தேசியத்திற்கு பாதிப்பாக அமையும் எந்த ஒரு உடன்படிக்கையிலும் அரசாங்கம் கைச்சாத்திடாது!

தேசிய பொருளாதாரத்திற்கு அல்லது தேசிய கலாசாரத்திற்கு பாதிப்பாக அமையும் எந்தவொரு உடன்படிக்கையிலும் எந்தவொரு நாட்டுடனும் கைச்சாத்திடப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 
இந்தியாவுடன் செய்து கொள்ளப்படவுள்ள ஒரு உடன்படிக்கை தொடர்பில் அரசியல் எதிர் தரப்பினர் பல்வேறு பிழையான கருத்துக்களை முன்வைத்து வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்று நாட்டில் உள்ள ஊடகச் சுதந்திரத்தின் காரணமாக இத்தகைய கருத்துக்களை முன் வைக்கக்கூடிய சூழல் இருந்த போதும் அவற்றில் எவ்வித உண்மைகளும் இல்லை என தெரிவித்தார்.

பலாங்கொடையில் கொங்கிரிட் உற்பத்தி தொழிற்சாலையை நேற்று (12) காலை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அண்மையில் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து நாட்டில் உண்மையான நிலை தொடர்பில் அறிந்து கொண்டதுடன், தன்னை சந்தித்த சந்தர்ப்பத்தில் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டதாக இங்கு தெரிவித்த ஜனாதிபதி, நாட்டை முன்கொண்டு செல்வதற்கு தேவையான சகல உதவிகளையும் வழங்குவதற்கு அவர் உறுதியளித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இன்று எந்தவொரு நாட்டினதும் அல்லது எந்தவொரு நபரினதும் ஒரு கட்டளை அல்லது அழுத்தம் இலங்கைக்கு கிடையாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சில தலைவர்கள் பல்வேறு பத்திரிகைகளின் ஊடாக அது தொடர்பாக கருத்துக்களை முன்வைத்த போதும் இன்று தனது அரசாங்கத்திற்கு முகம்கொடுக்க வேண்டியிருப்பது அவர்களது பிழையான செயற்பாடுகளின் பிரதிகூலமான விளைவுகளுக்காகும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த நாட்டு மக்கள் தன்னை ஜனாதிபதி பதவிக்கு நியமித்தது நாட்டை முன்கொண்டு செல்வதற்காகவே அன்றி எதிர் தரப்பினர் குறிப்பிடுவது போன்று நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதற்கல்ல எனத் தெரிவித்த ஜனாதிபதி, எவ்வித வெளிநாட்டு தலையீடுகளுக்கும் அடிபணியாது நாட்டினதும் மக்களினதும் கௌரவத்தை பாதுகாப்பதற்கு உயிரைத் தியாகம் செய்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டார்.

தாம் இன்னும் சில நாட்களில் மேற்கொள்ளவுள்ள ஜெர்மனி மற்றும் ஒஸ்ரியா ஆகிய நாடுகளுக்கான விஜயத்தின் போது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக அந்த நாடுகளுடன் பல்வேறு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட உள்ளதாகவும் குறிப்பிட்டார். இன்று இணையப் பாவனை தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனாதிபதி, பாடசாலை பிள்ளைகள் முதல் இராணுவத்தினர், அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் வரை எல்லோரையும் சீரழிக்கின்ற வகையில் இன்று சிலர் இணையத்தைப் பயன்படுத்துவதாகவும் இணையத்தை உருவாக்கியிருப்பது நல்ல விடயங்களுக்காவேயன்றி சமூகத்தை சீரழிப்பதற்காக அல்ல என்றும் குறிப்பிட்டார்.

அமைச்சர்களான டபிள்யு.டி.ஜே.செனவிரத்ன, ஹரின் பிரணாந்து, பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவித்தான, இத் தொழிற்சாலையின் தலைவர் சேனக குருசிங்க ஆகியோரும் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*