இலங்கைக்கான சர்வதேச பொருளாதார நலன்களில் தமிழர் நிலைப்பாடு? – நிருபா குணசேகரலிங்கம்

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நிலைமைகளை கையாளுவதற்கு விரைவான நல்லிணக்க முயற்சிகள் தேவையாகவுள்ளன. அதாவது, இந்த ஆண்டிற்குள் ஜி.எஸ்.பி. பிளஸ் (விருப்பத்தேர்வுகளின் பொதுமைப்படுத்தப்பட்ட முறைமை) வரிச்சலுகையினை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டு இருக்கின்றது. இவ் ஆண்டுக்குள் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை கிடைக்கப் பெறும் என்ற நம்பிக்கையையும் விருப்பத்தையும் கூட அரசாங்கம் பகிரங்கமாகவே வெளிப்படுத்தியுள்ளது.  அதேபோன்று மீன்பிடி ஏற்றுமதி ரீதியான நடவடிக்கைகளிலும் முன்னேற்றம் காண வேண்டிய தேவை பொருளாதார ரீதியில் அரசாங்கத்திற்கு எழுந்துள்ளது. இவ்வாறாக, பொருளாதார நலன்களை சர்வதேசத்திடம் இருந்து பெறுவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் வெகுவாக ஈடுபட்டு வருவதனைக் அண்மைய போக்குகளில் காண முடிகின்றது. 
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை என்பது, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஏற்றுமதியின் போதான விசேட திட்டாகும். இதன் மூலம் உள்நாட்டு ஆடை ஏற்றுமதி கைத்தொழில்; துறை, அதிக நன்மைகளைப் பெற்று வந்தது. எனினும் இவ்  ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலப்பகுதியில்  இழக்கப்பட்டது. மனித உரிமைகள் விடயத்தில் மேம்போக்கினை கடைப்பிடிப்பதற்கு அவ் அரசாங்கம் முன்வராமையினாலேயே அவ் இழப்பு நேர்ந்தது.
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையினைப் பெற்றுக்கொள்வதற்கு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் ஐ.நா மற்றும் சர்வதேச தொழிலாளர் தாபனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டி உள்ளன. மனித உரிமைகள் , நல்லாட்சிச் செயன்முறை மற்றும் சூழல் பாதுகாப்பு என்பவை தொடர்பான குடியியல் மற்றும் அரசியல் பொது இணக்க ஒப்பந்தம் ,பொருளாதாரம் , சமூகம் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பொது இணக்க ஒப்பந்தம், இனப்படுகொலைகளைத் தடுத்தல் மற்றும் இனப்படுகொலைகளில் ஈடுபடுவோர்களைத் தண்டிப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்தம் , இனப்பாகுபாடுகள் மற்றும் , பெண்களுக்கெதிரான பாகுபாடுகளை ஒழிப்பதற்கான சர்வதேச ஒப்பந்தம், சித்திரவதை மற்றும் ஏனைய கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது தரக்குறைவாக நடத்துதல் – தண்டனை என்பவற்றுக்கு எதிரான சர்வதேச ஒப்பந்தம் என்பவற்றை உள்ளடக்கியதாக இருபத்து மூன்று மிக முக்கிய சர்வதேச பொது இணக்கங்களை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் நடைமுறைப்படுத்த சர்வதேசம் ஜி.எஸ்.பி. பிளஸ்க்கு உள்ளாக எதிர்பார்க்கின்றது.
இந் நடைமுறைகள் யுத்தத்தின் போதும் யுத்தத்தின் பின்னரும் மீறப்பட்டதன் விளைவும் மீறப்ப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புச் சொல்லாமை, பயங்கரவாதச் சட்டம் போன்ற கடும்போக்கன நடவடிக்கைகளில் தீவிர ஆர்வம் செலுத்தியமை என்பன கடந்த ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியாக அமைந்தன.  புவிசார் அரசியலில் அவ் அரசாங்கம் கொண்டிருந்த நிலைப்பாடுகளும் இலங்கையை மேற்குலகில் இருந்து கடந்த ஆட்சியில் தனிமைப்படுத்தியது. 
ஆட்சியில் இருந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கடந்த 2010 இல் ஜி.எஸ்.பி வரிச்சலுகையினை நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த நிபந்தனைகளை “நாட்டின் இறைமையினை மீறும் ஏற்றுக் கொள்ள முடியாத நிபந்தனைகள்” எனத் தெரிவித்து நிராகரித்திருந்தது. அவ்வாறு நிராகரித்தமை மாத்திரம் அன்றி இவ் வரிச்சலுகையை பெற முடியாது போக உள்நாட்டு விவாதங்களுக்கு முகங்கொடுக்கும் நோக்கில்,  ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை மூலம் வருடாந்தம் 85 மில்லியன் யுரோக்களே பெறப்பட்டன எனவும் அதனை தாம் தற்போது வேறு மார்க்கங்களின் ஊடாகப் பொறுவதற்கு முயற்சிப்பதாகவும் தெரிவித்திருந்தது.
இவ்வாறாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. வரிச்சலுகையினை இழந்த போதும் அதனால் தமக்கு பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்றே இலங்கை மத்திய வங்கியும் ஏனைய நிறுவனங்களும் கூட அப்போது தெரிவித்து வந்தன. ஆடை உற்பத்தித் துறையில் இது வெகுவாகத் தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தும் இலங்கை ஏற்றுமதி புடவைக் கைத்தொழிலாளர் சங்கமும் ஜி.எஸ்.பி வரிச்சலுகை இழக்கப்பட்டதனால் தமக்கு பாதிப்பு இல்லை எனத் தான் தெரிவித்திருந்தது. இதற்கு நிறுவனங்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்தமைiயும் காரணமாகும்.
மகிந்தவின் ஆட்சியில் இழக்கப்பட்ட வரிச்சலுகையினை ஆட்சி மாற்றத்தின் பின்னர்;; பெறுவதிலும் சிக்கல்கள் இருந்து கொண்டே தான் வருகின்றன. இவ் வரிச் சலுகையை இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் கடந்த வருட இறுதியில் கருத்துத் தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் டேவிட் டெலி, இடை நிறுத்தப்பட்ட ஜி.எஸ்.பி. வரிச் சலுகையினைத் திருப்பிக்கொப்பது பற்றி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. இந்த நடை முறை விரைவாக மேற்கொள்ளக் கூடியதல்ல. மாறாக ஓர் சிக்கல் மிக்க நடைமுறை எனவும் தெரிவித்திருந்தார். 
எனினும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையைப் பெறுவதற்கு மனித உரிமைப் பிரச்சினைகள் யாவும் முடிவுக்கு வந்துள்ளது என்றும் இதனை பெறுவதற்கு வெளிவிவகார அமைச்சர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் கடந்த வருட இறுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். அடிப்படையில் நாட்டில், தற்போதும் பொறுப்புச் சொல்ல வேண்டிய பலவிடயங்கள் நிலுவையில் இருக்கும் போது மனித உரிமைப் பிரச்சினைகள் முடிவுக்கு வந்துள்ளது என்ற பிரதமரின் கருத்தை மிகைப்படுத்தப்பட்ட கருத்தாகவே பார்க்க வேண்டியுள்ளது.
ந்ல்லிணக்கத்திற்காக மேற்கொள்ளும் திட்டங்கள் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையைப் பொறுவதற்காக நிபந்தனையாகவும் உள்ளன.  தற்போதைய அரசாங்கம் அவற்றில் அவதானம் செலுத்துவதை அவதானிக்க முடிகின்றது. அதாவது அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை மாற்றியமைப்பதில் கவனம் செலுத்துகின்றது. ஐக்கிய நாடுகள் சபையுடன் மனித உரிமைகள் விடயத்தினில் ஒருங்கிணைந்து செயற்பட ஆமோதிக்கின்றது. அடிப்படையில், ஜி.எஸ்.பி பிளஸ்க்கு தேவையானவற்றினை மேற்கொள்வதில் அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது. கடந்த நவம்பரில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியம், மேற்படி நிபந்தனைகளை தனது அறிக்கையில் இலங்கையில் எதிர்பார்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவற்றுக்கு மேலாக இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தனது கோரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதிலிருந்து பொருளாதார நலன்களுக்குள்ளாக சர்வதேச அரசியல் நகரும் விதம் கூர்ந்து அவதானிக்கத்தக்கது.
தற்போதைய நிலையில் ஜெர்மன் ஊடாக ஜி.எஸ்.பி வரிச்சலுகையிகைப் பொறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையினைப் பெற்றுக்கொள்வதற்கு ஜெர்மன் ஆதரவளிக்கும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் கர்சா டி சில்வா தெரிவித்திருக்கின்றார். கடந்த காலங்களில் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையினைப் பொறுவதற்கு ஐரோப்பிய நாடாளுமன்ற அனுமதி தேவையில்லை எனவும் தற்போது அதனையும் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாகவும் இந் நிலையில் ஜெர்மனியின் ஒத்துழைப்பு இலங்கைக்கு சாதகமாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஏற்றுமதியில் ஐந்து சதவீதத்தினை கொள்வனவு செய்யும் நாடு ஜெர்மனி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில், ஜெர்மன் ஜனாதிபதி எஞ்சலோ மார்கெல்லை இலங்கை ஜனாதிபதி சந்தித்து பேசியுள்ளார். பொருளாதார முன்னேற்றங்கள் பற்றி இருதரப்பு கலந்துரையாடல்கள் நடைபெற்றன. 
அடுத்த படியாக மீன் ஏற்றுமதி தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகள் பற்றியும் ஒஸ்திரியா ஜனாதிபதி கெய்ன் பிஸரைச் சந்தித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடியுள்ளார். இவ்வாறாக அண்மைய கலப் போக்கில் அரசாங்கம் ஏற்றுமதியில் சர்வதேச சந்தையைப் பெறுவதில் அதிக கரிசணை செலுத்தி வருகின்றது. இக் கரிசணைக்கு தடைகள் காணப்படாத வண்ணம் நாட்டில் ஏற்படுத்தப்பட்டு வரும் மாற்றங்களை வெளிப்படுத்தி வருகின்றது. 
நாட்டின் பொருளாதார நலன்களை கவனத்தில் கொண்டும் சில விடயங்களை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் முயற்சிக்கின்றது. எது எப்படியிருந்தபோதும் இவ் அரசியல் முயற்சிகள் தமிழ் மக்களுக்கு நன்மையளிப்பதாக இருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நல்லிணக்கத்திற்கான  முன்னேற்றகரமான விடயங்கள் என்ற அடிப்படையில் முழுமையான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட முன்னர் சர்வதேசம் தன் பிடியாகவுள்ள விடயங்களை முழுமையாக இலங்கையிடம் விட்டுக்கொடுப்பது நாட்டில்; ஓர் சாதக கூூழ்நிலைக்கானதாக அமையுமா என்ற கேள்வியுள்ளது?  
இலங்கைக்கு அழுத்தம் தரும் விடயங்களை, தமக்கு ஓர் நிரந்தரத் தீர்வு முன்வைக்கப்படாமல் முழுமையாக விட்டுக்கொடுப்பது தமிழ் மக்களைப் பொருத்தளவில் உள்நாட்டில் நியாயமானதுமான மாற்றங்களைக் கொண்டுவராது என்ற பயமும் இருக்கின்றது. போரின் பின்பாக அரசியல் தீர்வை முன்வைக்க கிடைத்த சந்தர்ப்பங்களை கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் உதாசீனம் செய்தது. அதன் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில், சமாதானத்தின் பின்னாராக முழு இலங்கையும் அனுபவிக்க வேண்டிய நலன்களை இந்த நல்லிணக்கத்தினை அடைவதற்கான நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இக் காலகட்டத்திலேயே வழங்கிவிடுவது பொருத்தமானதாக இருக்குமா என்பது கேள்வியே! 
இவ்வாறாக நிலைமைகள் காணப்பட்ட போதும் நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்திற்காக தற்போது ஏற்படுத்த முயற்சிக்கப்படும் விடயங்கள் எல்லாம் ஓர் ஆரம்ப கட்ட முயற்சியாகவே உள்ளன. இம் முயற்சிகள் நீடித்து நிற்கத்தக்க தீர்வை தருவதற்கு முன்பாக, பொருளாதாரம் தொடர்பில் இலங்கைக்கு அழுத்தமாகவுள்ள விடயங்கள் யாவும் தணிந்து போவதை தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வு வழங்கப்படுவதில் எவ்வாறான விளைவினை ஏற்படுத்தும் என்பது ஆராயப்படவேண்டியதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*