இது மக்களின் பேரவை – எங்கள் பிரச்சினைகளை அரசியல் கட்சிகளிடம் விட்டுச்செல்ல நாங்கள் தயாராக இல்லை.

எங்கள் பிரச்சினைகளை அரசியல் கட்சிகளிடம் விட்டுச்செல்ல நாங்கள் தயாராக இல்லை. இதற்கு அரசியல் சாயம் பூசவேண்டாம். இது வேதனை அளிக்கிறது. இதுவரை பாதிப்படைந்தது அரசியல் கட்சிகள் அல்ல மக்களே. எனவேதான் மக்களாக தீர்வுத்திட்டம் தயாரிக்க முனைந்துள்ளோம் என தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான  வைத்தியர் பி. லக்ஸ்மன்  தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டம் ஞாயிறு (27.12.2015) காலை யாழ்.பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது. கூட்டத்தின் முடிவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது மக்கள் அமைப்பு கட்சி அல்ல

இது முழுக்க முழுக்க மக்கள் அமைப்புக்களால் உருவாக்கப்பட்ட பேரவை. இதில் எம்மோடு ஒத்துப்போக இணங்கி ஒரு சில அரசியல் கட்சிகள் இணைந்துள்ளன. அதை வைத்துக்கொண்டு இவ் மக்கள் பேரவையை அரசியல் கட்சியாக மாற்றவேண்டிய தேவையும் எமக்கு இல்லை  பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்கள் என்ற வகையில் தமிழர்களுக்கான தீர்வு திட்டத்தினை தமிழ் மக்களே முன் வைக்க வேண்டும். அந்த தீர்வினை மக்களின் கருத்துக்களில் இருந்து உருவாக்கவே நாம் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்.எனவே தமிழ் மக்கள் பேரவைக்கு அரசியல் சாயம் பூசி அதனை முடக்காதீர்க்கள் எனவும் தெரிவித்துள்ளார். 


இந்த அமைப்புக்கு சிலர் அரசியல் சாயம் பூசுவதனால், அரசியலில் ஈடுபட விரும்பாத ஆனால் தமிழ் மக்களின் விடிவுக்கு தமது பங்களிப்பை செலுத்த வேண்டும் என விரும்பும் பலர் அமைப்பில் இணைய பின்னடிக்கின்றார்கள் எனவே தமிழ் மக்கள் பேரவைக்கு அரசியல் சாயம் பூசாதீர்கள்.
 
 
முஸ்லீம் பிரதிநிதிகளும் உள்வாங்க படுவார்கள்.
 
தமிழ் மக்கள் பேரவைக்குள்  முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகள் இணைத்துக்கொள்வது சவாலானதொரு விடையம். அவர்களிற்கென்று அரைசியல் அபிலாசைகள், அரசியல் தலைமைகள் இருக்கின்றன. இந்த விடையத்தினை எமது அரசியல் தீர்வு சம்பந்தமான குழு ஆராயும்.
 
முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகளை தமிழ் மக்கள் பேரவையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் , தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு சம்பந்தமான குழு ஆராய்ந்து முன் மொழிவுகளை மக்கள் பேரவை முன்பாக வைத்த பின்னர். அக் குழுவினால் முன் மொழியப்பட்டவர்களை தமிழ் மக்கள் பேரவையில் இணைத்துக் கொள்வோம்.
 
 
புலம்பெயர்ந்தவர்களின் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்வோம்.
 
 
புலம்பெயர்ந்தவர்களின் கருத்துகளையும் தமிழ் மக்கள் பேரவை ஏற்றுக்கொள்ளும், தமிழ் மக்கள் பேரவையால் உருவாக்கப்படவுள்ள தீர்வுத்திட்டம் தொடர்பிலும் ஏணைய நடவடிக்கைகள் தொடர்பிலும் புலம்பெயர்ந்தவர்களின் கருத்துக்களையும் உள்வாங்குவோம்.
 
புலம் பெயர் நாடுகளில் வசிப்பவர்கள் துறைசார்ந்தவர்கள் அத் துறை சார்பில் முன்வைக்கும் கருத்துகளை ஆலோசனைகளை நிச்சயமாக தமிழ் மக்கள் பேரவை ஏற்றுக்கொள்ளும். 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*