சற்று முன்
Home / கட்டுரைகள் / நிபந்தனையற்ற கூட்டணியமைக்க கட்சிகளுக்கு ஸ்டாலின் பகிரங்க அழைப்பு!

நிபந்தனையற்ற கூட்டணியமைக்க கட்சிகளுக்கு ஸ்டாலின் பகிரங்க அழைப்பு!

கொளுத்தும் வெயிலில், மக்களும் தொண்டர்களும் மணிக்கணக்கில் கால்கடுக்க காத்துக் கொண்டிருப்பார்கள். ஏ.சி. வேனில் அமர்ந்துவரும் தலைவர்கள், வெயிலில் வாடும் மக்களிடம் ஓட்டு கேட்பார்கள். இதுதான், கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத் தேர்தல் பிரசார யுக்தி. மு.க.ஸ்டாலினின், ‘நமக்கு நாமே’ விடியல் மீட்பு பயணம் அதை மாற்றியிருக்கிறது. நெசவாளர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், விவசாயிகளை அவர்களின் இடத்துக்கே நேரடியாகச் சென்று சந்தித்துக்கொண்டிருக்கிறார். தஞ்சாவூரில் விவசாயிகளோடு வயலில் இறங்கி டிராக்டர் ஓட்டிக்கொண்டிருந்த மு.க.ஸ்டாலினை சந்தித்தோம்.  
‘‘ ‘நமக்கு நாமே’ விடியல் மீட்பு பயணத்துக்கான சிந்தனை எதில் இருந்து தொடங்கியது?’’
‘‘ ‘அரைமணி நேர முதல்வர்’ தமிழகத்தை ஆட்சி செய்கிறார். அப்படித்தான் தமிழக முதலமைச்சருடைய செயல்பாடுகள் இருக்கின்றன. நினைத்தால் அலுவலகத்துக்கு வருகிறார்; இல்லை என்றால் போயஸ் கார்டன், சிறுதாவூர், கொடநாடு போய்விடுகிறார். அதனால், அரசு எந்திரம் இந்த ஆட்சியில் பழுதாகிக் கிடக்கிறது. இயங்காத அரசு எந்திரத்தால், தமிழகத்தில் அரசு நிர்வாகம் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. வளர்ச்சித் திட்டங்கள் இல்லை. வாழ்க்கை ஆதாரங்களான அடிப்படைத் தேவைகளைக்கூட மக்களுக்குச் செய்து கொடுக்கவில்லை. வாக்களித்த மக்களின் குறைகளைக் கேட்பதற்கோ, களைவதற்கோ ஆளும் கட்சி கவுன்சிலர் முதல் அமைச்சர்கள் வரை யாரும் தயாராக இல்லை. இப்படிச் செயல் இழந்து சிதைந்துவிட்ட அ.தி.மு.க ஆட்சியிடம் இருந்து தமிழக மக்களை மீட்க வேண்டும். தமிழகத்துக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். அதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களைத் தேடிச் செல்ல வேண்டும் என்ற உணர்வின் அடிப்படையில்தான் ‘நமக்கு நாமே’ சிந்தனை உருவானது. இந்த விடியல் மீட்பு பயணத்துக்கு இந்தப் பெயரைச் சூட்டியதே கலைஞர்தான்!”
‘‘ஜெயலலிதாவின் ஆட்சியில் உங்களைப் பாதித்த விஷயங்கள் என்று எவற்றை பட்டியல் இடுவீர்கள்?’’
‘‘விஷம்போல் விலைவாசி ஏறுகிறது. பால், பஸ், பவர் என்று அத்தியாவசியத் தேவைகளின் கட்டணங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தப்பட்டுவிட்டன. பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை என்று எங்கும் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. அ.தி.மு.க ஆட்சி கொண்டுவந்த புதிய திட்டம் மூலம் ஒரு மெகா வாட் மின்சாரம்கூட உற்பத்தி செய்யப்படவில்லை. ஒரு புதிய தொழிற்சாலைகூட உருவாக்கப்படவில்லை. தமிழகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் எதுவும் கண்ணில்படவில்லை. வெளிப்படையான நிர்வாகம் அறவே இல்லை. ஜனநாயகமும் இல்லை. கருத்துச் சுதந்திரமும் இல்லை. ஊழலும் ஊதாரித்தனமும் இந்த அரசில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்போல் இருக்கின்றன. இப்படி என்னைப் பாதித்த விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். எல்லாவற்றையும்விட அ.தி.மு.க ஆட்சியில், மூன்று வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கப்பட்ட சம்பவம் என்னைப் பெரிதும் பாதித்தது.’’
‘‘அ.தி.மு.க ஆட்சியின் மிகப்பெரிய ஊழல் என்று எதைக் கருதுகிறீர்கள்?’’
‘‘ஒரு லட்சம் கோடி ரூபாய் தாது மணல் ஊழல், மின் திட்டங்களைத் தாமதப்படுத்தி தனியாரிடம் மின் கொள்முதல் செய்ததில் நடைபெற்ற ஒரு லட்சம் கோடி ஊழல், 16 ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் ஊழல் ஆகியவை இந்த ஆட்சியின் ‘இமாலய’ ஊழல்கள். இவை தவிர, அனைத்துத் துறைகளிலும் நடைபெற்ற நியமனங்களில் ஊழல், கான்ட்ராக்ட்களில் 25 சதவிகிதம் வரை நிர்ணயிக்கப்பட்ட ‘கமிஷன் கலாசாரம்’ என்று பட்டியலிட உங்கள் புத்தகம் போதாது. இதற்கு துணைபோன அமைச்சர்கள் எல்லோருமே ஊழல் குற்றவாளிகள்தான்!”
‘‘கடந்த கால தி.மு.க ஆட்சியில் தவறு நடந்திருந்தால் மன்னிப்பு கோருகிறேன் என்று சொல்லியிருக்கிறீர்கள். அடுத்து வரும் தி.மு.க ஆட்சியில் அந்தத் தவறுகள் மீண்டும் நடக்காது என்று உங்களால் உறுதிபடச் சொல்ல முடியுமா?’’
‘‘சிறு தவறுக்குக்கூட இடம்கொடுக்காமல், சிறந்த நிர்வாகத்தை நிச்சயம் கொடுப்போம். மக்கள் மன்றத்தில் சொல்வதை அப்படியே நிறைவேற்றியதுதான் தி.மு.க-வின் கடந்த கால வரலாறு. தி.மு.க எப்போதுமே ‘சொன்னதைச் செய்யும் – செய்வதைத்தான் சொல்லும்.’ அதில் துளிகூட உங்களுக்குச் சந்தேகம் வேண்டாம். அப்பழுக்கற்ற, வெளிப்படையான, திறமையான நிர்வாகத்தைத் தமிழக மக்களுக்கு அளிக்க உறுதி எடுத்துள்ளோம்.’’
‘‘நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள ஜெயலலிதாவை, வலுவான கூட்டணி இல்லாமல் தி.மு.க-வால், சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்த முடியுமா?’’
‘‘இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயித்ததைவிட வலுவான வெற்றியை அ.தி.மு.க பெற்றிருந்த நேரத்திலும், அதைத் தோற்கடித்து ஆட்சியைப் பிடித்த கட்சிதான் தி.மு.க என்பதை இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன். கடந்த காலங்களில் நடந்த தேர்தல் முடிவுகள் தொடர்பான புள்ளி விவரங்களைக் கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள்; உண்மை புரியும்.’’
‘‘அறிக்கை விடுவதைத் தாண்டி, இந்த நான்கரை ஆண்டுகளில் ஓர் எதிர்க் கட்சியாக தி.மு.க செய்த முக்கியமான பணி என்ன?’’
‘‘தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘மெட்ரோ’ ரயிலை, அ.தி.மு.க ஆட்சி தாமதப்படுத்துவதைக் கண்டித்துப் போராட்டம் நடத்துவேன் என்று அறிவித்தேன். உடனே, முதலமைச்சர் ஜெயலலிதா, ‘மெட்ரோ’ ரயில் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பல மக்கள் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து போராடி வரும் இயக்கம்தான் தி.மு.க. அதுமட்டுமல்ல, நடப்பது அ.தி.மு.க ஆட்சி என்று பார்க்காமல் ஈழத் தமிழர், தமிழக மீனவர்கள், காவிரி, முல்லை பெரியாறு போன்ற பொதுவான பிரச்னைகளில் அ.தி.மு.க ஆட்சிக்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பையும் நாங்கள் வழங்கியிருக்கிறோம்.’’
‘‘தி.மு.க-வோடு கூட்டணி அமைக்க விரும்பும் கட்சிகளுக்கு நீங்கள் விதிக்கும் நிபந்தனைகள் என்ன?’’
‘‘திராவிட முன்னேற்றக் கழகம் வழக்கம்போல மக்களை நோக்கி இயங்கிக்கொண்டிருக்கிறது.
அ.தி.மு.க ஆட்சியின் வேதனைகளை மக்கள் மன்றத்தில் எடுத்துவைத்து வருகிறோம். தி.மு.க ஆட்சி அமைந்தால்தான் தங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று மக்கள் எண்ணுகிறார்கள். அனைத்துத் துறைகளிலும் தோற்றுவிட்ட அ.தி.மு.க அரசை அகற்ற வேண்டும் என்பது மக்களின் நினைப்பாகவும் நிபந்தனையாகவும் இருக்கிறது. அதையொட்டி நடத்தப்படும் பரஸ்பர பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், சகோதர மனப்பான்மையோடு கூட்டணி அமையும்; நிபந்தனைகளை விதித்து அல்ல.’’
‘‘தி.மு.க – தே.மு.தி.க கூட்டணி அமைய வாய்ப்புள்ளதா?’’
‘‘தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறதே!’’
‘‘‘நமக்கு நாமே’ விடியல் மீட்பு பயணத்தில் நீங்கள் முன்னெடுக்கும் கோஷங்கள் என்னென்ன? அதில் மிக முக்கியமானதாக நீங்கள் வலியுறுத்துவது எதை?’’
‘‘பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் தொடர்ந்து முன்னேற வேண்டும்; தொழில் வளர்ச்சியில் தமிழகம் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருந்த காலம் திரும்பவும் வரவேண்டும்; விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள் பிரச்னைகள் களையப்பட வேண்டும்; வேலையில்லாத் திண்டாட்டம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்; சிலிகான்வேலிபோல் தமிழகம் நவீன தொழில் நுட்பங்களின் தலைநகரமாக மாற வேண்டும்; இதற்கு நேர்மையான, வெளிப்படையான, தூய்மையான, திறமையான நிர்வாகம் என்பது மக்களின் அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும்.’’
‘‘மக்களை நேரடியாகச் சந்திக்கும் இதுபோன்ற அணுகுமுறைகளை நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகும் எதிர்பார்க்க முடியுமா?’’
‘‘மக்களைச் சந்திக்காத பிரநிதிகளின் பதவிகளைப் பறிக்கவேண்டும் என்றே இந்தப் பயணத்தில் சொல்லிவிட்டேன். இன்றுபோல் என்றும் வருவேன். தி.மு.க எப்போதும் மக்கள் குறைகளைத் தீர்த்துவைக்கும் இயக்கம்தான். இனிவரும் காலங்களில் மக்களைச் சந்திப்பது, கழகத்தின் மக்கள் பிரநிதிகளின் தலையாய கடமையாக்கப்படும். மக்களுக்காக மக்களால் உருவாக்கப்படுவதுதானே மக்களாட்சி!’’
‘‘ ‘தேர்தல் – வாக்குகள்’ என்பதை மட்டுமே மனதில்வைத்து இந்தப் பயணத்தை முன்னெடுத்துள்ளீர்களா அல்லது அதைத் தாண்டிய காரணங்களும் இருக்கின்றனவா?’’
‘‘அரசியல் கட்சியின் பயணத்தில், தேர்தலும் வாக்குகளும் பிரிக்க முடியாதவை. அதை நான் மறுக்கவில்லை. ஆனால், என்னுடைய இந்தப் பயணம் முழுக்க முழுக்க மாணவர்கள், மகளிர், விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், வர்த்தகர்கள், மாற்றுத்திறனாளிகள் என்று பல தரப்பட்ட மக்களையும் சந்திக்க வேண்டும்; அவர்களின் கருத்துகளை முழுமையாகக் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் வடிவமைக்கப்பட்டது. பயணத்தின் அடிப்படை நோக்கத்தை எங்கள் கழகத் தோழர்கள் புரிந்துகொண்டுள்ளார்கள். அவர்களின் அளவிட முடியாத அன்பும் ஆர்வமும், அவர்கள் கொடுக்கும் ஒத்துழைப்பும், அவர்களின் ஆக்கபூர்வமான சிந்தனைகளும் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றன.’’
‘‘நமக்கு நாமே பயணத்தில் நாடகத்தனம் இருக்கிறது என்ற எதிர்க் கட்சிகளின் விமர்சனம் பற்றி?’’
‘‘தி.மு.க. ஆட்சியில் சொன்னதைச் செய்திருக்கிறோம். எங்கள் தேர்தல் அறிக்கை எங்களுக்குப் புனிதமானது. தி.மு.க சார்பில் மக்களைச் சந்திக்கும் நான், அவர்களிடம் மதுவிலக்கை அமல்படுத்துவேன் என்கிறேன்; ‘கரப்ஷன் – கமிஷன் – கலெக்‌ஷன்’ இல்லாத ஆட்சி அமைப்பேன் என்கிறேன்; தொழில் வளர்ச்சியைக் கொண்டு வருவேன் என்கிறேன்; இப்படி பலதரப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்கும் அந்தந்த இடத்திலேயே உறுதியளிக்கிறேன். இதில் மிரட்சி அடைந்திருக்கும் சில கட்சிகள், எனது மக்கள் சந்திப்பையும், மக்கள் தாமாகவே முன் வந்து ஒரு நல்லாட்சி அமைய தரும் ஆலோசனைகளையும் ‘நாடகத்தனம்’ என்கிறார்கள். அவர்களுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள்.’’
‘‘தி.மு.க ஆட்சி அமைந்தால், முதல் கையெழுத்து எதுவாக இருக்கும்?’’
‘‘மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்துவதற்கும் முடக்கப்பட்ட உட்கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கும் முதல் கையெழுத்து போடப்படும்.’’

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எரிவாயு விநியோகம் தாமதம்

எரிவாயு இறக்குமதி விநியோக நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக இன்று(18) எரிவாயுவிற்கான வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com