குரு பெயர்ச்சி பலன்கள் 2016 – 2017 – கும்பம்

1111. கும்பம்

மற்றவர்களின் வெற்றிக்காகப் பாடுபடுபவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு குடும்பத்தில் மகிழ்ச்சியையும், பதவி, புகழ், கௌரவத்தையும் தந்த குருபகவான் இப்போது 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் மறைவதால், எதிலும் பொறுமையும் நிதானமும் தேவை. நேரம் காலம் பார்க்காமல் உழைக்கவேண்டி இருக்கும். எவ்வளவுதான் பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். எந்த ஒரு விஷயத் தையும் குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவு செய்யுங்கள். எதிர்காலத்தைக் குறித்த அச்சம் வந்து போகும். வழக்குகளில் பிற்போக்கான நிலையே காணப்படும். உங்களது திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.

குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டைப் பார்ப்பதால், பிரச்னைகள் வெகுவாகக் குறையும். வெளியூர்ப் பயணங்களால் நிம்மதி கிட்டும். வேற்று மொழியினரின் ஆதரவு கிட்டும். கடந்த காலத்தில் உங்களால் பயனடைந்தவர்கள் தற்சமயம் உங்களுக்கு உதவ வாய்ப்பிருக்கிறது. புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

குரு பகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால், பணவரவு திருப்திகரமாக இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள், விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பெருகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 4-ம் வீட்டைப் பார்ப்பதால், எதிர்ப்புகள் குறையும். முடிக்க முடியுமா என்று நினைத்த பல காரியங்கள் இப்போது முடியும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் சப்தமாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 2.8.16 முதல் 19.9.16 வரை குருபகவான் பயணிப்பதால், கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல் விலகும். அடகிலிருந்த நகைகள், பத்திரங்களை மீட்க உதவிகள் கிட்டும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும்.

20.9.16 முதல் 24.11.16 மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்கள் சஷ்டமாதி பதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். அவ்வப் போது இனம் தெரியாத அச்சம் ஏற்படும். சிலருக்கு அல்சர் வர வாய்ப்பிருக்கிறது.

உங்கள் தைரிய ஸ்தானாதிபதியும்-ஜீவனாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.16 முதல் 16.1.17 மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை குருபகவான் செல் வதால், நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெறும். இளைய சகோதர வகையில் மதிப்பு கூடும். வழக்குகள் சாதகமாகும்.

17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 9-ம் வீட்டில் குரு அமர்வதால், அடிப்படை வசதி, வாய்ப்புகள் பெருகும். தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால், உங்களுக்கு சிலர் உதவுவதாகச் சொல்லி உபத்திரவத்தில் சிக்க வைப்பார்கள். அவ்வப்போது உணர்ச்சிவசப்படு வீர்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். ஆன்மித்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

வியாபாரத்தில், மற்றவர்களை நம்பி புது முயற்சிகளில் இறங்க வேண்டாம். போட்டிகளால் லாபம் குறையும். கடையை மாற்ற வேண்டிய நிர்பந்தம் சிலருக்கு உண்டாகும். கமிஷன், பெட்ரோ கெமிக்கல், மின்சார சாதனங்கள், மர வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை சேர்த்து பார்க்க வேண்டி வரும். சிலர் உத்தியோகத்தின் பொருட்டு அயல்நாடு செல்வீர்கள். நியாயமான பதவி உயர்வு, சம்பள உயர்வைக்கூட போராடிப் பெற வேண்டி வரும்.

மாணவ-மாணவிகளே! மறதி ஏற்படும் என்பதால், பாடங்களை கவனமாகப் படித்து, அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்வது அவசியம்.

கலைத்துறையினரே! சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். சின்னச் சின்ன வாய்ப்பு களையும் அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, விடாமுயற்சியால் உங்களின் இலக்கை எட்டிப் பிடிக்க வைப்பதாக அமையும்.

பரிகாரம்: வேதாரண்யம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் வேதநாயகி உடனுறை திருமறைக்காடரை பூசம் அல்லது சுவாதி நட்சத்திர நாளில் பாலாபிஷேகம் செய்து வணங்குங்கள். வாழ்வில் திருப்பம் உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*