நடுரோட்டில் இளைஞனைத் தாக்கியதாக நடிகர் சூர்யா மீது புகார்

21MP_suriya_1_JPG__2875860fநடிகர் சூர்யா தன்னை கன்னத்தில் அறைந்ததாக பிரேம்குமார் என்ற கால்பந்து வீரர் புகார் அளித்துள்ளார்.

போலீஸில் தந்துள்ள புகாரில், அடையார் கால்பந்து மைதானத்திலிருந்து பிராட்வே திரும்பிக் கொண்டிருக்கும்போது பிரேம்குமாரும் அவர் நண்பரும் சென்று கொண்டிருந்த பைக், முன்னால் சென்ற காரின் மீது மோதியுள்ளது.

அந்தக் கார் திடீரென பிரேக் அடித்ததால் இந்த விபத்து நடந்துள்ளது. பிரேம்குமார் மோதிய அதிர்ச்சியில் கீழே விழுந்துள்ளார். காரை விட்டு இறங்கிய பெண்மணி இவர்களை திட்டியுள்ளார். அங்கிருந்த சில கடைக்காரர்கள் இளைஞர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.

அப்போது அந்தப் பக்கம் காரில் வந்த நடிகர் சூர்யா, தனது வண்டியிலிருந்து இறங்கி வந்து, பெண்மணிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

பேசிக்கொண்டிருக்கும் போதே, சூர்யா தன்னை கன்னத்தில் அறைந்து, நடு ரோட்டில் பெண்மணியிடம் ஏன் தகராறு செய்கிறீர்கள் எனக் கேட்டதாக பிரேம்குமார் புகாரில் தெரிவித்துள்ளார். இந்தப் புகார் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகர் சூர்யாவின் தரப்பும் விளக்கம் அளித்துள்ளது. சூர்யாவின் மேனேஜர் கூறுகையில், “அந்த இளைஞர்கள் இருவரும் ஒரு வயதான பெண்மணியை பைக்கில் இடித்துள்ளனர். இடித்ததோடு அந்தப் பெண்மணியை அச்சுறுத்தியுள்ளனர்.

அப்போது அந்த வழியே சென்ற சூர்யா வண்டியை நிறுத்தி இந்த இளைஞர்களை கேள்வி கேட்டுள்ளார். உடனே அது குறித்து காவல்துறையிடமும் தகவல் அளித்து விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். அவர் அங்கு இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, அவருக்கெதிராகவே இந்த இளைஞர்கள் இருவரும் சூர்யாவுக்கு எதிராக புகார் பதிவு செய்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.

புகார் வாபஸ்

தன்னை தாக்கியதாக நடிகர் சூர்யா மீது போலீஸில் புகார் கொடுத்த இளைஞர் பிரேம்குமார், இன்று மாலை புகார் மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டதாக சாஸ்திரி நகர் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*