நவம்பர் 27 நல்லூரில் மாவீரர் தினம் – வீரவணக்கம் செலுத்துவது எமது உரிமை – யாராலும் தடுக்க முடியாது – சிவாஜிலிங்கம் சூழுரை

639816190sivajilingamதாயகத்தில் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுநிகழ்வு நல்லூரினில் நடைபெறுமென வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். மாவீரர்களிற்கு வீரவணக்கம் செலுத்துவது எமது உரிமை அதை யாராலும் தடுக்க முடியாது எனவும் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் இன்று (சனிக்கிழமை) யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது மேலும் தெரிவிக்கையினில்,”எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர்கள் உட்பட உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவோம். போரிலே உயிரிழந்த மாவீரர்கள் நினைவுகூரப்பட வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

அந்தவகையில், இறுதி நாளான 27 ஆம் திகதி நல்லூர் ஆலய முன்றலில் அனுஸ்டிக்கப்படும். மாவீரர்களின் குடும்பங்கள் மற்றும் பொது மக்கள் அன்றையதினம் மாவீரர்களுக்கான வீரவணக்கத்தினை செலுத்த முடியும். ஒன்று கூட முடியாதவர்கள், வடகிழக்கு தமிழ் தாயகத்தில் தாம் விரும்பும் பொது இடத்தில் மற்றும் வீடுகளில் வீரவணக்கத்தினைச் செலுத்த முடியும் என்பதுடன், வீரவணக்கத்தினைச் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்.

27 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இறந்த ஒருவரை நினைவுகூறுவது எமது உரிமை. ஊயிரிழந்தவர்களை நினைவுகூறுவுதற்கு யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை.

1971 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தினை மேற்கொண்ட ஜே.வி.பி கிளர்ச்சியாளர்கள் தற்போது அந்த நினைவு தினங்களை அனுஸ்டித்து வருகின்றார்கள். அதேபோன்றே, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மே 17 ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்படுகின்றதென, ஆயுதப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற போது, ஆயுதப் போராட்டக்காரர்களை நினைவுகூருகின்றோம் என்ற பிரச்சாரம் விசமதனமானது. வேண்டுமென்றே எமது மக்களை பயபீதியில் வைத்திருக்க முயற்சிக்கின்றார்கள் என்றே பார்க்கத் தோன்றுகின்றது. எனவே, மாவீரர் தினம் அனுஸ்டிப்பதென்பது எமது உரிமை. இந்த உரிமையை யாராலும் தடுக்க முடியாது” எனவும் கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டிருந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*