ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் இருந்து ஸ்ரீசாந்த் உள்பட 36 பேர் விடுதலை!

புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜய் சண்டிலா உள்பட 36 பேர் மீதான குற்றச்சாட்டுகளில் ஆதாரம் இல்லை என்று கூறி அவர்களை விடுதலை செய்து டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
 
6வது ஐபிஎல் போட்டியில், லஞ்சம் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட ஓவரில் ரன்களை வழங்க சம்மதம் தெரிவித்த குற்றச்சாட்டுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா மற்றும் அங்கீத் சவாண் ஆகியோர் கடந்த மே 16ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். மேலும், 11 சூதாட்டத் தரகர்களும் கைது செய்யப்பட்டனர். 

இதையடுத்து ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா மற்றும் அங்கீத் சவாண் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வாழ்நாள் தடை விதித்தது.

இது தொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா மற்றும் அங்கீத் சவாண் உள்பட 36 பேரை விடுதலை செய்து பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

குற்றச்சாட்டுகளை காவல்துறையால் நிரூபிக்க முடியவில்லை என்று கூறிய நீதிமன்றம், 36 பேர் மீதான குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்துள்ளது.
அஜித் சண்டிலா

இந்நிலையில் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து அஜித் சண்டிலா கூறுகையில், ”ஐ.பி.எல் சூதாட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. என் மீது சூதாட்ட வழக்கு தொடரப்பட்டது மோசமான கனவு” என்றார்.

ஸ்ரீசாந்த்

ஸ்ரீசாந்த் கூறுகையில், ”என் மீதான குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதால், கிரிக்கெட் பயிற்சியை மீண்டும் தொடங்க விருப்பமாக இருக்கிறேன். அதற்கு பி.சி.சி.ஐ அனுமதி அளிக்கும் என்றும் நம்புகிறேன்” என்றார்.

அங்கீத் சவான்

அங்கீத் சவாண், ”ஐ.பி.எல் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவால் ஏற்கனவே இருந்த பதற்றமும், அதிருப்தியும் முடிவுக்கு வந்திருக்கிறது. மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்குவேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*