நாட்டில் நிலையான சமாதானத்தை நிலைநாட்டுவேன் – ஜனாதிபதி

எந்தவிதமான பழிதூற்றல்கள், அவதூறுகள், குற்றச்சாட்டுக்களை சுமத்திய போதும் நாட்டில் நிலையான சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக படைவீரர்கள் மேற்கொண்ட தியாகத்திற்குச் சமமான ஓர் அர்ப்பணிப்பினை தனது பதவிக்காலத்தில் மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
படைவீரர்கள் மற்றும் புலனாய்வுத்துறை அங்கத்தவர்களை கைது செய்து நாட்டின் பாதுகாப்பை உடைத்தெறிந்து தான் நாட்டை பிரிப்பதற்கு முயற்சிப்பதாக குறுகிய அரசியல் தீவிரவாதிகள் இன்று குற்றம் சுமத்துவதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டுக்கு பொறுப்புக்கூறும் நாட்டின் முப்படைகளுக்கும் தலைமை தாங்குபவனாக தான் இவ்வனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாக குறிப்பிட்டார்.

முப்படைகளிலும் அங்கவீனமுற்ற படைவீரர்களுக்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படும் “விருசர வரப்பிரசாத” பத்திரம் வழங்கும் வைபவம் நேற்று முந்தினம் (25) அலரிமாளிகையில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இந்நாட்டு முப்படைகளினதும் கௌரவத்தை பாதுகாத்து அவர்களை உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முப்படையாக மாற்றுவதற்கு தான் பாடுபடுவதாக தெரிவித்த ஜனாதிபதி, 2015 ஜனவரி 08 ஆம் திகதிக்கு முன்னர் அரசின் பொறுப்பு வாய்ந்த ஓர் அமைச்சராக பணியாற்றிய தன்னிடம் அன்று ஒப்படைக்கப்பட்ட பொறுப்பிற்கமையவும் தற்போது தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பிற்கமையவும் நாட்டின் பாதுகாப்பினை வலுவடையச் செய்து நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

2015 ஜனவரி 08ஆம் திகதிக்கு முன் அரச தலைவர் யாராக இருந்த போதும் , ஜனவரி 08ஆம் திகதிக்குப் பின்னர் அரச தலைவர் யாராக இருந்தபோதும் சர்வதேசத்திற்கு பதிலளிக்க வேண்டிய ஒரு நிலையினை இன்று நாடு எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, சிவில் சமூகத்தின் ஒரு கோரிக்கையாக மாறியுள்ள இவ்வினாக்களுக்கு அரசு கட்டாயமாக பதிலளிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்காக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் எவ்விதத்திலும் படைவீரர்களையோ புலனாய்வுத்துறை உறுப்பினர்களையோ இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுவதில்லை என ஜனாதிபதி தெரிவித்தார். இன்று சிலர் இரத்தம் பற்றி கதைக்க துவங்கியுள்ளதுடன் எந்தவொரு மதத்தைச் சேர்ந்த போதிலும், எந்தவொரு மொழியை பேசுகின்ற போதும் அனைவரது உடம்பிலும் ஒரேவிதமான இரத்தமே காணப்படுவதாகவும் அபிவிருத்தியடைந்த நாகரிகத்தைக்கொண்ட மனிதர்களாக குறுகிய சிந்தனைகளில் இருந்து விடுபட்டு நாட்டின் அனைத்து மக்களும் சமாதானமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாம் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் கீழ் பாதுகாப்பு அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் ”விருசர வரப்பிரசாத” அட்டையானது படைவீரர்கள் தாய்நாட்டுக்காக மேற்கொண்ட ஈடு இணையற்ற அர்ப்பணிப்புக்காக அவர்களது குடும்ப உறுப்பினர்களின் மேன்மைக்காக செலுத்தப்படும் ஒரு பாராட்டாகும்.

நுகர்வு, சுகாதாரம், கல்வி, நிதிக்காப்புறுதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல நன்மைகளை இதன்மூலம் படைவீரர்களுக்கும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களுக்கும் பெற்றுக்கொள்ள முடியும். ஜனாதிபதி ”விருசர வரப்பிரசாத” அட்டையினை வழங்கும் அடையாள நிகழ்வில் கலந்து கொண்டதுடன், யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களில் பெற்றோர்களை இழந்த சிறார்கள் 100 பேருக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

அமைச்சர்களான நிமல் சிறிபால த சில்வா, ஹரின் பெர்ணாந்து, இராஜாங்க அமைச்சர் குவன் விஜயவர்தன, பாதுகாப்பு செயலாளர் கருனாசேன ஹெட்டியாராச்சி, சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சின் செயலாளர் ஜகத் விஜேவீர உள்ளிட்ட முப்படைத் தளபதிகள், பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, ரணவிரு சேவை அதிகார சபையின் தலைவர் அனோமா பொன்சேகா உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*