அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கொழும்பிலும் யாழிலும் போராட்டம்

201606090220559829_Struggle-Movement-a-critical_SECVPFஅரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதி டெல்ருக்சனின் 4 ஆண்டு நினைவு தினத்தினை நினைவு கூர்ந்தும் சிறைகளில் விடுதலைக்காக போராடிவரும் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரியும் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் ஆர்ப்பாட்டங்கள்; நடைபெறவுள்ளன.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யவதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இப் போராட்டங்கள், நாளைமறுதினம் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு முன்பாகவும் காலை 10.30 க்கு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் நடைபெறவுள்ளன.

ஆட்சி மாற்றத்தின் பின்பாக பல தடவைகள் அரசியல் கைதிகள் தமது விடுதலையினை வலியுறுத்தி உண்ணாவிரப் போராட்டத்தினை நடத்தியுள்ளனர். எனினும் அப் போராட்டங்களுக்கு நியாயபூர்வமான தீர்வினை வழங்குவதற்கு அரசாங்கம் மறுத்து வருகின்றது. இவ்வாறானதோர் சூழ்நிலையில் அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனைகள் இன்றியும் விடுவிக்கக் கோரி, அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பு போராடி வருகின்றது.

அதனடிப்படையில், கடந்த ஆட்சியில் அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட டெல்ருக்சனும் விடுதலைக்காக ஏங்கிய தருணத்திலேயே ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டார். அவ்வாறாக சிறைச்சாலைகளில் படுகொலை செய்யப்பட்ட டெல்ருக்சன் மற்றும் நிமலரூபன் போன்றோரின் படுகொலைக்கு இன்றும் கூட நீதி கிட்டவில்லை. இந் நிலையில் இவ்வாறான சிறைச்சாலைப்படுகொலைகளின் விசாரணைகளைத் துரிதப் படுத்தக் கோரியும் அப் படுகொலைகளுக்கு நீதியைக் கோரியும் தற்போதும் விடுதலைக்காக தவிக்கும் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலைசெய்யக் கோரியுமே போராட்டங்கள் நடைபெறவுள்ளன. இப் போராட்டங்கள் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் சம சந்தர்ப்பத்தில் நடைபெறவுள்ளன.

மனிதாபிமானதும் நியாயபூர்வமானதுமான கோரிக்கையை வலியுறுத்திய சகல தரப்பினரும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அமைதியான முறையில் போராட்டத்தினை நடத்துவதற்கும் சகல தரப்பினரும் ஒத்துழைக்குமாறும் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல்; கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை சிறையில் அரசியல் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த சமயம்; படுகொலை செய்யப்பட்ட டெல்ருக்சனின் நினைவு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தில் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளதாக அருட்தந்தை எஸ்.ஆர்.வி.பி.மங்களராஜா தெரிவித்துள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு
அருட்தந்தை மா. சக்திவேல் 0777663545

அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் வடக்கு மாகாண செயலணியின் நிர்வாகக்குழு சார்பாக – அருட்தந்தை எஸ்.ஆர்.வி.பி மங்களராஜா (தலைவர், சமாதானத்திற்கும் நீதிக்குமான ஆணைக்குழு), தர்மலிங்கம் சிறிபிரகாஸ், நிருபா குணசேகரலிங்கம்,த. இன்பநாயகம், நிர்மலா, …. ஆகியோர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*