சற்று முன்
Home / செய்திகள் / “வீட்டுக்குள் விசப்பாம்பு” – கண்டி மாநாட்டில் கதறிய ஞானசாரர்

“வீட்டுக்குள் விசப்பாம்பு” – கண்டி மாநாட்டில் கதறிய ஞானசாரர்

“சிங்களவர்கள்தான் வரலாறு கட்டியெழுப்பிய இனம். சிங்கள அரசை அமைப்போம். நாடாளுமன்றத்தில் சிங்களவர்கள் கோலோச்சும் நிலையை ஏற்படுத்துவோம். சிங்களவர்கள் முதுகெலும்புடன் இருக்க வேண்டும்” என்று பொதுபல சேன அமைப்பின் பொதுச் செயலாளர் அத்தே கலாகொட ஞானசார தேரர் தெரிவித்தார்.

கண்டியில் இன்று பிற்பகல் நடந்த பிக்குகளின் மாநாட்டிலேயே அவர் இந்த இனவாதக் கருத்தை வெளியிட்டார்.
சிங்களவர்கள் சிங்களவர்களாக இருக்கவைக்க எமக்கு அரசியல் அதிகாரம் வேண்டும் .அதற்காக பாடுபட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

மதரீதியாக முஸ்லிம்கள் எவ்வளவு மாறியிருக்கிறார்கள் என்பதை அண்மைய தாக்குதல்களில் அறிந்துகொண்டோம். கடந்த காலங்களில்விட்ட எச்சரிக்கைகளை பற்றி பேசாமல் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஒழிக்க நாம் செயற்படவேண்டும்.

இன்று ஒரு பக்கம் சோபா உடன்படிக்கையால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மறுபக்கம் பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் செயற்பாடு, இன்னொருபக்கம் பலம்வாய்ந்த உலக நாடுகளின் புலனாய்வுச் சேவைகள் நமது நாட்டை கூறுபோட செயற்படுகின்றன.

இது சிங்களவர்களின் நாடு. தமிழர்கள் இதனால் கோபிக்க கூடாது. எல்லாவற்றுக்கும் போல நாட்டுக்கு ஒரு சொந்தக்காரன் இருக்க வேண்டும். நாங்கள்தான் வரலாறு கட்டியெழுப்பிய இனம். நாங்கள் கள்ளத்தோணி அல்ல. உலகில் சிறுபான்மை என்றாலும் நாங்கள் கௌரவமான இனம்.

இன்று எமது வீட்டிற்குள் விசப் பாம்பு வந்துவிட்டது. வீட்டிற்குள் இருக்கும் பாம்பை நாங்கள் வெளியேற்ற வேண்டும். அதில் வீட்டுக்குள் எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 8 ஆயிரம் பேர் வரை உலகில் கொல்லப்பட்டுள்ளனர்.அப்படியான அடிப்படைவாதம் இது.

நாம் உலமா சபையுடன் கவனமாக இருக்க வேண்டும். உலமாக்களுடன் பேசுவதை அரச தலைவர்கள் நிறுத்த வேண்டும். சுபி முஸ்லிம்கள் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டு அவர்களுடன் பேச வேண்டும். அல் தக்கியா என்ற போர்வையில் உலமா சபை செயற்படுகிறது.

உலமா சபைக்கு இன்று பயங்கரவாதத்துடன் தொடர்புள்ளது. அவர்கள் இந்தோனேசியா , மலேசியா , இந்தியா போன்ற நாடுகளில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் உள்ளனர். 4 அமைப்புக்களுடன் தொடர்பில் உள்ளனர்.இங்கே 40 வகையான மொழிபெயர்ப்புக்களுடன் குரான் உள்ளது. 1950ஆம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்ட ஒரு குர் ஆன் உள்ளது. அந்த குர் ஆன் ஓரங்கட்டப்பட்டுள்ளது.

அரசுக்குள்ளே அரசு , சட்டத்திற்குள்ளே சட்டம் , நீதிமன்றத்திற்கு வெளியே காதி சட்டம், வெவ்வேறான சட்டங்கள் உள்ளன. எந்த அரசு வந்தாலும் வஹாபிவாதிகள் அதில் உள்ளனர். அட்டுலுகமவில் இன்று தவ்ஹீக் ஜமாத் செயற்படுகின்றது.தலைக்கு மேலே பறந்து சென்றாலும் தலையில் கூடு கட்ட நாம் விடமாட்டோம்.

உலமாக்கள் இங்கு வெளியேறும் காலம் வெகு தொலைவில் இல்லை. இப்படியே சென்றால் நீங்கள் இங்கு இருக்க முடியாது. உலமாக்களின் கொஞ்சம் வாக்களுக்காக எமது அரசியல்வாதிகள் அலைகின்றனர்.

சிங்கள அரசை அமைப்போம். சிங்களவர்கள் விரும்பும் அரசை ஏற்படுத்துவோம். நாடாளுமன்றத்தில் சிங்களவர்கள் கோலோச்சும் நிலையை ஏற்படுத்துவோம். சிங்களவர்கள் முதுகெலும்புடன் இருக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் இருக்கும் 225 பேரில் குற்றம் செய்யாதவர்களையே அதிகம் காண முடிகிறது. இனத்துக்கு தலைமை வழங்கக் கூடிய ஒரு அரசியல் கலப்பற்ற தலைவன் எமக்கு வேண்டும். ஜனநாயகத்தின் காப்பரணான நாடாளுமன்றத்தில் செயற்படும் ஒருவரே தலைவராக இன்று தேவை. சிங்களவருக்கு ஏற்ற சட்டங்கள் தேவை. அது நமக்கான நாடாளுமன்றமாக வேண்டும்.

காவிகளின் பலத்துடன் நாம் இந்த நாட்டை வெற்றியை நோக்கி கொண்டு செல்லலாம். நாட்டில் 10 ஆயிரம் விகாரைகள் உள்ளன.7 ஆயிரம் விகாரைகளை நாம் ஒன்று சேர்த்தால் பிரிவினைகளை மறந்தால் நாம் எதிர்பார்க்கும் வாக்குகள் கிடைக்கும்.

நாங்கள் கல்வி பயின்று அனுபவத்துடன் தான் வந்துள்ளோம். எங்களால் இந்த நாட்டை நல்ல இடத்திற்கு கொண்டு செல்லலாம். 70 வருடம் இந்த நாட்டை வீணாக்கியவர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டும். ஆட்சியை கைப்பற்றுவது எமது நோக்கமல்ல. ஆனால் ஆட்சியாளர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் எமக்கு இருக்க வேண்டும் – என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com