பாரீஸில் மீண்டும் தீவிரவாதிகள் – பொலிஸ் துப்பாக்கிச் சூடு – 2 பேர் பலி!

பாரீஸின் வடக்கு புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளுக்கும் தீவிரவாத தடுப்பு போலீஸாருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாகவும், இதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஃபிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த 5 தினங்களுக்கு முன்னர் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதுபோன்ற தாக்குதல்களை மீண்டும் நடத்துவோம் என ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்திருந்ததால், தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாரீஸ் நகர் முழுவதும் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் தீவிரப்படுத்தி இருந்தனர்.
அதன் ஒரு பகுதியாக பாரீஸின் வடக்கு புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில, தீவிரவாதிகள் என சந்தேகிக்கும் வகையில் சிலரது நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, போலீஸார் உள்ளூர் நேரப்படி இன்று காலை  6.15 மணி அளவில் அந்த குடியிருப்பை முற்றுகையிட்டனர். அப்போது உள்ளே பதுங்கி இருந்த தீவிரவாதிகள் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
பாரீஸில் கடந்தவாரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் அப்தல்ஹமித் அபாவுத் என்று போலீஸார் சந்தேகிப்பதாகவும், அவனை தேடியே போலீஸார் இந்த தேடுதல் வேட்டையை மேற்கொண்டதாகவும் ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
2 தீவிரவாதிகள் பலி
இதனிடையே போலீஸார் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டதாகவும், இதில் ஒருவர் பெண் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த 2 தீவிரவாதிகளில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், மற்றொரு பெண் தன்னைத்தானே வெடிகுண்டால் வெடிக்கச் செய்து உயிரை மாய்த்துக்கொண்டதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
சம்பவம் நடந்த செயின்ட்  டெனிஸ் என்ற இடத்திற்கு ஏராளமான ஆயுதங்கள் நிரப்பட்ட வாகனங்களில் ராணுவ வீரர்கள் விரைந்துள்ளதாகவும், சண்டை நடந்துவரும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மேலும் சில தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என போலீஸார் சந்தேகிப்பதாகவும் ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*