கைதிகளை விடுவியுங்கள் – பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குங்கள் – வடக்கு முதல்வர் ஜனாதிபதியிடம் கோரிக்கை

எந்தவித குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படாது முழுக்க முழுக்க சந்தேகத்தின் அடிப்டையில் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அத்தனை இளைஞர்களையும் விடுவிக்கும் முயற்சிகளை விரைந்து மேற்கொள்ளுங்கள் என்று  ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்த வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தாமதமின்றி கைவிடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட   இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 700 ஏக்கர் காணிகள் மற்றும் நடேஸ்வராக் கல்லூரி, நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயம் ஆகியன மாட்சிமை தங்கிய ஜனாதிபதி அவர்களால் பொதுமக்களிடம் மீளக் கையளிக்கும் நிகழ்வு
காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியில்
12.03.2016 சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு வரவேற்புரை நிகழ்த்தும்போதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவரது உரையின் முழுவடிவம் வருமாறு,

குருர் ப்ரம்மா……………

மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களே, அமைச்சர் கௌரவ னு.ஆ. சுவாமிநாதன் அவர்களே, அரசியல் பிரமுகர்களே, உயர் அதிகாரிகளே மற்றும் எனது அன்பான சகோதர சகோதரிகளே!

வலிகாமம் வடக்கு பிரதேசங்களிலிருந்து 1990ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெயர்ந்து சொல்லொணாத் துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் பொது மக்களில் ஒரு பகுதியினருக்குக் காணிகள் மீளக் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெறுகின்றது. 700 ஏக்கர் விஸ்தீரணமுள்ள காணிகளை மீளக் கையளிப்பதற்காக இங்கே வருகை தந்திருக்கும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களை வடபகுதி மக்கள் சார்பில் வருக வருக என வரவேற்பதில் மகிழ்வடைகின்றேன். அவருடன் இணைந்து இந்த நல்ல நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருக்கும் அமைச்சர் கௌரவ னு.ஆ.சுவாமிநாதன் அவர்களையும் வருக வருக என வரவேற்பதில் மகிழ்வடைகின்றேன். அவரதும் அவரின் அலுவலர்களதும் அயராத உழைப்பே இன்று இந்த சிறிய அளவு காணியைக் கூட மீளப்பெற வைத்துள்ளது. அதை நாங்கள் மறந்துவிடக் கூடாது. மற்றும் இங்கே வருகை தந்திருக்கும் அனைத்து அரசியல் பிரமுகர்கள், உயர் அதிகாரிகள் அனைவரையும் வரவேற்பதில் மகிழ்வடைகின்றேன்.

காலங்கடந்தாவது மொத்தம் 553 குடும்பங்களுக்குரிய 700 ஏக்கர் காணிகள் மற்றும் நடேஸ்வராக் கல்லூரி, நடேஸ்வரா கனி~;ட வித்தியாலயம் ஆகியவற்றை பொதுமக்களிடம் மீளக் கையளிக்கும் இந்த நல்ல நிகழ்வின் மூலமாக அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் தான் தந்த வாக்குறுதிகளை மெல்ல மெல்ல நிறைவேற்ற எத்தனித்து வருகின்றார் என்று கூறலாம். இதற்கு எமது மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களே, நீங்கள் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து தமிழ் மக்கள் படிப்படியாக சில நன்மைகளைப் பெற்றுவருவதை நன்றியறிதலுடன் நினைவுகூருகின்ற இந்த நல்ல சந்தர்ப்பத்தில் எமது மக்களின் துன்ப துயரங்களையும் அவர்களின் அல்லற்பாடுகளையும் நீங்கள் நேரில் கண்டும் விசாரித்தும் அறிந்து கொண்டவர் என்ற வகையில் இந்த மக்களுக்கான ஒரு இயல்பு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கின்றது என்பது தான் யதார்த்தம் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அதை நீங்கள் செவ்வனே செய்து முடிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள், அவர்கள் எந்த நேரமும் சிங்கள் மக்களை வெறுப்புணர்வுடன் நோக்குகின்றார்கள் என்ற ஒரு தவறான கருத்து எமது முன்னைய அரசியல் தலைவர்களால் சிங்கள மக்கள் மத்தியில் வேண்டுமென்றே விதைக்கப்பட்டிருந்தது. இத் தவறான கருத்தை சிங்கள மக்களின் மனத்திலிருந்து நீக்குவதற்கு இன்றைய அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும். அரசியல் இலாபத்துக்காகவே அவ்வாறு அவர்கள் செய்தார்கள் என்பதை சிங்கள மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இராணுவத்தினரை நாம் வெறுக்கவில்லை ஆனால் இராணுவ கெடுபிடிகளை முற்றாக எதிர்க்கின்றோம்.

சிங்கள மக்களை நாம் எதிர்க்கவில்லை. பேரினவாத அடக்குமுறைகளை மட்டுமே கண்டிக்கின்றோம் என்ற செய்தியை அனைத்து சிங்கள மக்களுக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.

இன்று விடுவிக்கப்பட்ட 700 ஏக்கர் காணிகளைப் போன்று வலிவடக்கில் மட்டும் எஞ்சியுள்ள 4700 ஏக்கர் காணிகளையும் படிப்படியாக ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் மீள கையளிக்க ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். அதைவிட வடமாகாணம் முழுவதும் பல்லாயிரம் ஏக்கர் காணிகள் விடுபடவேண்டிய நிலையில் உள்ளன.
காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி, நடேஸ்வராக் கனிஷ்ட பாடசாலை ஆகியன விடுவிக்கப்பட்டதன் மூலம் இப்பகுதி மாணவர்களுக்கு நன்மை பயக்கப்பட்டுள்ளதுடன் கிட்டத்தட்ட 180 ஏக்கர் காணியும் மீளக் கையளிக்கப்பட்டுள்ளன. இதே போன்று இந்தப்பிரதேசத்தில் இன்னும் 200 ஏக்கர் காணிகளை விடுவிக்க அரசு முன்வருமானால் காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலையும் வெளியே வந்துவிடும். இதன் மூலம் இத்தொழிற்சாலை மீள இயங்க அல்லது வேறு ஏதாவது தொழிற்சாலைகள் அமைக்க ஏதுவாக இருக்கும். இப்பகுதியில் மேலும் சுண்ணாம்புக் கற்கள் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாது. ஆனால் மூலப்பொருட்களை வேறு பகுதிகளிலிருந்து எடுத்துவந்து இத்தொழிற்சாலையை இயக்கலாம் அல்லது பிறிதொரு தொழிற்சாலையாக மாற்றலாம்.

கடைசியாக எமது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர்கள் பற்றி ஒரு வார்த்தை.  எந்தவித குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படாது முழுக்க முழுக்க சந்தேகத்தின் அடிப்டையில் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அத்தனை இளைஞர்களையும் விடுவிக்கும் முயற்சிகளை விரைந்து மேற்கொள்ளுங்கள் என்று இத்தருணத்தில் கேட்டுக்கொள்கின்றேன். பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தாமதமின்றி கைவிடுங்கள்  என்றும் கேட்டுக் கொள்கின்றேன். இலங்கையின் வரலாற்றில் சாதனைகள் படைத்த ஜனாதிபதி என்று உங்களை சரித்திரம் அடையாளாம் காட்ட வேண்டும் என்று பிரார்த்தித்து ஆங்கிலத்தில் ஒருசில வார்த்தைகள் கூறுவேன்.
நன்றி

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*