் மக்கள் அமைதியின் மீது நம்பிக்கை கொண்டிருக்க சந்தர்ப்பத்தில், பொலிஸாரினால் இவ்வாறான ஒரு வன்முறைச் சம்பவம் ஏற்பட்டிருப்பதை அங்கீகரிக்க முடியாதுள்ளது. இந்தியத் திரைப்படங்களில் அமைகின்ற என்கவுன்டர் முறையில் மேற்படி சம்பவம் இடம்பெற்றிருப்பதும், அதனால் அப்பாவியான இரண்டு மாணவர்கள் பலியாகியிருப்பதும் ஈடுசெய்யப்படமுடியாத இழப்பேயாகும். குறித்த இரண்டு மாணவர்களின் குடும்பத்தாருக்கும் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடுவதோடு, அவர்களுடைய துயரில் யாழ் முஸ்லிம் மக்களாகிய நாமும் பங்கேற்கின்றோம்.
குறிப்பாக யாழ் மாவட்டத்திலும் பொதுவாக வடக்கு மாகாணத்திலும் சட்டம் ஒழுங்கு சார்ந்து பல்வேறு குழறுபடிகள் இருக்கவே செய்கின்றன, வாள்வெட்டுக் கலாசாரம், கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை மற்றும் பாவனைகள், கொள்ளைச் சம்பவங்கள் என பல்வேறு சமூகப் பிறழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்றவண்ணமேயிருக்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நீதிமன்றமும், பொலிஸாரும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டிய கடப்பாட்டோடு இருக்கின்றார்கள். ஆனாலும் இவற்றை நடைமுறைப்படுத்துகின்றபோது வன்முறைசார் வழிமுறைகள் பின்பற்றப்படுவதை எவ்விதத்திலும் அங்கீகரிக்க முடியாது. அதனை வன்மையாகக் கண்டிப்பதோடு வன்முறைகளில் ஈடுபடுகின்ற பொலிஸாரையும் சட்டரீதியாக தண்டிப்பதற்கு பின்னிற்கக் கூடாது என்பது எமது நிலைப்பாடாகும்.
மேற்படி அசாதாரண நிலைமைகளை கட்டுப்படுத்த வேண்டுமாயின் மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதும், குறிப்பாக இளைஞர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதும் அத்தியாவசியமாகின்றது. இத்தகைய சம்பவங்களை அரசியல் நோக்கோடு அணுகுவதும், அதனை அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதும் ஆரோக்கியமானதல்ல. இவ்வாறான அசாதாரண சூழ்நிலைகள் ஒட்டுமொத்த யாழ்ப்பாண மக்களினதும் அமைதியையும் சாதாரண வாழ்வையும் பாதிக்கின்றன. இவற்றிற்கு மக்களின்பங்களிப்போடு உரிய தரப்பினர் தீர்வுகளை முன்வைக்கவேண்டும் என்பதையும் இங்கே குறிப்பிட்டுக்கொள்கின்றோம்.
மேற்படி சம்பவம் யாழ்ப்பாண மக்களின் வரலாற்றில் இன்னுமொரு நிகழ்வாக பதிவு செய்யப்படுவதோடு நின்றுவிடாது, இனிவரும் காலங்களில் வன்முறைசார் எந்தவொரு செயற்பாட்டையும் யாழ் மக்கள் அங்கீகரிக்க மாட்டார்கள் என்ற செய்தியை உறுதிசெய்வதாக மக்களின் அபிலாஷைகளும் இணைத்தே பதிவு செய்யப்படவேண்டும். குறித்த படுகொலையில்யே பலியாகிப்போன ஒரு மாணவரின் தாயார் வேதனை மிகுதியால் அழுது புலம்பும் தருணத்தில் “இனிமேல் எந்தவொரு பிள்ளைக்கும் இப்படியானதொரு துயர் நடக்ககூடாது” என்ற வார்த்தைகளை வெளிப்படுத்தினார், இது மக்கள் வன்முறையின் மீது கொண்டிருக்கின்ற வெறுப்பையே வெளிப்படுத்தி நிற்கின்றது. எனவே அந்தத் தாயோடும், பலியாகிப்போன மாணவர்களின் உறவுகளோடும் அவர்களது துயரங்களோடும் நாமும் இணைகின்றோம் என்பதை மீண்டுமொருதடவை தெரிவித்து மேற்படி நிகழ்வை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இவர்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றோம்.
இவ்வண்ணம்
ஜனாப் எம்.யூ.எம்.தாஹிர்
தலைவர், யாழ் முஸ்லிம் சிவில் சமூகம்

ஜனாப் எம் எம்.எம்.நிபாஹிர்
செயலாளர், யாழ் முஸ்லிம் சிவில் சமூகம்

தகவல். எம்.எல்.லாபிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*