போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச பங்களிப்பு குறித்து ஆராயப்படுகிறது – வெளிவிவகார அமைச்சர்

இலங்கையின் 26 வருடகால யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளின் போது சர்வதேச தரப்பினரை இணைத்துக் கொள்வது தொடர்பில் ஆராய்வதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகள் பக்கச்சார்பின்றி இடம்பெற வேண்டியது மிக முக்கியமானது என்று கூறியுள்ள மங்கள சமரவீர, விசாரணைகள் பக்கச்சார்பற்ற முறையில் நடைபெறுகின்றது என்பதனை உறுதி செய்ய சர்வதேச தரப்பினரை இணைத்துக் கொள்வது குறித்து ஆராய்வதாக குறிப்பிட்டுள்ளார். 

அவர்கள் சர்வதேச நீதிபதிகளாக அல்லது இரசாயன பகுப்பாய்வாளர்களாக அல்லது விசாரணையாளர்களாகவும் இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளின் போது வெளிநாட்டு நீதிபதிகள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகளின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

எனினும், போர்க்குற்றங்கள் குறித்த பாரபட்சமற்ற விசாரணைகளின் போது வெளிநாட்டவர்களின் பங்களிப்பு தேவையல்ல என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறியிருந்தார். 

இறுதி யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தினர் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினரும் போர்க்குற்றங்களை மீறியிருந்ததாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. 

இதேவேளை இந்த மாத ஆரம்பத்தில் இலங்கை வந்திருந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், போர்க்குற்ற விசாரணைகளில் இலங்கை மீது எந்தவொரு விடயத்தையும் திணிக்கவில்லை, எனினும் அனைத்து நடவடிக்கைகளும் பக்கச்சார்பற்ற சுயாதீனமானதாக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில் போர்க்குற்ற விசாரணைகளின் போது சர்வதேச பங்களிப்பு தொடர்பாக ஆராயப்பட்டு வருகிறது என்று மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் வொசிங்டனில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வென்றில் ஆற்றிய உரையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*