வீட்டுச் சின்னத்தில் இனி தேர்தல் இல்லை !!

விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உரிமைகோர  சுமந்திரனுக்கோ தமிழரசுக் கட்சிக்கோ  உரித்தில்லை எனத் தெரிவித்திருக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை மக்கள் முன்னணி தலைவர் க.சுரேஸ்பிறேமச்சந்திரன் இனிவருங்காலங்களினில் தமிழரசுக்கட்சியின் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதென்ற பேச்சிற்கே இடமில்லையெனவும் தெரிவித்திருக்கிறார்.

அதற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதாக அர்த்தப்படமாட்டாது எனக் குறிப்பிட்டிருக்கும் அவர்
கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி,தமிழீழ விடுதலை இயக்கம்,அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணி என்பவையே இருந்தன என்றும் எனினும் சில முரண்பாடுகளால் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணி என்பவை வெளியேறியதாகவும் குறிப்பிட்டார்.

இன்று சனிக்கிழமை (04) யாழ்.ஊடக அமையத்தில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்துரைத்த அவர்,

தமிழரசுக்கட்சியும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகமும் இடையில் வந்து சேர்ந்துகொண்ட கட்சிகள்.
அவ்வகையில் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி, மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் என்பவை மட்டுமே ஆரம்பித்திலிருந்து கூட்டமைப்பினிலிருந்தமையினை இடையில் அரசியலுக்கு வந்த கற்றுக்குட்டிகள் புரிந்துகொள்ளவேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழரசுக்கட்சியுடன் இணைந்து செயற்படுவது பற்றியே நாம் தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்கவேண்டியேற்பட்டிருப்பதாக தெரிவித்தார். இனிமேலும் தமிழ் மக்களது ஆணையினை புறந்தள்ளி செயற்படும் தமிழரசுக்கட்சியுடன் இணைந்து செயற்படுவது எமது மக்களது ஆணைக்கு எதிராக இழைக்கும் துரோகமிழைக்க நாம் தயாரில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றி இடையினில் புதிதாக அரசியலுக்கு வந்தவர்கள் தெரியாதிருந்தால் அவற்றினை கேட்டறிந்து கருத்து தெரிவிப்பது நல்லதென எம்.ஏ.சுமந்திரனிற்கு அவர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலை தனது கட்சி நிலைப்பாட்டுடன் ஒத்த நிலைப்பாட்டினை கொண்ட தரப்புடன் இணைந்து எதிர்கொள்ள தயாராக இருக்குமெனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com