வெங்காய உற்பத்தியில் யாழ் மாவட்டம் முதலிடம் – விவசாய அமைச்சர் பெருமிதம்

09

இலங்கையில் வெங்காய உற்பத்தியில் யாழ் மாவட்டமே முதலிடத்தில் உள்ளது. ஏறத்தாழ 4,200 ஹெக்டயர் பரப்பளவில் ஆண்டுதோறும் 55,000 மெற்றிக்தொன் வெங்காயம் யாழ்ப்பாணத்தில் விளைவிக்கப்படுகிறது என வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குறிப்பிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (12.05.2016) விவசாயிகளுக்கு வெங்காய விதைகள், வெங்காயக் குமிழ்கள் உட்பட நடுகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
யாழ்ப்பாண மாவட்டத்தின் விவசாய உற்பத்திகளில் வெங்காயம் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் விவசாய வருமானத்தில் புகையிலை பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தது. ஆனால், புகையிலை செய்யப்படும் பரப்பளவு இப்போது குறைந்து வருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் புகையிலை உற்பத்தியை முற்றாக நிறுத்துவதற்கும் காலஎல்லை ஒன்றை அறிவித்துள்ளார். இந்நிலையில், வெங்காய உற்பத்தியை நாம் அதிகரித்தால், புகையிலைச் செய்கையை நிறுத்துவதனால் ஏற்படும் வருமான இழப்பை ஈடுசெய்யலாம்.
வெங்காயச் செய்கையில் வெங்காயக் குமிழ்களை நடுகை செய்வதைவிட, வெங்காய விதைகளைப் பயன்படுத்துவது பொருளாதார ரீதியாக நன்மைகளைத் தரக்கூடியது. உற்பத்திச் செலவு குறைவு என்பதோடு, விதைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் வெங்காயம் கூடுதலான நோய் எதிர்ப்புச்சக்தியையும் கொண்டுள்ளது. இதனால் பீடைகொல்லிகளுக்கு நாம் செலவுசெய்யும் பணமும் மீதமாகிறது.
இதனடிப்படையிலேயே எமது விவசாய அமைச்சு இப்போது விதை வெங்காயத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து வருகிறது. விவசாயத் திணைக்களத்தின் ஊடாக வெங்காயச் செய்கையை மேற்கொள்வதற்கு வெங்காய விதைகளையும், வெங்காய விதைகளை உற்பத்தி செய்வதற்கு வெங்காயக் குமிழ்களையும் வழங்கி வருகிறோம் என்றும் தெரிவித்தார்.
யாழ் மாவட்டப் பிரதி விவசாயப் பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற நடுகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி வ.அமிர்தலிங்கம், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் பொ.மோகன், வளிமண்டலவியல் திணைக்கள சிரேஷ்ட அதிகாரி க.லோகேஸ்வரன் ஆகியோரும் விவசாயிகளும் கலந்துகொண்டிருந்தார்கள்.

01 02 03 04 05 06 07 08

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com