சற்று முன்
Home / செய்திகள் / ஹபாயா விடயத்தில் முஸ்லிம் மக்களை நெருக்கடிக்குள் தள்ள முயன்றால் தக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் – அஸ்மின் ஆவேசம்

ஹபாயா விடயத்தில் முஸ்லிம் மக்களை நெருக்கடிக்குள் தள்ள முயன்றால் தக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் – அஸ்மின் ஆவேசம்

ஹபாயா விடயத்தில் முஸ்லிம் மக்களை நெருக்கடிக்குள் தள்ள முயன்றால் தக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் தெரிவித்துள்ளார்.

ஹபாயா விடயம் தொடர்பில் விஷேட ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அவர் அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியைகள் ஹபாயா அணியக்கூடாது என இந்துக்கல்லூரி சமூகம் கேட்டுக்கொண்டதும், பின்னர் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதும் யாவரும் அறிந்ததே, அதனைத் தொடர்ந்து சண்முகா இந்துக் கல்லூரியின் நிலைமைகளை ஆராய்ந்து, அங்கிருக்கும் மக்களின் விருப்பிற்கமைய ஹபாயா அணியும் விடயத்தில் முஸ்லிம் பெருந்தன்மையோடும் விட்டுக்கொடுப்போடும் செயற்படவேண்டும் என்று நான் கருத்துத் தெரிவித்திருந்தேன். மேற்படிக் கருத்தானது முஸ்லிம் மக்களினால் பரவலான விமரசனத்திற்கும் உட்பட்டிருந்தது.

இருந்தபோதும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை முன்னிறுத்தி சண்முகா இந்துக் கல்லூரியின் மரபுகளுக்கு மதிப்பளித்து ஹிஜாப் என்னும் முஸ்லிம் பெண்களின் மறைத்தலுக்கான உரிமையில் கை வைக்காது; ஹபாயா என்னும் ஒருவகை ஆடைகளை குறித்த பாடசாலையில் மாத்திரம் தவிர்ப்பது சிறப்பானது என்பதே எமது நிலைப்பாடாக இருந்தது.

ஆனால் இச்சம்பவத்தைத் தொடர்ந்து; திருகோணமலை கோணேஸ்வரா கல்லூரியிலும் கல்வி கற்பிக்கும் ஒரேயொரு முஸ்லிம் ஆசிரியருக்கும் ஹபாயா அணியாது வருமாறு அப்பாடசாலையின் அதிபர் ஆலோசனை வழங்கியதாகவும், இன்றைய தினம் குறித்த ஆசிரியையின் தகப்பனாரோடு இதுகுறித்து கலந்துபேசவுள்ளதாகவும் குறித்த பாடசாலையின் அதிபரைத் தொடர்புகொண்டு கேட்டபோது அறியக் கிடைத்தது.

இவ்வாறான நடவடிக்கைகள் ஆரோக்கியமானவையல்ல; சாதாரண ஒரு மனிதனின் ஆடை சார்ந்த உரிமைகளைக் கட்டுப்படுத்துவதே மனித உரிமை மீறலாக இந்த நாட்டின் பொதுவான சட்டங்கள் கூறிக்கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில், மதம் கலாசாரம் என்பவற்றைக் காரணம் காட்டி பொதுவான இடங்களிலும் ஆடை உரிமைகளில் தலையீடு செய்வது நாகரீகமான மனித செயற்படாக இருக்காது. சண்முகா இந்துக் கல்லூரியில் ஒரு விதிவிலக்காக நாம் குறிப்பிட்ட நிலைப்பாடு எல்லா பாடசாலைகளுக்கும் பொதுவானதாக ஏற்றுக்கொள்ள முடியாது; அவ்வாறு இதனைப் பொதுமைப்படுத்த எவரேனும் முயற்சித்தால் அவர்கள் சட்டத்தின் முன்னிறுத்தப்படுவார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களோடு இது குறித்துப் பேசப்பட்டுள்ளது; அவர்கள் எல்லோருமே முஸ்லிம் மக்களின் ஆடை விவகாரத்தில் இருக்கும் அடிப்படை உரிமைகள் பேணப்படுவது உறுதி செய்யப்படல்வேண்டும், என்ற நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்கின்ற பட்சத்தில் இதுகுறித்து நாம் எமது நிலைப்பாடுகளை மீள்பரிசீலனை செய்வதற்கும், சட்டரீதியாக இவற்றை அணுகுவதற்கும் தேவையேற்படும். அதுமாத்திரமன்றி இதுவிடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முழுமையான ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படும். என வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்கள் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com