இது பௌத்தர் வாழ்ந்த பூமி – மாணிக்கமடுவிற்கு புத்தர் வந்த கதை !

puthaபௌத்தர்கள் வாழ்ந்த பழமைமிக்கதொரு இடமாகவும், அவர்கள் வாழ்ந்தமைக்கான அடையாளங்கள், வரலாறுகள் மிகத்தெளிவாக உள்ளன. மேலும் அங்கு 1975 ஆம் ஆண்டு தங்கல்லையிலிருந்து 25 பௌத்த மத குருக்கள் அந்த இடத்தில் சிறிய பௌத்த சிலை வைத்து வாழ்ந்துள்ளனர்.

2013 ஆம் ஆண்டு தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் அந்த பிரதேசங்களை ஆராய்ச்சிக்குட்படுத்தி அதனை அடையாளப்படுத்தி 2014 ஆண்டு 10 மாதம் புராதன தொல்பொருள் அடையாளங்கள், திஸ்ஸ மன்னன் வரலாற்று ஆவணங்கள் மற்றும் பொருட்கள் காணப்படுவதாக வர்த்தமாணி அறிவித்தல் செய்து பாதுகாப்பு கற்களையும் அமைத்துள்ளது.

அம்பாறை, இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 19 இடங்களில் புராதன அடையாளங்கள் காணப்படுவதாக என அம்பாறை கிரிந்திவெல சோமரத்தன தேரர் தெரிவித்தார்.

இறக்காமம், மாணிக்கமடு தமிழ் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் துசித வணிசிங்க தலைமையில் நேற்று(02) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பிர் எம்.ஐ.மன்சூர், கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் எம்.எம். உதுமாலெப்பை, இறக்காமம் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவர் எஸ்.ஐ.மன்சூர், பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அங்கு கிரிந்திவெல சோமரத்ன தேரர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில் தொல் பொருள் ஆராய்ச்சி திணைக்களம், ஆராய்ச்சி செய்து 19 இடங்களை அடையாளப்படுத்தியுள்ளது. அவற்றில் மாணிக்கமடு மாயக்கல்லி மலையும் ஒன்றாக அமைந்துள்ளது.

இலங்கையில் தீகவாபி எனும் புண்ணிய பிரதேசம் பௌத்தர்களுக்கு மிகவும் பிரசித்தம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. அந்த இடத்திற்குச் செல்லும் யாத்திரிகள் இளைப்பாறுவதற்காக மட்டுமே மாணிக்கமடு மாயக்கல்லி மலையை அமைக்கவுள்ளோம்.

மேலும் அங்கு காணப்படுகின்ற பழமை வாய்ந்த புராதன அடையளங்கள் சிதைவுற்று அழிந்து வருகின்றது. 19 இடங்கள் இப்பிரதேசத்தில் காணப்பட்ட போதிலும் இந்த இடத்தினை மாத்திரமே புனரமைப்புச் செய்யவுள்ளோம்.

இதனால் அங்கு வாழ்ந்து வரும் தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சமடைய தேவையில்லை. அங்கு எந்தவிதமான சிங்கள குடியேற்றங்களோ, காணிகளை பிடித்துக் கொள்ளவோ நாங்கள் முயற்சிக்கவில்லை. அந்த பிரதேச மக்களின் பாதுகாப்பாக நாங்கள் இருப்போம் என்றார்.

எனவே இப்பிரதேச மக்களிடம் மிகத் பணிவாக, தாழ்மையாக வேண்டிக்கொள்வது தீகவாபிக்குச் செல்லும் யாத்திரிகள் இந்த இடத்தில் இளைப்பாறி, தேனீர் அருந்திச் செல்வது மட்டுமே தவிர வேறு எந்த நோக்கமும் கிடையாது என்றார்.

கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை அங்கு உரையாற்றுகையில்,-

கடந்த அரசாங்கம் சிறுபான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத தனால்தான் நாட்டில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவதற்கு பிரதான காரணமாக அமைந்தது.

புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லாட்சியிலும் சிறுபான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் பல நிகழ்வுகள் தொடர்கின்றன.

தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவும், நானும் இணைந்து கிழக்கு மாகாணத்தில் சமூகங்களிடையே இன ஒற்றுமையை ஏற்படுத்தி பல்வேறு அபிவிருத்தி பணிகளையும் மேற்கொண்டுள்ளோம். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் தெஹியத்த கண்டியில் இருந்து பாணம வரையில் அமைந்துள்ள பிரதேசங்களில் பெரும்பான்மை இனமாக வாழும் மக்களுக்கு அவர்களுடைய மதஸ்தலங்களையும், உட்கட்டுமான அபிவிருத்திகளையும் இன பேதமின்றி செயற்படுத்தியுள்ளோம்.

இதனை இந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்ற மூத்த பௌத்த மதத் தலைவர்கள் நன்கு அறிந்து கொள்வார்கள்.

நாங்கள் ஒருபோதும் அரசியலில் இனவாத நடவடிக்கைகளுக்கு ஊக்கம் ஊட்டுபவர்களாக செயல்பட்டதில்லை. நாம் எல்லோரும் சகோதர உணர்வோடு வாழ்ந்து கிழக்கு மாகாணத்தில் முன்மாதிரியான மாவட்டமாக அம்பாறை மாவட்டத்தை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல் பட வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள தொல்பொருள் ஆராய்ச்சிக்கான இடங்களை முஸ்லிம்களும், தமிழர்களும் பாதுகாத்து வந்துள்ளனர். புதிய அரசாங்கத்தில் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டு, சுபீட்சகரமாக வாழக் கூடிய நிலமை உருவாகியுள்ளது.

அதனாலேயே, நல்லாட்சியில் சிறுபான்மை மக்கள் நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்கின்ற இக்கால கட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்களுடன் எந்தவிதமான கலந்துரையாடலும் மேற்கொள்ளாது திடீரென இறக்காம மாணிக்கமடு பிரதேசத்தில் புத்தர் சிலை ஒன்றை வைத்துள்ளதனால் இப்பிரதேசத்தில் இன ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்த சமூகங்கள் மத்தியில் அச்சத்தையும், சந்தேகத்தையும் இச்சூழ்நிலை உருவாக்கியுள்ளது.

நமது நாட்டில் சிங்கள மக்களுக்கான விகாரையை நிர்மாணிப்பதற்கு நாங்கள் ஒருபோதும் எதிரானவர்கள் அல்ல. ஆனால் முஸ்லிம், தமிழ் மக்கள் செறிந்து வாழும் இப் பிரதேசத்தில் திடீரென பௌத்த விகாரை அமைப்பதற்கு எடுக்கும் நடவடிக்கையினால் நல்லாட்சிக்கு அபகீர்த்தி ஏற்பட்டு வருவதுடன், ஒற்றுமையாக வாழ்ந்து வரும் அம்பாறை மாவட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான உறவுகளும் சீர்குலைந்து வரும் நிலமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இப்புத்தர் சிலை வைக்கப்பட்டதன் பின்னர் இறக்காமம் மாணிக்கமடு பிரதேசத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் உண்மையான உணர்வுகளை இங்கு கலந்து கொண்டிருக்கும் மதத் தலைவர்களும், பிரமுகர்களும் இக்கூட்டத்தில் சொல்வதற்கு அச்சம் அடைந்த நிலமையில் உள்ளனர்.

இவ்வாறான நிகழ்வுகளினால் இனவாதத்தினை மூலதனமாக பயன்படுத்தும் சில சக்திகளுக்கு இவ்வாறான நிகழ்வு களம் அமைத்துக் கொடுக்கின்றது என்பதில் சந்தேகமில்லை. இன்று கூட்டப்பட்டுள்ள சமூகப்பிரதிநிதிகளின் கூட்டம் மாணிக்கமடு கிராமத்தில் புத்தர் சிலையை வைப்பதற்கு முன்னர் கூட்டப்பட்டிருந்தால் சமூகங்களிடையே புரிந்துணர்வுகளை ஏற்படுத்தியிருக்க முடியும்.

எனவே, இவ்விடயம் தொடர்பாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டு சமூகங்கள் மத்தியில் இன உறவுகளை வளர்த்தெடுத்து இனங்களுக்கிடையில் பிரச்சினைகள் தோன்றாத வகையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

மேலும் இந்நிகழ்ச்சிகளால் இனவாத உணர்வுகளை தூண்டி ஐக்கியமாக வாழும் சமூகங்களுக்கிடையே விரிசல்களை ஏற்படுத்தாது ஏனைய சமூகங்களுடன் பேசி இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நிகழ்வில் இறுதியில் மேற்படி சிலை வைப்பு பிரச்சினை தொடர்பில் சமாதனத்தை ஏற்படுத்தவற்காக அரசாங்க அதிபர் தலைமையில், இறக்காமம் பிரதேச செலயலாளர் எம்.எம். நஸீர், பள்ளிவாயல், கோவில்களின் தலைவர்கள், பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*