சற்று முன்
Home / செய்திகள் / பொறுப்புக்கூறல் வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவது சந்தேகமே – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

பொறுப்புக்கூறல் வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவது சந்தேகமே – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

இலங்கையில் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை உருவாக்கும் விடயத்தில் மெதுவான முன்னேற்றங்களே இடம்பெறுவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன்.

இலங்கை தொடர்பாக 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, 2017ஆம் ஆண்டு மீள உறுதிப்படுத்தப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தப்படுவதில் உள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக ஐ,நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று சமர்ப்பித்த எழுத்து மூல, இடைக்கால அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இந்த அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் துணை ஆணையாளர் கேட் கில்மோர் நேற்று பேரவையில் சமர்ப்பித்தார்.

“ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துடன், ஆக்கபூர்வமான தொடர்புகளை இலங்கை அரசாங்கம் பேணி வருவது மற்றும் பேரவையின் சிறப்பு அறிக்கையாளர்களின் பயணங்களுக்கான ஒத்துழைப்புகளை வழங்குவது உள்ளிட்ட, மனித உரிமைகள் பொறிமுறைகளுடன் இணங்கிச் செயற்படுவதை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் வரவேற்கிறது.

சித்திரவதைகளுக்கு எதிரான பிரகடனத்துடன் இணைந்து கொள்ளும், இலங்கையின் முடிவையும், தேசிய மனித உரிமைகள் செயற்திட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளதையும் நாம் வரவேற்கிறோம்.

எனினும், இலங்கையில் நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளை உருவாக்கும் விடயத்தில் மெதுவான முன்னேற்றங்களே நிகழ்ந்திருப்பது, குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் அதிக கவலையைக் கொண்டுள்ளது.

எந்த சட்ட வரைவுகளும் பகிரங்கப்படுத்தப்படாத நிலையிலும், அதற்கான உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையிலும், நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகள் தொடர்பாக, எதிர்வரும் 2019 மார்ச் மாதத்துக்குள் 30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது சந்தேகமே.

காணாமல்போனோர் பணியக சட்டம் இயற்றப்பட்டு, 20 மாதங்கள் கழித்து, அண்மையிலேயே அதற்கான ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவும் எமக்கு வருத்தமளிக்கிறது.

மேலும் இலங்கை இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீளளிப்பதிலும், போதுமான முன்னேற்றம் இல்லை.

இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்ந்தாலோ, பாதுகாப்புக் காரணங்களுக்காக சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு நியாயமான இழப்பீடுகளை வழங்குவதற்கான,சுதந்திரமான பொறிமுறைகளை அமைக்காவிட்டாலோ, நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப முடியாது.

அனைத்துலக மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்களுக்கு தண்டனை வழங்கும் திறனை நிரூபிக்கவோ அல்லது அதற்கான விருப்பத்தையோ அதிகாரிகள் இன்னமும் வெளிப்படுத்தவில்லை.

இது, மோசமான குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான, சிறப்பு நீதிமன்றத்தை அனைத்துலக நிபுணர்களின் ஆதரவுடன் நிறுவ வேண்டும் என்ற வாதத்தை பலப்படுத்துகிறது.

அத்தகையதொரு பொறிமுறை இல்லாத நிலையில், நாம், உலகளாவிய அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கிறோம்.

கடந்த ஆண்டில் மதங்களுக்கிடையிலான வன்முறைச் சம்பவங்கள், தாக்குதல்கள், மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான இனவெறுப்பு கருத்துக்கள் கருத்துக்கள் வெளியிடப்பட்டதை தீவிரமான கரிசனையை ஏற்படுத்தியுள்ளது.

சித்திரவதைகள் தொடர்வதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், கண்காணிக்கப்படுவதாகவும் வரும் அறிக்கைகள் என்பன அதிகம் கவலையை ஏற்படுத்துகிறது.

இலங்கை மக்களின் மனித உரிமைகள் விடயத்தில் குறிப்பாக, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளில், ஐ.நா மனித உரிமைகள் பேரவை தொடர்ந்தும், கவனம் செலுத்த வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com