வைகோவின் தாயார் உடல் நலக் குறைவால் காலமானார் – சனிக்கிழமை இறுதிச்சடங்கு!

வைகோவின் தாயார் உடல் நலக் குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 98. 

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின்  தாயார் மாரியம்மாள் உடல் நலக் குறைவு காரணமாக பாளையங்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலன் அளிக்காமல் அவரது உயிர் இன்று காலை 9.15 மணியளவில் பிரிந்தது.
இவருக்கு வைகோ, வை.ரவிச்சந்திரன் என்ற 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் இவர், கலிங்கப்பட்டியில் நடந்த மது ஒழிப்பு போராட்டத்தை முன்னெடுத்து நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை உடல் அடக்கம்
இது தொடர்பாக மதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ” மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் தாயார் மாரியம்மாள் இன்று (6.11.2015) காலை 9.05 மணிக்கு திருநெல்வேலியில் இயற்கை எய்தினார். அன்னாருக்கு வயது 98.  

நுரையீரல் சளியால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக நேற்று மாலை தனியார்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், இன்று காலை ஏழு மணி வரையிலும் நல்ல நினைவுடன் இருந்தார். டெல்லியில் இருந்து நேற்று இரவு விமானத்தில் சென்னை வந்து சேர்ந்த வைகோ அவர்கள், இன்று காலை விமானத்தில் தூத்துக்குடிக்குப் புறப்பட்டுச் சென்றார். திருநெல்வேலிக்கு வைகோ வருகின்ற தகவலை அவரது தம்பி ரவிச்சந்திரன் தாயாரிடம் தெரிவித்து இருக்கின்றார். 

திடீரென, காலை 9.05 மணி அளவில் அமைதியாக அவர் உயிர் பிரிந்தது.
மாரியம்மாள் என்ற பெயருக்கு ஏற்ப, கலிங்கப்பட்டி இல்லத்திற்கு  வருகை தருகின்ற அனைவருக்கும் வாரிவாரி உணவு அளித்துப் பசியாற்றி, பண்பின் இருப்பிடமாகத் திகழ்ந்தார். அரசியல் களத்தில் வைகோவுக்குப் பக்கபலமாக இருந்தார்.  சோதனைகள் சூழ்ந்த வேளைகளில் எல்லாம் ஆறுதலும் தேறுதலும் தந்தார். எதற்கும் அஞ்சாத மன உறுதி படைத்தவர் மாரியம்மாள்.

இலங்கையில் இந்திய ராணுவத்தை எதிர்த்து விடுதலைப்புலிகள் களத்தில் நின்றபோது, காயம்பட்டுக் கை, கால்களை இழந்து, குற்றுயிராய் வந்து சேர்ந்த 37  விடுதலைப்புலிகளைக் கலிங்கப்பட்டி இல்லத்தில் ஓராண்டுக்கும் மேலாக வைத்துப் பராமரித்து உணவு அளித்துப் பாசம் காட்டிப் பாதுகாத்தவர் மாரியம்மாள்.

பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டபோது கலிங்கப்பட்டி வீட்டைச் சோதனையிட வந்த காவல்துறையினர், தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரனின் படத்தைக் கழற்றியபோது, ‘அந்தப் படத்தை ஏன் எடுக்கின்றீர்கள்? ‘அந்தப் பிள்ளையும் என் மகன்தான். அதைக் கழற்றாதீர்கள்’ என்று சொல்லித் தடுத்தார்.

செண்பகவல்லி அணைக்கட்டைப் புதுப்பிக்கக் கோரி வாசுதேவநல்லூரில் வைகோ தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதம், சங்கரன்கோவில், கோவில்பட்டி, திருநெல்வேலி, கலிங்கப்பட்டியில் நடைபெற்ற பல்வேறு அறப்போராட்டங்கள் உண்ணாவிரதங்கள் அனைத்திலும் முன்வரிசையில் பங்கேற்றவர். உடல் நோயையும் பொருட்படுத்தாமல், சொட்டுத் தண்ணீரும் பருகாமல் உறுதியை வெளிப்படுத்தினார்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் வைகோ தோல்விச் செய்தி கேட்டுக் கிராமத்துப்  பெண்கள் அழுதபோது, ‘ஓட்டுக்குப் பணம் கொடுத்தார்கள்; அதனால் என் மகன் ஜெயிப்பது கஷ்டம் என்று எனக்கு முன்பே தெரியும்’ அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.   

பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்துக் கலிங்கப்பட்டியில் பெண்களைத் திரட்டி உண்ணாவிரதம் இருந்தார். 

சசிபெருமாள் மறைவுச் செய்தி கேட்டவுடன் வீட்டில் இருந்து புறப்பட்டு, கலிங்கப்பட்டி மதுக்கடையை இழுத்து மூட வேண்டும் எனப் போராட்டக்களத்திற்குத் தாமாகவே வந்து நடுத்தெருவில் அமர்ந்தார். செய்தி அறிந்து வைகோ அங்கே சென்றார். போராட்டம் வெடித்தது. கலிங்கப்பட்டி மதுக்கடை மூடப்பட்டது. தமிழகம் எங்கும் பெண்கள் களத்திற்கு வந்தனர். மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் வலுத்தது.  

மாரியம்மாள் இறுதி நிகழ்வுகள், நாளை காலை (7.11.2015) காலை 11 மணி அளவில் கலிங்கப்பட்டியில் நடைபெறும்” எனக் கூறப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com