கருத்துகளுக்கு ஆயுதங்கள் மூலமோ, ஆட்கடத்தல்கள் மூலமோ நாம் பதிடி கொடுப்பதில்லை – டக்ளஸ் தேவானந்தா

காணாமற் போனோர் தொடர்பில், ஜனாதிபதி ஆணைக் குழுவிலும், நாடாளுமன்றத்திலும், இவற்றுக்குப் புறம்பாகவும் எமது கட்சி மீது குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கருத்துகளுக்கு கருத்துகளால் பதில் கொடுத்து நாம் செயற்பட்டு வருகின்றோமே அன்றி, கருத்துகளுக்கு ஆயுதங்கள் மூலமோ, அல்லது, இவ்வாறான ஆட்கடத்தல்கள் மூலமோ ஒருபோதும் பதில் கொடுத்து நாம் செயற்படுவதில்லை. இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்பதில் நாம் நம்பிக்கைக் கொண்டவர்களுமல்லர்.

அத்துடன், ஆட்கடத்தல்கள், மனிதப் படுகொலைகள், கொள்ளை, கப்பம் பெறல், வரி அறவிடல் போன்ற செயற்பாடுகள் எமது கட்சியின் கொள்கையோ, வேலைத் திட்டமோ அல்ல. இருந்தும், இவ்வாறான பல்வேறு குற்றச் சாட்டுக்கள் திட்டமிடப்பட்ட ரீதியில் அவ்வப்போது எம்மீது சுமத்தப்பட்டு வந்துள்ள நிலையில், முறையான சட்ட ரீதியிலான விசாரணைகளின் பின்னர், காலம் எங்களை நிரபராதிகளாக்கி நிரூபித்து வருகின்றது. எனவே, மேற்படி காணாமற் போனோர் விடயம் தொடர்பிலான குற்றச் சாட்டுக்கள் குறித்து உடனடி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு அறிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் சர்வ கட்சிகளின் கூட்டத்திலும் வலியுறுத்தப் போவதாகக் கூறியுள்ள செயலாளர் நாயகம் அவர்கள், மேலும் தெரிவிக்கையில், காணாமற் போனோர் தொடர்பில் முறைப்பாடுகள் செய்யும் ஒரு சிலர் எமது கட்சி மீது குற்றச் சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

வடக்கில் 3,000 பேர் காணாமற் போனதற்கு ஈ.பி.டி.பி.யே காரணமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடாளுமன்றத்தில் அரசியல் குற்றச்சாட்டொன்றை முன்வைத்து வருகின்றனர்.

எனவே, இக் குற்றச் சாட்டுகள் தொடர்பில் இவர்களிடம் இருக்கக்கூடிய ஆதாரங்கள் பெறப்பட்டு, ‘எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்ற குறளுக்கு ஒப்ப உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும். இல்லையேல், தொடர்ந்தும் எம் மீது இவ்வாறான குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்படக்கூடிய நிலையே காணப்படுகிறது.

அறியாமையின் காரணமாகவும், தூண்டப்பட்டும், உள்நோக்கங்களாலும் எம்மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. எனவே, முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக் குழு, வெறுமனே முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளில் மாத்திரம் ஈடுபடாமல், முறைப்பாடுகளின் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து, வெளிக்கொணர்வது தொடர்பில் உரிய நடைமுறைகளோடு அணுகுவது அவசியமாகும். குறிப்பிட்ட சம்பவங்களின் உண்மைத் தன்மைகள் மக்களுக்கு வெளிப்படுத்தப்படாத நிலையில் மக்கள் தவறாக வழிநடத்தப்படக்கூடிய சூழ்நிலையே தொடர்கிறதென குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*