வேகமாக பரவும் ‘ஜிகா’ வைரஸ்… சர்வதேச அவசர நிலை பிரகடனம்!

 ‘ஜிகா’ வைரஸ் வேகமாக பரவிவரும் சூழ்நிலையில், உலக சுகாதார நிறுவனம் (WHO) சர்வதேச அவசர நிலையை அறிவித்து உள்ளது.
டெங்கு, சிக்குன்குனியாவைத் தொடர்ந்து, கொசுக்கடியால் புதிய கிருமி தொற்றி வருவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்த கிருமியின் பெயர் ‘ஜிகா’ வைரஸ். இந்த வைரஸ் முதன்முதலில் 1947–ம் ஆண்டு உகாண்டாவில் உள்ள ஜிகா (Zika) என்ற காட்டில் குரங்குகளை தாக்கியபோதுதான், இந்த கிருமி பற்றி தெரிய வந்தது. பிறகு, 1952–ம் ஆண்டு உகாண்டாவிலும், டான்சானியாவிலும் மனிதர்களையும் தாக்கியது. சமீபகாலத்தில், 2007 மற்றும் 2013–ம் ஆண்டுகளில், பசிபிக் நாடுகளில் ‘ஜிகா’ வைரஸ் தாக்கியது.
அதையடுத்து, கடந்த ஆண்டு அமெரிக்க நாடுகளான பிரேசில் மற்றும் கொலம்பியாவிலும், ஆப்பிரிக்காவிலும் அக்கிருமி தாக்கியது. 13 அமெரிக்க நாடுகளில் இதன் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. பிரேசில் நாட்டில் கடந்த சில மாதங்களில், எண்ணற்ற குழந்தைகள் உடல் குறைபாடுடன் பிறந்து வருகின்றன. சிறிய தலையுடனும், மூளை பாதிப்புடனும் பிறந்துள்ளன. 3,500 குழந்தைகள் இதுபோல் பிறந்திருப்பதால், இதற்கும், ‘ஜிகா’ வைரசுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

‘ஜிகா’ வைரஸ், அமெரிக்கா முழுவதும் பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது. உலகம் முழுவதும் பரவக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இந்த கிருமி தாக்கியவர்கள், இதுவரை குணமானது இல்லை. இதற்கு தடுப்பூசியும் கிடையாது. இந்தியாவில், இக்கிருமி தாக்கியதாக இதுவரை எந்த செய்தியும் இல்லை.
இந்நிலையில், உலக சுகாதார மையத்தின் அவசரக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு, ஜிகா வைரஸ் காரணமாக சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனம் செய்தது உலக சுகாதார நிறுவனம்.

கடந்த 2007-ம் ஆண்டு முதல் இதுவரை காய்ச்சல், எபோலா மற்றும் போலியோ காரணமாக மூன்று முறை சர்வதேச அவசர நிலையை சுகாதார மையம் பிரகடனம் செய்துள்ளது. தற்போது, ஜிகா வைரஸ் காரணமாக 4-வது முறையாக அவசநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து உலக சுகாதார மைய பொது இயக்குநர் மார்க்ரேட் ஷான் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”ஜிகா வைரஸை கண்டறிவதிலும் அதை அழிப்பதிலும் சர்வதேச ஒத்துழைப்பு தேவை. அதே நேரத்தில், அமெரிக்காவில் அடுத்த ஆண்டுக்குள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது 4 மில்லியனை தாண்டும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. ஜிகா வைரஸ் காரணமாக பயணங்கள் மற்றும் வியாபாரங்களை தடை செய்ய தேவையில்லை.

ஜிகா வைரஸ் பாதிப்புள்ள நாடுகளுக்கு பயணம் செய்ய இருப்பவர்கள், தங்கள் குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் கொசுக்கள் கடிக்காத வண்ணம் ஆடைகளை அணிந்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஓலிம்பிக் போட்டிகள் நடைபெறவிருக்கும் நிலையில், கர்ப்பினிகளை ஜிகா வைரஸ் வேகமாக தாக்குவதால் அவர்கள் இங்கு வரவேண்டாம் என்று பிரேசில் அரசு அறிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com