சற்று முன்
Home / செய்திகள் / “வீரத் தளபதி பால்ராஜ்” – கட்டுரை எழுதிய பத்திரிகையை இலக்கு வைப்பதன் பின்னணி என்ன? – மூத்த சட்டத்தரணி கேள்வி

“வீரத் தளபதி பால்ராஜ்” – கட்டுரை எழுதிய பத்திரிகையை இலக்கு வைப்பதன் பின்னணி என்ன? – மூத்த சட்டத்தரணி கேள்வி

தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் தொடர்பில் கட்டுரைகள் வெளியிட்ட தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகள் மற்றும் புலிகளின் தலைவர், தளபதிகள் பற்றி பெருமை பேசிய முன்னாள் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எழுதிய புத்தகம் ஆகியவை மீது பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நடவடிக்கை எடுக்காமல் தற்போது தமிழ் தந்தி பத்திரிகைக்கு எதிராக நவடிக்கை எடுப்பதன் பின்னணி என்ன? என்று மூத்த சட்டத்தரணி நடராஜா காண்டீபன் மன்றில் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், டெய்லி மிரர், தீபம் உள்ளிட்ட பத்திரிகைகளின் பிரதிகள், கமால் குணரத்னவின் புத்தகத்தின் ஒரு பகுதியின் பிரதி என பெருமளவு ஆவணங்களை அவர் மன்றில் முன்வைத்தார்.

தமிழ் தந்தி பத்திரிகையில் “வீரத் தளபதி பால்ராஜ்” என்ற தலைப்பில் வெளியாகிய கட்டுரையின் ஊடாக பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகவும் அதனால் அந்த ஊடகத்தின் ஆசிரியரை விசாரணைக்குட்படுத்தி மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கான உத்தரவை வழங்கக் கோரியும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரி மன்றில் முன்னிலையானார்.

பத்திரிகையின் ஆசிரியரும் அவரின் சார்பில் மூத்த சட்டத்தரணி நடராஜா காண்டீபன் உள்பட நான்கு சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகினர்.

பத்திரிகை ஆசிரியரின் சார்பில் மன்றில் சத்தியக்கூற்றை சமர்ப்பித்த மூத்த சட்டத்தரணி ந.காண்டீபன், நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தார்.

கொழும்பிலிருந்து தமிழ் தந்தி வெளிவருவதாகவும் அதன் இயக்குனர் மகாராஜா குழுமைச் சேர்ந்த சிறிரங்கா எனவும் தெரிவிக்கப்பட்டது.

“இந்த வழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி பால்ராஜ் தொடர்பான கட்டுரையை வெளியிட்ட தமிழ் தந்தி பத்திரிகைக்கு எங்கு இருந்து தகவல்மூலம் வந்தது என்பது தொடர்பில் விசாரணை நடத்தவேண்டும் என பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கோரியுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் தொடர்பில் தீபம் உள்ளிட்ட தமிழ் பத்திரிகைகளிலும் டிபிஎஸ் ஜெயராஜ் எழுதிய தொடர் சில வாரங்களாக டெய்லிமிரர் பத்திரிகையிலும் வெளிவந்த்து.

அத்துடன், புலிகளின் தலைவர், தளபதிகள் தலை வணங்காதவர்கள. என முன்னாள் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எழுதிய புத்தகத்தில் அந்த இயக்கம் தொடர்பில் பெருமை பேசியுள்ளார்.

அத்துடன் கூகுளில் சென்று தேடல் நட்டதினார் பால்ராஜ் உள்பட விடுதலைப் புலிகள் அமைப்புத் தொடர்பில் பல தகவல்கள் கிடைக்கும்.

இவ்வாறு பல ஊடகங்கள் மற்றும் இராணுவ அதிகாரியின் புத்தகத்தில் உள்ள விடயங்கள் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நடவடிக்கை எடுக்காமல் தற்போது தமிழ் தந்தி பத்திரிகைக்கு எதிராக நவடிக்கை எடுப்பதன் பின்னணி என்ன?

எனவே கொழும்பிலிருந்து வெளியாகும் பத்திரிகைக்கு யாழ்ப்பாண நீதிமன்றில் வழக்கை தாக்கல் செய்து அந்தப் பத்திரிகையை இலக்கு வைப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது” என்று மூத்த சட்டத்தரணி நடராஜா காண்டீபன் மன்றுரைத்தார்.

கடந்த வாரம் மன்றில் நகர்த்தல் பத்திரம் அணைத்து வழக்கை விசாரணைக்கு எடுத்த மூத்த சட்டத்தரணி காண்டீபன், தமிழ் தந்திக்கு எதிராக இந்த வழக்கை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் தாக்கல் செய்வதன் பின்னணியில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளார் என்று மன்றுரைத்தார்.

அவருக்கு ஆடம்பர வீடு வழங்கப்பட்டமை தொடர்பில் தமது கட்சிக்காரரின் பத்திரிகை வெளியிட்டது என்றும் அதனால் பழிவாங்கும் நோக்குடன் அவர் இந்த நடவடிக்கை எடுத்திருப்பார் என்று சந்தேகமுள்ளதாகத் தெரிவித்திருந்தார். எனினும் இன்று அதனைத் தெரிவிக்கவில்லை.

“இந்த நீதிமன்றின் அனுமதியுடன் பத்திரிகை ஆசிரியரை வாக்குமூலம் பெறுவதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைத்த போதும் அவர் வரவில்லை. அதனால் எமது விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க அவர் மறுப்பதால் இந்த மன்றில் பத்திரிகை ஆசிரியரை வரும் 26ஆம் திகதி முற்படுத்தி விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும்” என்று பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரி மன்றில் விண்ணப்பம் செய்தார்.

இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், நிரந்தர நீதிவான் முன்னிலையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் விண்ணப்பத்தை முன்வைக்குமாறு உத்தரவிட்டு வழக்கை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com