சற்று முன்
Home / அரசியல் கட்டுரைகள் / அரசியல் கைதிகளின் விவகாரம் எப்படி முடியும்? நிலாந்தன்

அரசியல் கைதிகளின் விவகாரம் எப்படி முடியும்? நிலாந்தன்

12189165_830069630446048_1128481717300838985_n

அரசியல் கைதிகளின் விவகாரம் எனப்படுவது அதன் ஆழமான பொருளில் ஓர் அரசியல் விவகாரமே. ஆனால் அதை ஒரு சட்ட விவகாரமாகச் சுருக்கிவிட அரசாங்கம் முற்படுகின்றது.
இவ்வாறு ஓர் அரசியல் விவகாரத்தை  சட்ட விவகாரமாக  சுருக்கும் ஓர் அரசியல் சூழலில் நிலைமைகளை எதிர்கொள்ளத் தேவையான துறைசார் நிபுணத்துவமும், தீர்க்கதரிசனமும்,அர்ப்பணிப்பும் தமிழ் மக்களிடம் உண்டா?
அரசியல் கைதிகளின் விவகாரம் அதன் முதற் பொருளில் ஓர் அரசியல் விவகாரம்தான் என்றாலும்  இலங்கை அரசாங்கம்  அதை ஓர் சட்ட விவகாரமாகக் காட்டும் ஒரு பின்னணியில் அதைச் சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளவேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு உண்டு. எனவே இந்த விவகாரத்தை தமிழ் மக்கள் சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. பரந்தகன்ற தளத்தில் ஓர் அரசியல் போராட்டமாகவும் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. முதலில் அதைச் சட்டத்தளத்தில் எதிர்கொள்வதற்குரிய தயாரிப்புக்களோடு தமிழ் மக்கள் காணப்படுகிறார்களா என்று பார்க்கலாம்.
அரசியல் கைதிகளின் விவகாரத்தைப் பொறுத்தவரை ஆயுத மோதல்கள் நிகழ்ந்த கால கட்டத்திலும் சரி அதற்குப் பின்னரும் சரி அதை அமைப்பு ரீதியாக அணுகும் போக்கு தமிழ் மக்களிடம் காணப்படவில்லை. சட்டவாளர்களான சேவியர், குமார்பொன்னம்பலம் போன்ற வழக்கறிஞர்கள் கைதிகளின் விவகாரத்தை ஒரு சட்டத்துறைச் செயற்பாடாக முன்னெடுத்திருக்கிறார்கள்.  இப்பொழுது மனித உரிமைகள் இல்லம்(ர்ர்சு), மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையம் (ஊர்சுனு) போன்ற சில   அமைப்புக்களும்  சில தனி நபர்களும்  இந்த விவகாரத்தைக் கையாண்டு வருகிறார்கள்.  குறிப்பாக  2009 இற்குப் பின்னரான  அரசியல் கைதிகளை விடுவிக்கும்  செயற்பாடுகளில்  புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதிப்பங்களிப்புடன்  ஒரு தொகுதிக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.  இவர்களுக்குரிய வழக்குச் செலவுகளை  புலம்பெயர்ந்து வாழும் சில தனிப்பட்ட நபர்கள் பொறுப்பேற்றதன் மூலம்  இவர்களைச் சட்ட ரீதியாக விடுவிக்க முடிந்திருக்கிறது. ஆனால் இவை  தனிப்பட்ட உதவிகள் மட்டுமல்ல. விவகாரத்தை சட்ட ரீதியாகவே அணுகி தீர்வைப் பெற்ற முயற்சிகளும்தான்.
இவ்வாறு  குறைந்தபட்சம்  சட்டப்பரப்பிலாவது  இது போன்ற விவகாரங்களை கையாளவல்ல   சட்டச் செயற்பாட்டுக்குழுக்களையோ அல்லது சட்ட உதவி மையங்களையோ அல்லது    சட்டத்துறை சார்ந்த புலமைசார் செயற்பாட்டுக் குழுக்களையோ அல்லது தன்னார்வக் குழுக்களையோ மிகக் குறைந்தளவே ஈழத் தமிழ்ப்பரப்பில் காணமுடிகிறது. இந்தியாவோடு ஒப்பிடுகையில் இங்குள்ள நிலைமை  அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை.  மனித உரிமைகள் இல்லம்,மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையம், தேவைநாடும்; மகளிர்  போன்ற  மிகச் சில சட்ட உதவி மையங்களே தமிழ் மக்கள் மத்தியில் உண்டு. தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக் கூடிய செயற்பாட்டு வெளியை வரையறைக்கு உட்படுத்தியதில் ஆயுதப் போராட்டத்திற்கும் கணிசமான பங்கு உண்டு.
ஆயுதப் போராட்டத்தின் கட்டுப்பாட்டு நிலப்பரப்பிற்குள் செயற்பாட்டுக்குழுக்கள் பெருமளவிற்கு மேலெழவில்லை. இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் பெரும்பாலான செயற்பாட்டுக் குழுக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் தோன்றியவைதான். அவை கூட பரந்தன்ற தளத்தில் மனித உரிமைகள் , பால்சார் வன்முறைகள், காணாமல் போனவர்கள் விவகாரம் போன்றவற்றைக் கையாளும் செயற்பாட்டு அமைப்புக்கள்தான்.  குறிப்பாக அரசியல் கைதிகளின் விவகாரத்தை  கையாளுவதற்கு என்று எந்த ஒரு அமைப்பையும் காண முடியவில்லை.
தமிழ் அப்புக்காத்துமார்களின்  அரசியலானது 2009 மேக்குப் பின் அதன் இரண்டாவது  சுற்றில் நிற்கிறது. ஆயுதப் போராட்டத்திற்கு முந்தியது முதலாவது சுற்று. 2009 மே க்குப் பிந்தியது இரண்டாவது சுற்று. எல்லாத் தமிழ் கட்சிகளிலும் சட்டத்துறை சார்ந்தவர்களே பெருமளவிற்கு முன்னுக்கு நிக்கிறார்கள். சில  அருந்தலான விதிவிலக்குகளைத் தவிர சட்டத்துறைக்கூடாக வந்தவர்கள்  அரசியலில் காட்டும் அதேயளவு ஆர்வத்தை ஏன்  சட்டச் செயற்பாட்டு இயக்கங்களில் காட்டுவதில்லை?.
tamil-prisoners-relatives-demo-6அரசாங்கம் கைதிகளின் விவகாரத்தை ஒரு சட்ட விவகாரமாகவே அணுகும் பொழுது  தமிழ் சட்டத்துறை நிபுணர்கள் அதை அந்தத் தளத்திலேயே வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்ததா? கைதிகளின் விவகாரம் தொடர்பில் ஒரு சிரே~;ட சட்டத்தரணியுடன் உரையாடிய போது அவர் பின்வருமாறு சொன்னார். “பிணை வழங்குவது என்பது கைதிகளை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்தாக அர்த்தமாகாது. அது மறைமுகமாக குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவே கருதப்படும். குற்றத்தின் தன்மை பொறுத்து தண்டனைக் காலத்தைக் குறைப்பது என்பதும் குற்றத்தில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அர்த்தமாகாது.
புனர்வாழ்வுக்குப் போவதாக ஒப்புக் கொண்டு  உரிய ஆவணங்களில் கையொப்பம் இடுவது என்பதும் குற்றத்தை ஒப்புக் கொள்வதுதான். எனவே, கைதிகளை குற்றங்களில் இருந்து விடுவிக்காமல் அவர்களுக்கு  தற்காலிகமான  ஓர் அசுவாசச் சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக  சிறையில் இருந்தவர்கள் இனிக் குடும்பத்துடன் சேர்ந்து வாழலாம் என்ற ஒரு நிலைமை வரும் போது ஒப்பீட்டளவில் அது அவர்களுக்கு ஆறுதலான விடயமே. ஆனால்  உத்தியோகபூர்ப ஆவணங்களில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்கள் விடுவிக்கப்படப்போவதில்லை. இது முதலாவது விடயம்…… இரண்டாவது விடயம்- கைதிகளைக் குற்றத்தின் தன்மை பொறுத்தும்  தண்டனையில் தன்மை பொறுத்தும்  வகைப்படுத்தும்பொழுது கைதிகளுக்கிடையிலான ஐக்கியம் உடைக்கப்படுகிறது. விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்ப்படும் கைதி மற்றவர்களுக்காக போராடத் தயங்கக் கூடும். இவ்வாறு கைதிகளை வகைப்படுத்தும் போது அது அவர்களுக்கிடையிலான ஒற்றுமையையைக் குறைக்கும். இது அவர்களுடைய போராட்டத்தின்  ஓர்மத்தைக் குறைக்கும் என்று”
misssing-person-commission
அதாவது  இப்பொழுது கிடைக்கப்போவது ஒரு வித தற்காலிகமான இடைக்காலத் தீர்வுதான்.  அதுவும்  ஒரு சட்டத்தீர்வுதான். நிச்சயமாக ஒரு  அரசியல் தீர்வு அல்ல. ஆனால் கைதிகளைப் பிணையில் விடுவதா இல்லையா  என்பது கூட ஓர் அரசியல் தீர்மானம்தான். அவர்களுக்கு மன்னிப்பு அளிப்பதில்லை என்ற முடிவும் ஓர் அரசியல் தீர்மானம்தான்.அதேசமயம் போர்க்குற்றம் சாட்டப்படும் தமது பிரதானிகளை தண்டிப்பதற்குப் பதிலாக  மன்னிக்கும் ஒரு விசாணைப் பொறிமுறையை தந்திரமாகக் கொண்டுவந்ததும் ஓர் அரசியல் தீர்மானம்தான். ஆட்சி மாற்றம் நிகழ்ந்து  பத்து மாதங்களின் பின்னரும் நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற ஒரு அரசாட்சிக்குக் கீழேயும் பெரும்பாலான எல்லா சிங்கள அரசியல்வாதிகளும் யோர்க்குற்றம் தொடர்பிலும் அரசியற்கைதிகள் விவகாரத்திலும் ஒரே விதமாகத்தான் சிந்திக்கிறார்கள். ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் அப்படிச் சிந்திக்கிறார்களா?  கைதிகள் விவகாரத்தில் மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழ் அரசியலை எடுத்துக்கொண்டால்  மூன்றாவது ஜெனிவாத் தீர்மானத்தின் பின்னரான  தமிழ் அரசியல் எனப்படுவது  தமிழ் மக்களை  அதிகம்  சட்ட விழிப்பூட்ட வேண்டிய  ஒரு தேவையை வேண்டி நிற்கிறது.  தமிழ் மக்கள் முன்னெப்பொழுதையும் விட ஆகக் கூடிய அளவில்  சட்ட விழிப்பூட்டப்பட வேண்டிய ஒரு சமூகமாகக் காணப்படுகிறார்கள்.  ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கைக்குப் பின்  ஈழத் தமிழர்கள்  ஏன் அதிகம்  சட்ட விழிப்பூட்டப்பட வேண்டும்? என்பதற்குப் பின்வரும் காரணங்களைக் கூறலாம்.
முதலாவது,  தமிழ் மக்களிடம் இப்பொழுதுள்ள ஓரே ஆயுதம் சாட்சியங்கள்தான். எவ்வளவுக்கு எவ்வளவு சாட்சியங்கள்  பரந்தளவில் ஒன்று திரட்டப்படுகின்றனவோ அந்தளவுக்கு அந்தளவு தமிழ் மக்கள்  தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான பரிகார நீதியைக் கோர முடியும். எனவே, சாட்சியங்களை சக்திமிக்கவர்களாக்குவதற்குச் சமூகத்தை சட்டவிழிப்பூட்ட வேண்டும்.
வரப்போகும் விசாரணைப் பொறிமுறையானது குற்றம் செய்தவர்களை தண்டிப்பதை விடவும்  மன்னிப்பதையே  இறுதி நோக்கமாக கொண்டிருக்கக் கூடும். எதுவாயினும் அதில் பங்கேற்று அதன் போதாமைகளை அம்பலப்படுத்துவதற்கு தமிழ் மக்களை அதிகரித்த அளவில் சட்ட விழிப்புடையவர்களாக மாற்ற வேண்டும்.  ஒவ்வொரு சாட்சியும் தன்னை  சமூகத்தின் கூட்டுச் சாட்சியத்தின் பிரிக்கப்படவியலாத ஓர் அங்கமாக கருத வேண்டும். தனது சாட்சியமானது நீதிக்கான நீண்ட பயணத்தின் ஒரு பகுதி என்பதை உணர வேண்டும். அதாவது ஒவ்வொரு சாட்சியும் ஒரு செயற்பாட்டாளராக இயங்க வேண்டும்.
இரண்டாவது, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் அறிக்கையானது பயங்கரவாத தடைச்சட்டத்தை அகற்றுமாறு கோருகிறது.  பயங்கரவாத தடைச்சட்டமும் நல்லாட்சியும் ஒன்றாக இருக்க முடியாது.  பயங்கரவாத தடைச்சட்டத்தையும் வைத்துக்கொண்டு நல்லிணக்க முயற்சிகளைப் பற்றி உரையாட முடியாது.  பயங்கரவாத தடைச்சட்டத்தை தன்னுள் கொண்டிருக்கும் ஒரு நீதிபரிபாலன கட்டமைப்பானது போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களின்  நம்பிக்கையை  பெற முடியாது.  பயங்கரவாத தடைச் சட்டத்தை வைத்திருக்கும் ஒரு நீதிபரிபாலன கட்டமைப்பானது எந்த ஒரு வெளிநாட்டு  நிபுணத்துவ உதவியோடும் கூடிய  எந்த ஒரு  வெற்றிகரமான கலப்புப் பொறிமுறையையும் உருவாக்க முடியாது.  எனவே,  ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த ஆறரை ஆண்டுகளின் பின்னரும் எந்த ஒரு “பயங்கரவாதத்திற்கு” எதிராக அந்தச் சட்டத்தை வைத்திருக்க வேண்டும்?. ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று சொல்லும் ஒரு நீதி பரிபாலன கட்டமைப்பானது அந்தப் போராட்டம் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகளின் பின்னரும் யாருக்கு எதிராக அந்தச் சட்டத்தைத் தொடர்ந்தும் பேணுகிறது?. இது இரண்டாவது.
மூன்றாவது, பயங்கரவாத தடைச்சட்டம்  இருக்கும் வரை அரசியல் கைதிகளின் விவகாரத்தைத் தொடர்ந்தும் ஒரு சட்டப் பிரச்சினையாகவே கையாள முடியும். இச்சட்டத்தைக் கொண்டு வந்த ஜெயவர்த்தனா ஆயுதமேந்திய தமிழர்களை பயங்கரவாதிகள் என்று அழைத்தார். அதே சமயம்  ஆயுதமேந்திய சிங்கள இளைஞர்களை அதாவது ஜே.வி.பி.யினரை நாசகார சக்திகள் என்று விழித்தார். இரண்டு சொற்பிரயோகங்களுக்கும் இடையிலேயே இனச்சாய்வு இருக்கிறது.
எனவே பயங்கரவாத தடைச்சட்டம்  எனப்படுவது  தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு சட்ட ஆவணம் என்பதை ஏற்றுக் கொள்வதில் இருந்தே  நல்லிணக்க முயற்சிகளை மெய்யான பொருளில் தொடங்க முடியும். நல்லாட்சியையும் மெய்யான பொருளில் ஸ்தாபிக்க முடியும். இது மூன்றாது.
நான்காவது –  இனப்பிரச்சினைக்கான தீர்வும்  அரசியலமைப்பு மறு வரைபும் ஒன்றுதான். இலங்கைத்  தீவின் அரசியல் அமைப்பை பல்லினத் தன்மைமிக்கதாகவும் பல்வகைமைக்குரியதாகவும்  மாற்றி எழுதாமல் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் கண்டடைய முடியாது. அதாவது ஒற்றையாட்சிக்கு வெளியே போக முடியாது.
அரசியலமைப்புச் சீர் திருத்தம் அல்லது அரசியலமைப்பை மறுவரைபு செய்தல் போன்ற விவகாரங்கள் அவற்றின் ஆழமான பொருளில் முன்னெடுக்கப்படுமோ இல்லையோ தெரியாது. ஆனால் அப்படி ஒரு நிலைமை வரும்போது தமிழ் மக்கள் எவ்வளவுக்கு எவ்வளவு சட்ட விழிப்பூட்டப்படுகிறார்களோ அது அவ்வளவுக்கு அவ்வளவு தமிழ் மக்களைப் பாதுகாக்கும். எனவே முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு தமிழ் மக்களை சட்ட விழிப்பூட்ட வேண்டிய ஒரு தேவை  தமிழ் சட்டவாளர்களுக்கும் சட்ட நிபுணர்களுக்கும்  சட்டச் செயற்பாட்டாளர்களுக்கும்  சட்டத்துறைசார் புலமைச் செயற்பாட்டாளர்களுக்கும் ஏனைய துறைசார் புத்திஜீவிகளுக்கும், செயற் பாட்டாளர்களுக்கும், சிவில் அமைப்புககளுக்கும், ஊடகங்களுக்கும்  உண்டு.  மிகக் கூடுதலான அளவு அரசியல் விலங்குககளைக் கொண்டுள்ள ஆனால் மிகக் குறைந்த அளவே அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு  மக்கள்  மத்தியில் அதைச் செய்யப்போவது யார்?
அடுத்ததாக  கைதிகளின் விவகாரத்தை பரந்தகன்ற தளத்தில் ஓர் அரசியல் போராட்டமாக முன்னெடுப்பதற்குரிய தயாரிப்புக்களோடு தமிழ் மக்கள் காணப்படுகிறார்களா என்று பார்க்கலாம்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை அகற்றுவதா இல்லையா என்பது ஓர் அரசியல் தீர்மானமே! தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டம் பயங்கரவாதமா இல்லையா என்று முடிவெடுப்பது ஓர் அரசியல் தீர்மானமே.  அது ஓர் அரசியல் பண்புமாற்றமே. அதைப்போலவே அரசியல் கைதிகளை விடுவிப்பதா இல்லையா என்பதும் ஓர் அரசியல் தீர்மானமே.
இப்படிப்பட்ட அரசியல் தீர்மானங்களை எடுக்கக் கூடிய ஓர் அரசியல் சூழல் ஆட்சிமாற்றத்தின் பின்னரும் ஏன் ஏற்படவில்லை? அல்லது  நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற புதிய அரசாங்கத்தின் கீழும் ஏன் ஏற்படவில்லை?.  ஆட்சி மாற்றதிற்கும் நல்லாட்சிக்கும் எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி ஆதரவை வழங்கிய கூட்டமைப்பு  இது தொடர்பில் என்ன முடிவுகளை எடுக்கும்?
கடந்த ஆண்டு  ஆட்சி மாற்றத்திற்கான உள்மட்டச் சந்திப்புக்கள்  நிகழ்ந்தபொழுது  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கூட்டமைப்பின் தலைவரிடம் கேட்டாராம் “எழுத்துவடிவ உடன்படிக்கைகள் எவையும் இன்றி சிங்களத் தலைவர்களை எப்படி நம்புகிறீர்கள்?” என்ற தொனிப்பட. அதற்கு கூட்டமைப்பின் தலைவர் சொன்னாராம்.  “எவ்வளவு மையைச் சிந்தி  உடன்படிக்கை எழுதுகிறோம் என்பது இங்கு முக்கியம் அல்ல. எவ்வளவு நம்பிக்கையைக் கட்டி எழுப்புகிறோம் என்பதே இங்கு முக்கியம்” என்று. ஆயின்  கடந்த பத்து மாதங்களாக  கட்டி எழுப்பப்பட்ட நம்பிக்கைகளின் பிரகாரம் கைதிகளின் விடயத்தில் தீர்வு கிடைக்குமா? கிடைக்காவிட்டால் கூட்டமைப்பும் ஏனைய தமிழ்க் கட்சிகளும் என்ன செய்யும்? குறிப்பாக ஒரு புறம் தீவிர தமிழ்த் தேசியத்தைப் பேசிக்கொண்டு இன்னொரு புறம் இலங்கை  பொலிஸ் மெய்க்காவலர்களைத் தங்களோடு வைத்திருக்கும்  தமிழ் அரசியல்வாதிகள்  என்ன செய்யப் போகிறார்கள்?

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com