வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி சடலமாக மீட்பு

மானிப்பாய் – ஆணைக்கோட்டை – பொன்னையா வீதிப் பகுதியில், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ஒருவர் தலையில் அடி காயங்களுடன், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (21) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், பலியானவர் 72 வயதுடைய ஜெகநாதன் சத்தியபாமா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த மூதாட்டி, உறவினர்கள் இன்றி தனது வீட்டில் தனியாக வசித்து வருகின்றார். இவர் நடக்க முடியாதவர் என்றும் வீல்ச் செயார் மற்றும் ஊன்றுகோல் பயன்படுத்தி நடப்பவர் என்றும் தெரியவந்துள்ளது.

இவரது பெறாமகன் கிளிநொச்சியில் வசித்து வருகின்றார். வழமையாக அவர் வந்து மூதாட்டியை பார்த்து விட்டுச் செல்வதுடன், இவருக்கான உணவுகளை வேறு நபர்களிடம் ஏற்பாடு செய்து கொடுப்பார்.

இதேபோன்று நேற்று மதியம் உணவு கொடுக்கும் இளைஞர் வந்து மூதாட்டியை சந்தித்து விட்டு சென்றுள்ளார்.

இரவு நேரங்களில், இந்த மூதாட்டிக்கு பாதுகாப்பாக, அவரது மைத்துனர் ஒருவர் சம்பந்தப்பட்ட வீட்டில் தங்குவது வழக்கம். இதன்படி, நேற்று இரவு 07.30 அளவில் அவர் வீட்டிக்கு வந்த போது, கதவுகள் திறக்கப்பட்டிருந்ததுடன், வீடும் விளக்குகள் ஔிரப்படாமல் இருளாக இருந்துள்ளது.

இதனையடுத்து, குறித்த வயோதிபர் மின் விளக்கை எரியவிட முற்பட்ட போது, பிரதான ஆழி நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்துள்ளதோடு, மூதாட்டியும் சடலமாக காணப்பட்டுள்ளார்.

பின்னர், அந்த வயோதிபர் உடனடியாக மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளர். இதன் பிரகாரம் சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்று விசாரணைகளை முன்னெடுத்த போது, மூதாட்டி காதில் அணிந்திருந்த தோடு மற்றும் கையில் போட்டிருந்த மோதிரம் ஆகியவற்றை காணவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மூதாட்டியின் நகைகள் காணாமல் போயுள்ளமையினால் கொள்ளைக்காக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிப்பதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com