நாட்டு மக்களது நன்மைக்கான தீர்மானங்கள் சரியான முறையில் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி மைத்திரி

நாட்டினதும் நாட்டு மக்களதும் நன்மைக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய தீர்மானங்களை உரிய நேரத்தில் சரியான முறையில் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
நேற்று (07) முற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நச்சுத் தன்மையற்ற நாடு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப வைபவத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மக்களுக்குப் பொருத்தமானவற்றைப் பெற்றுக்கொடுத்தலே நாட்டையும் நாட்டு மக்களையும் நேசிக்கும் ஆட்சியாளர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள் ஆகியோரின் கடமையாகுமென ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.

நச்சுத் தன்மையற்ற நாடு தேசிய நிகழ்ச்சித்திட்டம் அவ்வாறானதொரு திருப்புமுனையாக உள்ளதெனத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டு மக்களின் ஆரோக்கியம் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் என்பவற்றை மேம்படுத்தல் தனது எதிர்பார்ப்பாக உள்ளதெனத் தெரிவித்தார்.

இதுவரை ஆட்சி செய்த அனைத்து அரசாங்கங்களும் விவசாயத்தையும் விவசாயிகளையும் கட்டியெழுப்புவதற்கு பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்திய போதும் விவசாயிகளை கடன் சுமையிலிருந்து மீட்டெடுப்பதற்கு முடியாது போயுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, விவசாயிகளின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துதல் மற்றும் சிறந்த விவசாயக் கொள்கையினை அறிமுகப்படுத்துதல் என்பன புதிய அரசின் நோக்கமாக உள்ளதெனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சித் திட்டத்திற்கான தலைமைத்துவம் பிரதேச தலைவர்கள் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் ஆகியவற்றால் பொறுப்பேற்கப்படல் வேண்டுமெனத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டை நேசிக்கின்ற மற்றும் தேசத்தின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கின்ற அனைவரும் அரசியல் கருத்து வேற்றுமைகள் இன்றி இத் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகொள்வதற்கு ஒன்றுபடல் வேண்டுமெனத் தெரிவித்தார்.

இலங்கையை நச்சுத்தன்மையற்ற பசுமை நிறைந்த ஒரு நாடாக மாற்றி அனைவருக்கும் நச்சுத்தன்மையற்ற உணவுகளை வழங்குவதற்கான அரசின் கொள்கைக்கு அமைவாக நச்சுத் தன்மையற்ற நாடு மூன்றாண்டு தேசிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. செய்மதித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிர்நிலங்கள் தொடர்பான விபரங்களைப் பெற்றுக்கொள்ளும் புதிய வேலைத்திட்டம் இதன்போது ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வண. அத்துரலியே ரத்தன தேரர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் துமிந்த திசாநாயக்க ஆகியோர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள், மாகாண முதலமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண செயலாளர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்கள், உள்நாட்டு வெளிநாட்டு அழைக்கப்பட்ட அதிதிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*