இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் கடும் நிலநடுக்கம்: 150 பேர் பலி 1000 பேர் காயம்!

ஜம்மு காஷ்மீர் மற்றும் டெல்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளிலும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இன்று மதியம் 2.30 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்திற்கு 150 பேர்வரைபலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும், பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிற அதேவேளை காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஐ தாண்டும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆப்கானிஸ்தான் இந்து குஷ் மலைப்பகுதியை மையமாகக் கொண்டு 150 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஜம்மு காஷ்மீர், டெல்லி, இமாச்சல் பிரதேசம், அரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய வடமாநிலங்களிலும் உணரப்பட்டது. இம்மாநிலங்களில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக கட்டடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து வெளியே ஓடிவந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். தலைநகர் டெல்லியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெட்ரோ ரயில் சேவைகள் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டன.  

 ஜம்மு காஷ்மீர் தலைநகர்  ஸ்ரீநகரில் நிலநடுக்கம் காரணமாக தொலைபேசி மற்றும் மின் கம்பங்கள் கீழே சரிந்து விழுந்தன. மேலும் லால் சவுக் மேம்பாலமும் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான்
இதனிடையே இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.  கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் பாகிஸ்தானில்  46 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெஷாவரில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததாகவும், லாகூர் அருகே  நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், பள்ளி ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததாகவும், இதில் ஏராளமான குழந்தைகள் காயமடைந்ததாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கைபர் பக்டுன்வா மாகாணத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்ததாகவும், வீட்டுக்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானதாகவும், வடக்கு பாகிஸ்தான் பகுதிகளிலேயே நிலநடுக்கத்தினால் அதிக அளவு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சி செய்தி செய்தி வெளியிட்டுள்ளது.
கட்டட இடிபாடுகள் மற்றும் சேதமடைந்த பகுதிகளில் மீட்பு பணியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான்

அதேப்போன்று ஆப்கானிஸ்தானிலும், குறிப்பாக எல்லையோர பகுதிகளில் பாதிப்புகள் கடுமையாக ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பீதி காரணமாக மக்கள் கட்டடங்களில் இருந்து ஓடியபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பள்ளி மாணவிகள் உட்பட 24 பேர் பலியானதாகவும், 130 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும், பலி எண்ணிக்கையும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ள தகவலின் அடிப்படையில்,  நிலநடுக்கத்திற்கு 100 க்கும் அதிகமானோர் பலியாகி இருக்கலாம் என்றும், 1000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலும் நிலநடுக்கம்
இந்த நில அதிர்வு சென்னையிலும் உணரப்பட்டது. நந்தனம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் நில அதிர்வு காணப்பட்டதாக பொதுமக்கள் கூறினர். இதனால் வீடுகளில் இருந்து வீதிகளுக்கு ஓடிவந்து தஞ்சம் அடைந்ததாகவும் அவர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*