இறந்தவர்களை நினைவு கூர்வது என்பது இறந்த காலத்திலிருந்து பாடங்களைக் கற்பதும்தான்

MAY-18-UNI-600x338இறந்தவர்களை நினைவு கூர்வது என்பது துக்கம் அனுஸ்டிப்பது மட்டுமல்ல அந்த கூட்டுத் துக்கத்தையும் கூட்டுக் கோபத்தையும் ஆக்க சக்தியாக மாற்றுவதும்தான். அதை இவ்வாறு ஓர் அரசியல் ஆக்க சக்தியாக மாற்றுவதென்றால் அந்தத் துக்கம் அல்லது இழப்பு ஏன் ஏற்பட்டது என்பதிலிருந்தும் அதை ஏன் தடுக்க முடியவில்லை என்பதிலிருந்தும் படிப்பினைகளைப் பெறுவதுதான். அதன் மூலம்தான் அவ்வாறான துக்கம் அல்லது பேரிழப்பு இனிமேலும் ஏற்படுவதைத் தடுக்க முடியும். இவ்வாறு இறந்த காலத்தில் இருந்து பாடங்களைக் கற்பது என்பது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இரு பகுதிகளைக் கொண்டது.
முதலாவது பகுதி – முள்ளிவாய்க்காலுக்கு முன்னரான காலகட்டம்.
இரண்டாவது பகுதி – முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான காலகட்டம்.
இதை இன்னும் விளக்கமாகச் சொன்னால் முள்ளிவாய்க்கால் பேரழிவிலிருந்தும் பெரும் தோல்வியிலிருந்தும் கற்பது ஒரு பகுதி. அதன் பின்னரான கடந்த ஏழாண்டுகாலத் தேக்கத்தில் இருந்தும் கற்பது இன்னொரு பகுதி.
கனடாவிலுள்ள வின்சர்; பல்கலைக்கழகத்தைச் சேர்;ந்த கவிஞரும் கலை இலக்கிய அரசியல் செயற்பாட்டாளருமாகிய சேரன் கூறுகிறார். “முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது. இந்த நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை” என்று. கனேடிய எதிர்க்கட்சியும் சில வாரங்களுக்கு முன் அவ்வாறு தெரிவித்திருந்தது. சில மேற்கத்தேய அரசியல்வாதிகளும் அவ்வாறுதான் கூறுகிறார்கள். வடமாகாணசபை அது இனப்படுகொலையே என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது. அந்த இனப்படுகொலையிலிருந்து தமிழர்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் எவை?
இக்கேள்விக்கு விடை கண்டுபிடிப்பதாக இருந்தால் நாங்கள் மேலும் சில விரிவான கேள்விகளைக் கேட்கவேண்டியிருக்கும்.
01.அந்த இனப்படுகொலைக்கு யார் பொறுப்பு?
02. அதற்குரிய அகக்காரணங்கள் எவை? புறக்காரணங்கள் எவை?
03. உலக சமூகத்தால் ஏன் அதைத் தடுக்க முடியவில்லை?
04.உலகப் பொதுமன்றமாகிய ஐ.நா.வால் ஏன் அதைத் தடுக்க முடியவில்லை.? அல்லது ஐ.நா. அதைத் தடுக்க விரும்பவில்லையா?
05. நாலாம்கட்ட ஈழப்போரானது ஓர் இனப்படுகொலையில் முடியப்போகிறது என்பதை முன்கூட்டியே கணிக்கக் கூடியதாக இருந்ததா? அவ்வாறு கணிக்கப்பட்டு இருந்திருந்தால் அது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் அக்காலகட்டத்தில் நடந்தனவா?
06. இல்லை என்றால் அதற்கு யார் பொறுப்பு?
07. அல்லது ஓர் இனப்படுகொலையை முன்கூட்டியே கணிக்க முடியாத அளவுக்கு நிலைமைகள் இருந்தனவா?
08.சக்திமிக்க தமிழ் ‘டயஸ்போரா’வால் ஏன் இனப்படுகொலையைத் தடுக்க முடியவில்லை?
09.தொப்புள்கொடி உறவுகள் என்று அழைக்கப்படும் தமிழகத்தால் ஏன் அதைத் தடுக்க முடியவில்லை?
மேற்கண்ட கேள்விகளுக்கு விடை காணும் பொழுதே மே 18 இல் இருந்து ஈழத்தமிழர்கள் கற்றுக்கொள்ள முடியும். இது முதலாவது பகுதி.
இரண்டாவது பகுதி – மே 18 இற்குப் பின்னரான கடந்த ஏழாண்டுகளாக தமிழ் அரசியல் எவ்வாறு உள்ளது? அது ஏறு திசையில் செல்கிறதா? அல்லது இறங்குதிசையில் செல்கிறதா? தமிழ்ப் பேரம் பேசும் சக்தியானது கடந்த ஏழாண்டுகளாக ஏறிச் செல்கிறதா? அல்லது இறங்கிச் செல்கிறதா? அவ்வாறு இறங்கிச் செல்கிறதெனின் அதற்குரிய அகக் காரணங்கள் எவை? புறக் காரணங்கள் எவை? இக்கேள்விக்குரிய விடையைத் தேடிப் போகின் நாம் முதலாவது பகுதியில் செய்ததைப் போலவே மேலும் சில விரிவான கேள்விகளைக் கேட்கவேண்டியிருக்கும்.
01. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் அறிக்கையானது முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது ஓர் இனப்படுகொலை என்பதை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை? சில மேற்கத்தேய அரசியல்வாதிகள் அவ்வப்போது அது இனப்படுகொலை என்று கூறுகிறார்கள்தான். ஆனால் எந்தவொரு சக்திமிக்க நாட்டினதும் உத்தியோகபூர்வ அறிவிப்புக்களில் ஏன் அவ்வாறு கூறப்படவில்லை? எதிர்க்கட்சிகளில் இருக்கும் பொழுது அவ்வாறு கூறும் அரசியல்வாதிகள் ஆளும்கட்சிக்கு வரும்பொழுது தொடர்ந்தும் அவ்வாறே கூறுவார்களா? அதாவது எந்தவொரு சக்திமிக்க நாட்டினுடையதும் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக அது இன்றுவரையிலும் அறிவிக்கப்படவில்லை. நடந்தது இனப்படுகொலைதான் என்பதை உலக சமூகம் இன்றுவரையிலும் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆயின் நடந்தது ஒரு இனப்படுகொலைதான் என்பதை உலக சமூகம் ஏற்றுக்கொள்ளத்தக்க விதத்தில் சாட்சிகளையும் சான்றுகளையும் ஈழத்தமிழர்களால் முன்வைக்க முடியவில்லையா? அல்லது அது இனப்படுகொலைதான் என்று தெரிந்தும் உலக சமூகமானது அதன் நலன் சார் உறவுகளுக்காக அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றதா? அப்படி என்றால் உலக சமூகமானது அதை இனப்படுகொலை என்று ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு ஈழத்தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?
02. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து ஏழாண்டுகள் ஆகிய பின்னரும் ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்றே பெரும்பாலான உலக நாடுகள் வர்ணிக்கின்றன. நோர்வே, சுவிற்சர்லாந்து போன்ற சில அரிதான புறநடைகளைத் தவிர்த்துப்பார்த்தால் பெரும்பாலான சக்திமிக்க நாடுகள் ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தைப் பயங்கரவாதமாகவே பார்க்கின்றன. ஐ.நா. போன்ற உலகப் பொதுமன்றங்களும் அவ்வாறுதான் பார்க்கின்றன. கடந்த ஏழாண்டுகளில் புலிகள் இயக்கத்தின் மீதான் தடையை எத்தனை நாடுகள் நீக்கியுள்ளன? அவ்வாறு தடைகளை நீக்குவதற்காக தமிழ் டயஸ்போறா முன்னெடுக்கத்த சட்டப்போராட்டங்களில் எத்தனை முழு வெற்றிபெற்றிருக்கின்றன? அவை வெற்றி பெறாததற்குரிய அகக் காரணங்கள் எவை? புறக்காரணங்கள் எவை?
03. தமிழ் டயஸ்போறா மெய்யாகவோ ஒரு சக்திமிக்க தரப்பா? அவர்களால் இனப்படுகொலையைத் தடுக்கவும் முடியவில்லை. அது இனப்படுகொலைதான் என்பதை இன்றுவரையிலும் நிரூபிக்கவும் முடியவில்லை. ஆயின் அது ஒரு ராஜீயச் செல்வாக்குமிக்க சமூகம் இல்லையா? தமிழ் டயஸ்போறாவோடு நெருங்கி உறவாடும் அந்தந்த நாடுகளின் அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களை வாக்கு வங்கிகளாக மட்டும்தான் பார்க்கிறார்களா? அவர்களுடைய வெளியுறவக் கொள்கைத் தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்தவல்ல ஒரு பலத்தை தமிழ் டயஸ்போறா ஏன் இதுவரையிலும் பெறவில்லை? ஆயின் அதை எப்பொழுது பெறும்?
ஒரு ஈழத்தமிழர் மேற்கு நாடுகளுக்குள் நுழையும் பொழுது அவருடைய ஈழத்தமிழ் அடையாளம் விமான நிலையங்களில் இப்பொழுதும் சந்தேகத்துக்குரியதாகவே பார்க்கப்படுகிறது. ஆயின் சக்திமிக்கது என்று கூறப்படும் தமிழ் டயஸ்போறாவால் ஈழத்தமிழர்கள் மீது பொறிக்கப்பட்டிருக்கம் அந்த சந்தேக முத்திரையை ஏன் அகற்ற முடியவில்லை?
04.ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த ஏழாண்டுகளின் பின்னரும் தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதியின் நிலை ஏன் கௌரவமாக இல்லை?. அவமானம் தாங்க முடியாமல் ஓர் அகதி மின்சாரக் கம்பியில் ஒரு வெளவாலைப் போல பாய்ந்து தற்கொலை செய்யும் அளவுக்குத்தானே அங்கே நிலைமைகள் உள்ளன?.
05.ஓர் இனப்படுகொலைக்குப் பின்னரும் தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு சக்திகள் ஏன் பயன்பொருத்தமான ஓர் ஐக்கியத்தை உருவாக்க முடியவில்லை? அல்லது வாக்குவேட்டை அரசியல்வாதிகளின் கைகளில் சிக்கியிருக்கும் ஈழத்தமிழ் பிரச்சினையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவல்ல செயற்பாட்டு இயக்கங்கள் ஏன் அங்கு வெற்றிபெற முடியவில்லை?
06. ஒரு இனப்படுகொலையத் தடுக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சி தமிழகத்திலும் உண்டு. டயஸ்போறாவிலும் உண்டு. அது எவ்வளவு தூரம் ஆக்க சக்தியாக மாற்றப்பட்டிருக்கிறது?
07. தமிழ் மக்கள் கடந்த ஏழாண்டுகளாக எந்த அடிப்படையில் தமது தலைவர்களைத் தெரிவு செய்து வருகிறார்கள்?
08. நந்திக்கடற்கரையில் பெற்ற கூட்டுக்காயங்களிலிருந்தும் கூட்டு மனவடுக்களிலிருந்தும்; ஒரு புதிய தமிழ் அரசியல் கலாச்சாரம் எப்பொழுது ஊற்றெடுக்கும்?
மேற்கண்ட கேள்விகளுக்கான பதில்களைக் தேடிப்போனால் கடந்த ஏழாண்டுகால தேக்கத்திற்குரிய அகப்புறக் காரணிகளை ஈழத்தமிழர்கள் கண்டுபிடிக்க முடியும்.
இக்கட்டுரையானது மேற்படி கேள்விகளுக்கு விடை தரப் போவதில்லை. இறந்தவர்களின் நினைவுகள் இதயத்தை அழுத்தும் ஒரு காலகட்டத்தில் இக்கேள்விகளை எழுப்புவதன் மூலம் தமிழர்களுடைய அரசியலை ஆகக்கூடியபட்சம் அறிவுபூர்வமானதாகவும், விஞ்ஞானபூர்வமானதாகவும் மாற்றலாமா என்ற ஒரு முயற்சியே இக்கட்டுரையாகும். சில நாட்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு மூத்த ஊடகவியலாளர் இக்கட்டுரையாசிரியரைக் கைபேசியில் அழைத்தார். தமிழ்மக்களுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது ஊடக ஊழியர்களை விடவும் ஊடகச் செயற்பாட்டாளர்களே என்று கூறுகிறீர்கள். ஊடகச் செயற்பாட்டாளர் என்றால என்ன? என்று அவர் கேட்டார். தமிழர்கள் சமூகத்திற்கு வெளியே இருக்கும் எதிர்ப்புக்களுக்கு மட்டும்தான் அஞ்சவேண்டியுள்ளதா?சமூகத்திற்கு உள்ளேயே சுயவிமர்சனம் செய்யத்தக்க ஒரு ஜனநாயகச் சூழல் அல்லது ஊடகச் சூழல் இருக்கிறதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

உண்மைதான், ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து ஏழாண்டுகளாகிறது. தமிழர்களுடைய ஆயுதப் போராட்டம் ஏன் தோற்கடிக்கப்பட்டது? எப்படித் தோற்கடிக்கப்பட்டது? என்பது தொடர்பில் வெளிப்படைத் தன்மைமிக்க துணிச்சலான காய்தல் உவத்தல் அற்ற விவாதங்கள் எவையும் இன்றுவரையிலும் நடத்தப்படவில்லை. தாயகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் எவையும் அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதாகத் தெரியவில்லை. இது பற்றி இக்கட்டுரையாசிரியர் கடந்த மாதம் யாழ். இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரின் நூல் வெளியீட்டு விழாவில் கேள்வி எழுப்பியிருந்தார். இதுவரையிலும் ஓரளவுக்கு விமர்சனக் கட்டுரைகள் வந்திருக்கின்றன. ஆனால் அவை தொகையால் குறைவு. புலமைப் பரப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் அநேகமாக வரவில்லை. தாயகத்தில் உள்ள புத்திஜீவிகள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு தடை உண்டு என்று ஒரு விளக்கம் தரப்படலாம். யாழ். பல்கலைக்கழகமானது அரசியல்வாதிகள் பங்குபற்றும் கூட்டங்களுக்கு அண்மைக்காலங்களாக இடங்கொடுக்க மறுப்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அப்படி என்றால் ஒப்பீட்டளவில் கூடுதலான சுதந்திர வெளிக்குள் வாழும் டயஸ்போறா தமிழர்கள் அதை முயற்சிக்கலாம். தாயகத்தை விடவும் அதிக தொகை புலமைச் செயற்பாட்டாளர்கள் இப்பொழுது டயஸ்போறாவில் உண்டு. ஆனால் இன்றுவரையிலும் அங்கே ஒரு ஆராய்ச்சி மையம் கூட திறக்கப்படவில்லை. ஒரு சிந்தனைக் குழாம்கூட உருவாக்கப்படவில்லை.
ஒரு சிந்தனைக் குழாம்கூட இல்லாமல் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான ஒரு ஆயுதப் போராட்டத்தைத் தமிழ் மக்கள் நடத்தியிருக்கிறார்கள். அது தோற்கடிக்கப்பட்ட பின்னரும் குறிப்பாக, அது ஒரு இனப்படுகொலையோடு தோற்கடிக்கப்பட்ட பின்னரும் கடந்த எழாண்டுகளாக எத்தனை ஆராய்ச்சி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன? எத்தனை சிந்தனைக்குழாhம்கள் உருவாக்கப்பட்டுள்ளன?. இதுதொடர்பில் கொள்கை வகுப்பாளர்களாலும் ராஜீய சமூகங்களினாலும் தவிர்க்கப்பட முடியாதது என்று கூறத்தக்க எத்தனை ஆராய்ச்சி நூல்கள் இது வரையிலும் வெளியிடப்பட்டுள்ளன? சமூகத்திற்கு வெளியே இருந்து யாராவது ஒரு றோகாண் குணரட்ணாவோ அல்லது ஒரு சூரிய நாராயணனோ வந்து ஆராய்ச்சி செய்து எழுதட்டும் என்று தமிழ் புத்திஜீவிகள் காத்திருக்கிறார்களா?
தமிழ் பத்திஜீவிகள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? அதற்குரிய காலம் இன்னமும் கனியவில்லை என்று கூறப்போகிறார்களா? அல்லது இறந்தகாலத்தை காய்தல் உவத்தலின்றி வெட்டித் திறக்கும் வீரம்மிக்க அறிஞர்கள் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை என்று கூறப்போகிறார்களா? அல்லது அப்படி ஒரு செழிப்பான விமர்சனப் பாரம்பரியம் தமிழ் புலமைப்பரப்பில் பெரும்போக்காக இல்லை என்று கூறப்போகிறார்களா? அல்லது கடந்தபல தசாப்தங்களாக தமிழ் புலமை மரபில் உள்ளோட்டமாக நிலவும் சுய தணிக்கை பாரம்பரியத்தின் விளைவா இது?
எதுவாயும் இருக்கலாம். ஆனால் இறந்தகாலத்தை காய்தல் உவத்தலின்றி வெட்டித்திறக்க தயாரில்லை என்றால் தோல்விக்கான காரணங்களை என்றைக்குமே கண்டுபிடிக்க முடியாது. “மம்மியாக்கம்” செய்யப்பட்ட இறந்த காலத்தை நூதனசாலையில்தான் வைக்கலாம்;;.ஊறுகாய் போடப்பட்ட இறந்தகாலத்தை சமையலறையிலும் வைக்க முடியாது. இனப்படுகொலைக்குப் பின்னரும் ஏழாண்டுகளாகத் தொடர்ந்தும் தோற்றுப்போகும் நிலைமையே தொடர்கிறது என்றால் இதுவும் ஒரு காரணம்தான். உலகச் சூழல் அரசற்ற தரப்புக்களுக்கு எதிராகக் காணப்படுகிறது என்று ஒரு விளக்கம் தரப்படலாம். அப்படி என்றால் இந்த பூமியானது அரசற்ற தரப்புக்களுக்கு பாதுகாப்பான ஒரு கிரகம் இல்லையா? இப்பூமி தங்களுக்கும்தான் என்று நிறுவுவதற்கு அரசற்ற தரப்புக்கள் என்ன செய்யவேண்டும்?. தமிழகம் தமிழ் டயஸ்போறா ஆகிய இரு பின்தளங்களைக்; கொண்டிருக்கும் ஈழத் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?
நந்திக்கடற்கரையில் பெற்ற கூட்டுக்காயங்களிலிருந்தும் கூட்டு மனவடுக்களிலிருந்தும்; தமிழ்மக்கள் ஒரு புதிய தமிழ் அரசியல் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.அப்பொழுதுதான் கூட்டுத் துக்கமும் கூட்டுக் கோபமும் ஆக்க சக்தியாக மாறும்.அந்த ஜனநாயக அடிச்சட்டத்தின் மீதுதான் தாயகமும் தமிழகமும் டயஸ்போறாவும் ஒன்றிணைய முடியும்.அதுதான் மெய்யான பொருளில் இறந்தவர்களுக்குச் செய்யப்படும் மரியாதையாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*